அனைத்திலும் நம்பத் தகுந்தவராய் இருப்போமா! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலம், வாரம் 25 ஞாயிறு
I: ஆமோ:  8: 4-7
II: திபா:திபா 113: 1-2. 4-6. 7-8
III: 1 திமோ: 2: 1-8
III: லூக்: 16: 1-13

ஒரு பெண் வேலைக்குச் சென்றுவிட்டு வழியிலே நடந்து வீடு திரும்பும் போது சாலையிலே ஏதோ ஒரு பொருள் மின்னுவதைக் கண்டார். கையில் எடுத்து பார்த்த போது அது ஒரு தங்கச் சங்கிலி. அச்சங்கிலியை எடுத்த அப்பெண் சுற்றிலும் தேடிப் பார்த்தார் யாரேனும் இதைத் தேடிக் கொண்டிருக்கிறார்ளா என்று. யாரும் தென்படவில்லை. வீட்டிற்கு எடுத்துச் சென்ற அவர் இரண்டு வருடங்கள் வரை அச்சங்கிலியை பத்திரமாக வைத்திருந்தார்.  யாராவது தேடி வந்தால் கொடுத்து விடலாம் என்று. அதற்கு மேல் அப்பொருளை அவர் வைத்திருக்க விரும்பவில்லை. எனவே அந்த சங்கிலியை விற்று அப்பணத்தை அருகிலுள்ள மாற்றுத் திறனாளிகள் இல்லத்திலுள்ள தந்தையிடம் கொடுத்து பிள்ளைகளின் தேவைக்கு பயன்படுத்துமாறு கூறிச் சென்றார்.
இது உண்மைச் சம்பவம்.

 அந்த பெண்ணும் சற்று வசதி குறைந்தவர் தான்.நினைத்திருந்தால் அந்தச் சங்கிலியை அவர் தனக்கு சொந்தமாக்கி இருக்கலாம். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அவர் மனம் அதற்கு இடம்கொடுக்கவில்லை. காரணம் அது தன்னுடையதல்ல என்ற நேர்மையான மனம். கடவுளுக்கு முன் தான் நம்பிக்கைக்குரியவளாய் வாழ வேண்டும் என்ற மனப்பாங்கு.

அன்புக்குரியவர்களே இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் செய்தி இதுதான். சிறியது முதல் பெரியது வரை எல்லாக் காரியங்களிலும் நாம் நேர்மையாளர்களாய் நம்பிக்கைக் குரியவர்களாய் விளங்க வேண்டும் என்பதே நம் ஆண்டவர் இயேசு நமக்கு அன்றாடம் விடுக்கும் அழைப்பு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் முன்மதியோடு செயல்பட்ட பணியாளரைப் பற்றி நாம் காண்கிறோம். இயேசு அவருடைய முன்மதியைப் பாராட்டுவதாக நமக்குத் தோன்றினாலும் மறைமுகமாக அங்கே ஒரு செய்தியை நமக்குத் தருகிறார். "நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?"என்ற இயேசுவின் வார்த்தைகள் அந்த பணியாளர் நேர்மையற்ற முறையிலே செல்வத்தை சேர்த்துக்கொண்டார் என்ற சிந்தனையைத் தருகிறது. அவர் செய்த தவறுகளின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக சிலரின் கடன்களை அவர் தள்ளுபடி செய்திருக்கிறார். ஆனால் நாம் அவ்வாறு செய்யலாமா ?
நம்மை நம்பி உண்மைச் செல்வத்தை பிறர் ஒப்படைக்கின்ற அளவுக்கு நாம் நம்பத் தகுந்தவர்களாய் இருக்க வேண்டாமா?

 ஆம். அச்செல்வம் நமது வாழ்வாக இருக்கலாம். பணியாக இருக்கலாம். பொறுப்புக்களாக இருக்கலாம். பணமாக இருக்கலாம்.பதவியாக இருக்கலாம். குடும்பமாக இருக்கலாம். அவை அளவிலும் தகுதியிலும் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதைக் கையாளும் நாம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்து நாமும் பிறரும் பயனுபெறும் வண்ணம் வாழ வேண்டும். நம்பத்தாகாதவாறு நாம் நடக்கின்ற போது நாம் மகிழ்வாக வாழ்வதுபோல் தோன்றினாலும் பின்னாளில் தீய விளைவுகளை சந்திக்க நேரும். அவை நம் நிலைவாழ்வை நம்மிடமிருந்து எடுக்கக் கூடும்.இதனை உணர்ந்து நமது நம்பகத்தன்மையை சோதித்து அறிவோம். அதனை வளர்த்துக்கொள்வோம். நம்முடைய செல்வங்களையும் திறமைகளையும் நேர்மையாய் சம்பாதித்து எளியவர்களுக்கு உதவும் மனதை வளர்த்துக்கொள்ள இறையருள் பெற வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
எந்நாளும் எப்போதும் எல்லாவற்றிலும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவர் நீர் மட்டுமே இறைவா. உம்மைப் போல நாங்களும் நம்பகத் தன்மையில் நாளும் வளர வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 14 =