வளமான எதிர்காலம் அவரில்! | யேசு கருணா | Sunday Reflection


ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு

I. ஆமோஸ் 8:4-7 II. 1 திமொ 2:1-8 III. லூக்கா 16:1-13

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டு வாசகங்களைச் சிந்திப்பதற்கு முன், நாம் நம் வாழ்வில் காண்கின்ற அடிப்படையான மூன்று முரண்பாடுகளைப் புரிந்துகொள்வோம்:

1.அறநெறி முரண்பாடு

'இலக்கு ஒருபோதும் வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை' என்பது முக்கியமான அறநெறிக் கோட்பாடு. எடுத்துக்காட்டாக, நான் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நல்ல இலக்கு இருக்கிறது. அதற்காக நான் புத்தகத்தைப் பார்த்து அப்படியே எழுதுகிறேன் என வைத்துக்கொள்வோம். என்னுடைய இலக்கு நல்லது என்பதற்காக நான் பயன்படுத்திய வழிமுறை சரி என்றாகிவிடாது.

ஆனால், அதே வேளையில், ஒவ்வொரு தேவையும் சூழலும்தான் ஒரு செயல் நன்மையா அல்லது கெட்டதா என்பதை நிர்ணயக்கிறது என்பது இன்னொரு அறநெறிக் கோட்பாடு. ஒரு பெண் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அறுவைச் சிகிச்சை செய்தால் குழந்தை அல்லது தாய் மட்டும்தான் பிழைப்பார் என்ற நிலை. அந்தப் பெண் அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாய். மேலும், அண்மையில் தன் கணவனை விபத்தில் இழந்தவள். இந்த நேரத்தில் மருத்துவர் குழந்தை இறந்தாலும் பரவாயில்லை என்று தாயைக் காப்பாற்றுகிறார். அப்படிச் செய்ததால் அவர் கொலையாளி என்று நாம் சொல்வதில்லை. ஏற்கெனவே இருக்கும் குழந்தைகள் அநாதைகளாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் தாயைக் காப்பாற்ற முன்வருகிறார். ஆக, அவருடைய செயலில் ஒரு குழந்தை பலியானாலும் அவருடைய செயல் நியாயமானதே என்கிறது அறநெறி. இது 'சிட்வேஷன் எதிக்ஸ்' - ஒவ்வொரு சூழலும் அறநெறியை நிர்ணயிக்கும்.

மேற்காணும் இரண்டு அறநெறிக் கோட்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த முரண்பாடு வருகிறது.

ஒரு வீட்டுப் பொறுப்பாளர் நேர்மையற்றவராக இருக்கிறார். அவர் வெளியே அனுப்பப்படுகின்ற நிலையில், தன் நேர்மையற்ற நிலையில், நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்கிறார். இயேசு இவரின் முன்மதியைப் பாராட்டுகின்றார். அப்படி என்றால், இலக்கு சரியானது என்பதற்காக அவர் பயன்படுத்துகின்ற வழிமுறை சரியானதா? என்ற கேள்வி நம்மில் எழுகிறது. அல்லது அந்த நேரத்தில் அந்தச் சூழல் அவர் செய்தது சரி? என்று ஏற்றுக்கொள்வதா?

'பொய்சாட்சி சொல்லாதே!' 'பிறரை ஏமாற்றாதே!' போன்ற விவிலிய சிந்தனையோடு இதை எப்படி தொடர்புபடுத்துவது?

2. வாழ்வியல் முரண்பாடு

'நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்!' என்று சொல்லும் இயேசு, 'அடுத்து என்ன நடக்கும் எனக் கலங்காதீர்கள்' என்று அறிவுறுத்தும் இயேசு, பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டில், 'எதிர்காலத்திற்கு தயராக இருக்காத பெண்கள் அறிவிலிகள்' என்று சாடுகின்றார். அப்படி என்றால், எதிர்காலம் பற்றிய கவலை இன்றி வாழ்வதா? அல்லது எதிர்காலத்திற்கான தயாரிப்போடு வாழ்வதா?

காலத்தைப் பற்றிய உணர்வைக் கடவுள் மனிதர்களுக்கு மட்டுமே கொடுத்திருக்கின்றார் என்று பெருமிதம் கொள்கிறார் சபை உரையாளர் (காண். 3). மனிதர்களுக்குக் கொடையாக இருக்கின்ற இந்த உணர்வே பல நேரங்களில் அவர்களுக்கு சுமையாகவும் மாறிவிடுகின்றது. என்னுடைய எதிர்காலம் இப்படி இருக்கும் என எண்ணுகின்ற நான், அந்த எதிர்காலத்தில் வாழ்வதற்காக என்னுடைய நிகழ்காலத்தை அன்றாடம் தியாகம் செய்கிறேன் அல்லது வாழ்வைத் தள்ளிப் போடுகிறேன் என்பது அடுத்த முரண்பாடு.

அப்படி என்றால், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதா? அல்லது எதிர்காலத்திற்காக முன்னரே தயாரிப்பதா?

3. பொருளாதார முரண்பாடு

'அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்கிறார் வள்ளுவர். 'நீ ஏழையாக இருந்தால் நீ மற்றவர்களை அறிவாய். பணக்காரராக இருந்தால் மற்றவர்கள் உன்னை அறிவர்' என்கிறார் ஷேக்ஸ்பியர். செல்வம் நமக்குத் தேவையா? இல்லையா? தேவை என்றால் எவ்வளவு தேவை? இன்று மேலாண்மையியலில் எண்கள் பற்றிய படிப்பு அதிகமாகிக்கொண்டு வருகிறது. நம்மிடம் இருக்கின்ற ஆதாரங்கள் நான்கு: 'பணம்,' 'நேரம்,' 'உடல்நலம்,' மற்றும் 'உறவுகள்.' இந்த நான்கில் பணமும் நேரமும் எண்களால் ஆனவை. எண்களால் எண்ணப்படும் ஒன்றில் ஒருவர் பிரமாணிக்கமாக இருந்தால் எண்ணப்படாத அல்லது எண்ணமுடியாதவற்றிலும் பிரமாணிக்கமாய் இருப்பார் என்பது மேலாண்மையியல் பாடம். இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, 'சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் மிகப் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவர்' என்கிறார்.

இன்று நான் தேவையான பணத்தை வைத்திருக்கவில்லை என்றால் என்னுடைய மற்ற எல்லா செயல்பாடுகளும் முடங்கிப் போகும். ஆக, பணம் எனக்குத் தேவை. இது ஒரு பக்கம் என்னை இழுக்க, மற்றொரு பக்கம், 'கடவுளுடைய பராமரிப்புச் செயலின்மேல் நம்பிக்கை அவசியம்' என்ற எண்ணம் என்னை இழுக்கிறது.

செல்வம் வைத்துக்கொள்வதா? வேண்டாமா? - இது மூன்றாவது முரண்பாடு.

இந்த முரண்பாடுகள் இறுதிவரை இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், இந்த முரண்பாடுகள் நடுவில் நம்முடைய வாழ்க்கைச் சக்கரத்தை எப்படி நடத்திக்கொண்டு போவது?

இதற்கு விடையைத் தருகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

'வளமான எதிர்காலம் அவரில்' என்ற எளிதான பதிலை இது நமக்கு முன்வைக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். ஆமோ 8:4-7) இறைவாக்கினர் ஆமோஸ் வடக்கு இஸ்ரயேலில் இறைவாக்குரைக்கின்றார். அந்த நேரம் இஸ்ரயேல் மிகவும் வளமிக்க நாடாக இருந்தது (கிமு 722). வலிமையான, வளமிக்க நாடாக அது இருந்தாலும் அந்த நாட்டில் நிறைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அடக்குமுறைகளும் இருந்தன. விவசாயத் தொழில் செய்துவந்த அடித்தட்ட வகுப்பினர் மிகப்பெரிய அடக்குமுறைக்கு ஆளானார்கள். பணக்காரர்களும், செல்வந்தர்களும், ஆளும் வர்க்கத்தினரும் அவர்கள்மேல் தூக்க முடியாத சுமையைச் சுமத்தினர். இவர்களுக்கு எதிராக ஆமோஸ் இறைவாக்குரைக்கின்றார்: 'வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே! கேளுங்கள்!' மேலும், 'அமாவாசை எப்போது முடியும், ஓய்வுநாள் எப்போது முடியும்' என்ற அவர்களுடைய சமய வெளிவேடத்தையும் தோலுரிக்கின்றார். அமாவசையும் ஓய்வுநாளும் பொருளாதாரப் பண்டமாற்றைத் தடை செய்தன. இவை இரண்டும் முடிந்தால்தான் பொருளாதாரப் பரிவர்த்தனை தொடரும் என்று அவர்கள் எதிர்நோக்கினர். அடக்கி ஆண்டவர்கள் தங்களுடைய சமயக் கட்டளைகளைக் கடைப்பிடித்தாலும் அவர்கள் தங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கத் திட்டங்கள் தீட்டினர். பணவீக்கத்தை அதிகப்படுத்தி இன்னும் நிறையப் பொருள் ஈட்டவும், ஏழைகளை அடிமைகளாக மாற்றவும் திட்டங்கள் வகுத்தனர்.

இவர்களின் இத்திட்டங்கள் மோசேயின் சட்டங்களுக்கு எதிரானவை (காண். இச 10:14-22, 24:19-21) என்று சுட்டிக்காட்டுகின்ற ஆமோஸ் அவர்கள் செய்வது அநீதி என்று அவர்களைச் சாடுகின்றார். இப்படி அநீதியாக அவர்கள் செயல்படுவது அவர்களுடைய நாட்டிற்கே அழிவைக் கொண்டுவரும் என எச்சரிக்கின்றார். அது விரைவில் நிறைவேறுகிறது. ஆமோஸ் இறைவாக்கினரின் இறைவாக்குப் பணி முடியும் நாள்களில் இஸ்ரயேல் நாட்டின் வளம் திடீரெனக் குறைந்து அவர்கள அசீரியாவுக்கு அடிமைகளாகின்றனர்.

ஆமோஸின் இறைவாக்கு அவரின் சமகாலத்து பணக்கார மற்றும் ஆதிக்க வர்க்கம் செய்வது மடமை என்று எச்சரிக்கை செய்கிறது. மேலும், தங்களுடைய சகோதர சகோதரிகளை அடக்கி ஆண்டு அதன் வழியாகப் பணம் சேர்ப்பது முறையன்று. இப்படிச் செய்யும்போது அவர்கள் கடவுளின் சட்டத்தை மீறுகின்றனர். கடவுளின் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்தான் வளமான எதிர்காலம் இருக்கிறதே தவிர, வலுவற்றவர்களை அழிப்பதில் அல்ல என்கிறார் ஆமோஸ்.

இன்றைய இரண்டாம் வாசகத்தின் (காண். 1 திமொ 2:1-8) பின்புலம் இதுதான்: தொடக்க காலத்தில் கிறிஸ்தவ திருச்சபை சந்தேகக் கண்ணோட்டதுடன் பார்க்கப்பட்டது. அவர்களுடைய வித்தியாசமான தனிப்பட்ட வாழ்க்கை முறை, சிலுவையில் அறையுண்ட மெசியாமேல் நம்பிக்கை போன்றவற்றால் கிறிஸ்தவம் உரோமைப் பேரரசின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. கிறிஸ்தவத்தால் உலகிற்கு ஆபத்து என்றும், எதிர்கால சமூகம் அழிவுறும் என்றும் கருதியது உரோமை. இத்தவறான புரிதலை பவுலும் மற்றவர்களும் சரி செய்ய முயற்சி செய்கின்றனர். கிறிஸ்தவர்கள் அமைதியானவர்கள் என்றும், உரோமைப் பேரரசுக்குக் கட்டுப்பட்ட குடிமக்கள் என்றும், ஒட்டுமொத்த சமூகத்தின்மேல் அக்கறை கொண்டவர்கள் என்றும் எடுத்துரைக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் 1 திமொத்தேயு திருமுகத்தின் ஆசிரியர், நம்பிக்கையாளர்கள் எல்லாருக்கும் குறிப்பாக ஆட்சியில் இருப்பவர்களுக்கும் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றார்.

இயேசுவின் வழியாக எல்லாரும் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று சொல்வதன் வழியாக, அவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை ஆட்சியாளர்கள் கைகளில் அல்ல, மாறாக, இறைவனின் கரங்களில் ஒப்புவிக்கின்றனர்.

ஆக, எதிர்காலம் என்பது ஆட்சியாளர்கள் கைகளில் அல்ல என்பதை அடிக்கோடிடும் ஆசிரியர், காலங்களைத் தன் கரங்களில் தாங்கியிருக்கிற கடவுளிடம் அதை ஒப்படைக்கின்றார்.

விவிலியத்தின் வியப்பான பாடங்கள் என்று கருதப்படுகின்றன சில பாடங்கள். அவற்றில் ஒன்றை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 16:1-13) வாசிக்கின்றோம்: நேர்மையற்ற கண்காணிப்பாளர் உவமை. மேலோட்டமாக வாசித்தால், ஒருவர் நேர்மையற்றவராய் வாழ்வதிலும், கையூட்டு கொடுப்பதிலும், பொய்க்கணக்கு எழுதுவதிலும் தவறில்லை என்று சொல்வதுபோல இருக்கிறது. ஆனால், இதன் பொருள் அது அல்ல. 'அதிர்ச்சி' என்ற இலக்கியக்கூற்று இங்கே பயன்படுத்தப்பட்டு, சொல்லப்படுகின்ற செய்தி ஆழமானதாகத் தரப்படுகிறது. இந்த நிகழ்வில், நேர்மையற்ற கண்காணிப்பாளர் தன்னுடைய தவற்றை வீட்டு உரிமையாளர் கண்டுபிடித்தாலும் இன்னும் அவர் நேர்மையற்றவராகவே செயல்படுகின்றார். அவருடைய வீட்டு உரிமையாளர் அவரைத் தண்டிப்பதற்குப் பதிலாக பாராட்டுவதில்தான் அதிர்ச்சி அடங்கியுள்ளது. இந்த உவமையின் செய்தி கண்காணிப்பாளரின் செயலில் அல்ல, மாறாக, அவருடைய எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறது. தலைவர் அவருடைய செயலைப் பாராட்டவில்லை. மாறாக, தன்னுடைய எதிர்காலத்தை தன்னுடைய வசதிக்கு மாற்றிக்கொள்ளும் அவருடைய திறனைப் பாராட்டுகின்றார். நம்பிக்கையாளர்கள் தங்களுடைய செல்வத்தின்மேல் எத்தகைய கண்ணோட்டம் கொண்டிருக்க வேண்டும் என்பதை இந்த உவமை கற்றுத்தருகிறது. ஆக, அழிந்துபோகக் கூடிய, பயனற்ற செல்வத்தை ஒருவர் பயன்படுத்தி நிலையான வீட்டை வடிவமைத்துக்கொள்ள முடியும்.

லூக்கா நற்செய்தியாளர் பணத்தையும் செல்வத்தையும் நம்பிக்கை மற்றும் சீடத்துவத்தின் எதிரிகளாகவே முன்வைக்கின்றார். இந்த உவமையைச் சொல்வதன் வழியாக, ஆபத்தான நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு ஒரு நம்பிக்கையாளர் தன்னுடைய வாழ்வை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவுரை வழங்குகின்றார் இயேசு. இயேசுவைப் பொருத்தவரையில், செல்வம் ஒருவரைப் பேராசைக்கும் தனிமைக்கும் இட்டுச் சென்றால் அது ஆபத்து. ஆனால், அச்செல்வம் பிறரோடு பகிர்ந்துகொள்ளப்பட்டால், மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யப்பயன்பட்டால் அது நலம் பயக்கும். பணத்தைக் கையாளுவதும், செல்வத்தைப் பெற்றிருப்பதும் இன்றியமையாத ஒன்று என்று எண்ணுகின்ற இயேசு, தன்னுடைய சீடர்கள் இந்த நேர்மையற்ற கண்காணிப்பாளரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள அழைக்கின்றார்.

ஒருவர் எப்படிப் பணத்தைப் பயன்படுத்துகிறார் என்பது முக்கியமானது. ஏனெனில், 'சிறியவற்றில்' ஒருவர் நம்பத்தகுந்தவராய் இருந்தால்தான் 'பெரியவற்றிலும்' அவர் நம்பத்தகுந்தவராய் இருப்பார். மேலும், பணம்தான் ஒருவருக்கு அடிமையாய் இருக்க வேண்டுமே தவிர, பணத்திற்கு அவர் ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது. இதுவே ஒவ்வொரு சீடரும் மேற்கொள்ளவேண்டிய தெரிவு. எல்லாவற்றையும் கடவுளுக்குக் கீழ் கொண்டு வந்து, கடவுளை மட்டுமே ஒருவர் தெரிந்துகொள்ளும்போது, செல்வங்கள் அழிந்தாலும், அழியாத கடவுளின் பாதங்களை சீடர் பற்றிக்கொண்டிருப்பதால் அவருடைய எதிர்காலம் வளமானதாக இருக்கும்.

இவ்வாறாக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, வளமான எதிர்காலம் என்பதை பொருளாதார நீதி, சமூக அமைதி, மற்றும் செல்வத்தைப் பற்றிய சரியான பார்வை என்ற நிலைகளில் புரிந்துகொள்ள அழைக்கிறது. இம்மூன்றும் நிலைபெறுவது இறைவனில்தான் என்பதால் வளமான எதிர்காலம் என்றும் அவரில் என்பது நாம் இன்று கற்கின்ற வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது.

'வளமான எதிர்காலம் அவரில்' என்ற புரிதல் எனக்கு இருந்தால், திருப்பாடல் ஆசிரியர் போல (காண். 113) நானும், 'நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் எவர்?' என்று சொல்ல முடியும்.

'கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார். ஆனால், நீ உன் ஒட்டகத்தைக் கட்டி வை' என்பது மத்திய கிழக்குப் பகுதியில் வழங்கப்படும் பழமொழி. நம்முடைய எதிர்காலம் அவரில்தான்! இருந்தாலும் பொருளாதாரத்தை என் தேவைக்கு வளைத்துக்கொள்ளாமல் ஏழைகள் நலன் காப்பதும், எல்லாரும் அமைதியுடன் வாழ இறைவேண்டல் செய்வதும், நிலையற்ற செல்வத்தைப் பயன்படுத்தி நிலையான உறவுகளைச் சம்பாதித்துக்கொள்வதும் தேவை!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

Add new comment

4 + 12 =