புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு | யேசு கருணா | Daily Reflection


புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு

I திருவெளிப்பாடு 11:9, 12:1-6, 10 II. 1 கொரிந்தியர் 15:20-26 III. லூக்கா 1:39-56

(இந்த மறையுரையானது 'லெக்ஷியோ திவினா' (Lectio Divina என்ற ஆன்மிக-இறைவழிபாட்டு முறையில் எழுதப்பட்டுள்ளது)

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது  

1. இறைவேண்டல்

'அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்.

ஓபிரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்து கேள்!

உன் இனத்தாரை மறந்துவிடு. பிறந்தகம் மறந்துவிடு.

உனது எழிலில் நாட்டங் கொள்வர் மன்னர்.

உன் தலைவர் அவரே. அவரைப் பணிந்திடு!

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள்

மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்!'

(திபா 45:9,10-11,15)

2. இறைவார்த்தை கேட்டல்

முதல் வாசகம் (திருவெளிப்பாடு 11:9, 12:1-6, 10)

பத்மு தீவில் காட்சி காண்கின்ற யோவான் வரவிருக்கின்ற ஏழு அடையாளங்கள் பற்றி எழுதுகின்றார். அவற்றில் முதல் அடையாளமே இன்றைய வாசகப் பகுதி. இதை பெரிய அடையாளம் என அவர் அழைக்கின்றார். கதிரவனை ஆடையாக அணிந்திருக்கும் பெண் இஸ்ரயேலைக் குறிக்கின்றது. ஏனெனில், விவிலியத்தில் சமய அடையாளங்கள் பெண் உருவகமாகவே கொடுக்கப்பட்டுள்ளன: ஈசபெல் - பாகால் வழிபாடு (திவெ 2:20), விலைமகள் - போலி சமயம் (திவெ 17:2), மணமகள் - கிறிஸ்துவின் திருச்சபை (19:7-8).  'கதிரவனை ஆடையாக அணிந்திருக்கும் பெண்' கத்தோலிக்க மரபில் அன்னை கன்னி மரியாள் என பல ஓவியங்களில் நாம் பார்க்கின்றோம். அன்னை கன்னி மரியாளின் பல திருவுருவங்கள் அவர் நிலவின்மேல் நிற்பவராகவும், கதிரவனின் ஒளியை ஆடையாக அணிந்திருப்பவராகவும், அவருடைய தலையைச் சுற்றி 12 விண்மீன்கள் இருப்பதாகவும் சித்தரிக்கின்றன. ஆனால், இது இஸ்ரயேலையே குறிக்கிறது. யோசேப்பு காண்கின்ற கனவில் (தொநூ 37:9-11) யாக்கோபு கதிரவனாகவும், ராகேல் நிலவாகவும், அவர்களுடைய பிள்ளைகள் பன்னிரு விண்மீன்களாகவும் உள்ளனர். மற்ற இடங்களிலும் சீயோன் அல்லது எருசலேம் அல்லது இஸ்ரயேல் பெண்ணாக உருவகிக்கப்பட்டுள்ளது (காண். எசா 54:1-6, எரே 3:20, எசே 16:8-14, ஓசே 2:19-20).

இஸ்ரயேலிடமிருந்து பிறக்கும் குழந்தை இயேசுவைக் குறிக்கிறது. இந்தக் குழந்தை இயேசுவைக் குறிப்பதால் இந்தப் பெண் அன்னை கன்னி மரியா என்றும் கூறலாம். நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒட்டுமொத்த தீமையின் உருவகமாக உள்ளது. தானியேல் 7:7-8இன் பின்புலத்தில், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் உள்ள இந்தப் பாம்பு உரோமை அரசைக் குறித்தது. இந்தக் குழந்தையை விழுங்க உரோமை அரசு துடிக்கிறது. பெண் பாலைவனத்துக்குத் தப்பி ஓடுகிறார். பாலைவனம் என்பது இங்கே இறைவன் தருகின்ற பாதுகாப்பைக் குறிக்கிறது. 1260 நாள்கள் (மூன்றரை வருடங்கள்), தானியேல் 9இன் பின்புலத்தில் இறைவாக்கு நிறைவேறும் ஆண்டைக் குறிக்கிறது. 'கடவுள் இடம் ஏற்பாடு செய்தல்' என்பது கடவுளின் பராமரிப்புச் செயலைக் காட்டுகிறது.

அரக்கப்பாம்பு தோல்வியுறுகிறது. விண்ணகத்தில் பெரியதொரு புகழ்ச்சி அல்லது வாழ்த்துப் பாடல் ஒலிக்கிறது.

இரண்டாம் வாசகம் (1 கொரிந்தியர் 15:20-26)

கொரிந்து ஒரு பணக்கார குடியேற்ற நகரம். பவுல் தன்னுடைய இரண்டாம் தூதுரைப் பயணத்தில் ஏறக்குறைய 18 மாதங்கள் இங்கே பணியாற்றினார் (காண். திப 18). கொரிந்து நகர்த் திருஅவையில் உள்ள பிரச்சினைகள் பற்றி அறிகின்ற பவுல், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க கடிதம் ஒன்றை எழுதுகின்றார். பவுலின் அதிகாரம், திருஅவையில் பிரிவுகள், பாலியல் பிறழ்வு, பரத்தைமை, சிலை வழிபாடு, அப்பம் பிட்குதல், கொடைகள் மற்றும் தனிவரங்கள் என்னும் பிரச்சினைகளின் வரிசையில், இறந்தோர் உயிர்த்தெழுதல் என்ற பிரச்சினையும் உள்ளது. முந்தையவை அனைத்தும் அறநெறி சார்ந்த பிரச்சினைகளாக இருக்க, 'இறந்தோர் உயிர்த்தெழுதல்' என்பது இறையியல் அல்லது கொள்கைசார் பிரச்சினையாக இருக்கிறது. கிறிஸ்துவின் சிலுவை மற்றும் இறப்பு பற்றித் தொடக்கத்தில் (அதி. 2) பேசுகின்ற பவுல், கிறிஸ்துவின் உயிர்ப்பு பற்றி இறுதியில் (அதி. 15) பேசுகின்றார்.

இறந்தோர் உயிர்ப்பு பற்றிய புரிதலுக்கு இரு தடைகள் இருந்தன: ஒன்று, யூத சமயத்தில் இறந்தோர் உயிர்ப்பு பற்றிய தெளிவான கருத்து இல்லை. 'ஷெயோல்' அல்லது 'பாதாளம்' என்பது இறந்தோர் வாழும் இடம் என்று கருதப்பட்டது. 'எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணினின்றே தோன்றின. எல்லாம் மண்ணுக்கே மீளும்' (காண். சஉ 3:20). ஆண்டவர் உயிர் தருவார் (காண். இச 32:39) என்ற புரிதல் பிந்தைய காலத்தில்தான் வருகின்றது. இரண்டு, கொரிந்து நகர மக்கள் பிளேட்டோவின் மெய்யியல் அறிந்தவர்களாக இருந்தனர். பிளேட்டோவின் புரிதல்படி 'உடல்-ஆன்மா' என்று இருநிலைகள் உள்ளன. இவற்றில், உடல் அழியக் கூடியது. ஆன்மா எப்போதும் உயிரோடு இருக்கக் கூடியது. அப்படி என்றால், அழியக் கூடிய உடல் எப்படி அழியாமல் உயிர்த்தெழ இயலும்? என்று அவர்கள் கேட்டனர்.

இந்தப் பின்புலத்தில் இரண்டாம் வாசகத்தைக் காண வேண்டும். ஆதாம் வழியாக இறப்பு வந்தது போல, கிறிஸ்து வழியாக இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர் என்கின்ற பவுல், சாவு அழிக்கப்பட்டவுடன் அனைத்தும் கடவுளுக்கு அடிபணியும் என்கிறார். அதாவது, இறந்தோர் உயிர்த்தல் என்பது எப்படி என்று சொல்லாமல், இறந்தோர் உயிர்த்தெழுதல் 'ஏன்' என்ற நிலையில் பதிலிறுக்கிறார் பவுல்.

நற்செய்தி வாசகம் (லூக்கா 1:39-56)

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் எலிசபெத்து கன்னி மரியாவை வாழ்த்துகிறார். இரண்டாம் பகுதியில் மரியா கடவுளைப் புகழ்ந்து பாடுகின்றார். வானதூதர் கபிரியேலிடமிருந்து இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு கேட்டவுடன் விரைவாக யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து செல்கின்றார் மரியா. மரியாவின் வாழ்த்து கேட்டவுடன் எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுகின்றார். எலிசபெத்தின் வாழ்த்துச் செய்தி தன் நோக்கி வர, மரியா, தன் வாழ்த்துச் செய்தியை இறைநோக்கித் திருப்புகின்றார். மரியாவின் புகழ்ச்சிப்பாடல் முதல் ஏற்பாட்டு அன்னாவின் பாடலோடு (காண். 1 சாமு 1-2) நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், இங்கே மரியாவின் பாடல் மூன்று நிலைகளில் கடவுளை வாழ்த்துகின்றது: ஒன்று, தனக்குக் கிடைத்த பேற்றுக்காக. இரண்டு, அவர் செய்யும் புரட்சிக்காக (புரட்டிப் போடுதலுக்காக). மூன்று, அவர் நிறைவேற்றும் வாக்குறுதிக்காக.

3. இறைவார்த்தை தியானித்தல்

இன்று நாம் அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். 'கடவுளாக மாறுவீர்கள்' என்ற பாம்பின் பொய் கேட்டு, விலக்கப்பட்ட கனி உண்ட ஏவாள் மனுக்குலத்தின் தாயாக மாறுகின்றார். 'இதோ ஆண்டவரின் அடிமை!' என்று வானதூதருக்குச் சொல்லி, மீட்பின் கனியைத் தன் வயிற்றில் தாங்கிய மரியா இறைவனின் தாயாக மாறுகின்றார்.

'நான் கடவுளைப் போல ஆவேன்!' என்று தன்னை உயர்த்தியதால் ஏவாள் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

'நான் ஆண்டவரின் அடிமை!' என்று தன்னைத் தாழ்த்தியதால் மரியா தோட்டத்திலிருந்து விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

முதல் வாசகத்தில், பெண் அரக்கப் பாம்பிடமிருந்து பாதுகாக்கப்பட்டது போல, மரியா தீமையிடமிருந்து வியத்தகு முறையில் பாதுகாக்கப்படுகின்றார். இரண்டாம் வாசகத்தில், சாவு என்னும் பகைவன் கிறிஸ்துவால் அழிக்கப்பட்டது என்பதை அடையாளப்படுத்த சாவைத் தழுவாமல் மரியா விண்ணேற்பு அடைகின்றார். நற்செய்தி வாசகத்தில் நாம் காண்பது போல, எப்போதும் தன் கண்களை விண்ணகத்தின்மேலேயே பதித்திருந்த மரியா, அந்த விண்ணகத்திற்கே எடுத்துக்கொள்ளப்படுகின்றார்.

4. இறைவார்த்தை வாழ்தல்

(அ) தீமையிடமிருந்து விலகி நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் விண்ணேற்பு அடைகின்றோம். ஆக, தீமையிலிருந்து விலகி நிற்க எண்ணுதல், மற்றும் முயற்சி செய்தல் நலம்.

(ஆ) இறப்பு என்பது நாம் எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தம். உயிர்ப்பு என்ற ஒன்றுதான் இறப்புக்கு பொருள் தருகின்றது. அந்த உயிர்ப்பை எதிர்நோக்கி வாழ்தல்.

(இ) மரியா தன் உறவினர் நோக்கி உடலிலும், தன் இறைவன் நோக்கி உள்ளத்திலும் நகர்கின்றார். நம் வாழ்விலும் இவ்விரு வகை நகர்வுகளை நமக்குப் பொருள் தருகின்றன.

5. செயல்பாடு

தன்னாய்வு: இறப்பின் காரணிகளால் நான் அலைக்கழிக்கப்படுவது ஏன்? இன்று நான் விண்ணகத்தை நோக்கிக் காண இயலாதவாறு என் பார்வையைத் தடுப்பது எது? காண்பவற்றை மட்டுமே பற்றிக்கொள்ளும் நான் அவற்றை விடுவதற்கு என்ன முயற்சிகள் செய்கின்றேன்?

இறைநோக்கிய பதிலிறுப்பு: இறைவன் தரும் பராமரிப்பையும் பாதுகாவலையும் உணர்தல்.

உலகுநோக்கிய பதிலிறுப்பு: இந்த உலகமும் உடலும் என் இயக்கத்திற்குத் தேவை. இவற்றின் துணைகொண்டே நான் விண்ணேற முடியும்.

6. இறுதிமொழி

துன்பங்கள் தாங்கும் திறன் கற்றுத்தந்தார் ஏவாள். துன்பங்கள் தாண்டும் திறன் கற்றுத்தந்தார் மரியா. தாங்கிய முன்னவர் தங்கிவிட்டார். தாண்டிய பின்னவர் விண்ணேறினார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

Add new comment

1 + 18 =