பள்ளி ஆசிரியரிலிருந்து ஃபிஃபா நடுவர் வரை!


இன்றைய உலகில் பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள் என்றாலும் சில குடும்பங்களில் பெண் குழந்தைகள் அடுப்படியில் பூட்டிதான் வைக்கப்படுகிறார்கள்.  தங்களுக்கான திறமைகளை வளர்த்துக் கொள்வதிலிருந்து தள்ளி வைக்கப்படுகிறார்கள்.  இதற்கு பல காரணங்களை நாம் கூறலாம்.   குடும்பத்தில் வருமான நெருக்கடி,  பெண் பிள்ளையை சுதந்திரமாய் வாழவிட்டால்  இந்த சமுதாயம்  என்ன கூறுமோ என்ற பயம். இதுபோல இன்னும் நிறைய காரணங்களை நாம் கூறலாம்.  எனினும் இவை அனைத்தையும் தாண்டி சாதித்த பெண்களும் இன்று இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  அவர்களில் ஒருவர்தான் ரூபா தேவி என்ற பெண்மணி. பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராய் தன் பணியை தொடங்கிய இவர், இப்போது சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFAவில் ,  தமிழகத்தின் முதல் பெண் நடுவராக தேர்வாகியுள்ளார்.

 

தமிழகத்திலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தவர் ரூபா தேவி. இவரின் கால்பந்து விளையாட்டு கனவானது, புனித சூசையப்பர் பள்ளியில், ஆறாம் வகுப்பு பயிலும்போது உதயமானது. தனது பள்ளியில் பயிலும் பிற மாணவிகள் கால்பந்து விளையாடுவதை ஒரு ஓரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ரூபா தேவிக்கு இந்த விளையாட்டின் மேல் காதல் வந்தது. விளையாட்டு பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ரூபா தேவி, சில வருடங்களிலேயே பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலுமான போட்டிகளில் விளையாட தேர்வானார்.

2006 ஆம் ஆண்டு திண்டுக்கல் கால்பந்து சம்மேளனத்தில் சேர்ந்த ரூபா தேவிக்கு அங்கிருந்து நிறைய ஆதரவுகள் கிடைத்தன.

திண்டுக்கல் GTN கல்லூரியில் வேதியியல் படித்த இவர், பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஆவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். பல்கலைக்கழகத்தில் பயிலும்போதும், நிறைய போட்டிகளில் குறிப்பாக இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்றார்.

தன் பயிற்சிகளை முடித்தவுடன், திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் உடற்கல்வி  ஆசிரியருக்கான பணி கிடைத்தது. அது தனது விளையாட்டு வாழ்வில் இடையூறாய் இருப்பதால், தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தார்.

2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் இவரின் வாழ்க்கையை மாற்றியது. 2010 ஆம் ஆண்டு தனது தாய் மாரடைப்பினால் இறந்தார். 2011 ஆம் ஆண்டு தனது தந்தை இரத்த கொதிப்பு காரணமாக இறந்தார். "எனது மிகப்பெரிய ஆதரவே எனது பெற்றோர் தான். அவர்கள் இறந்த பிறகு, நான் வீட்டில் தனி ஒரு பெண்ணாக இருந்தேன். எனது சகோதரர் வெளியூரில் வேலை செய்கிறார். சகோதரிக்கு திருமண ஆகிவிட்டது," என்று ரூபா தேவி கூறுகிறார். 

"தந்தை இறந்த பிறகு, குடும்பத்தின் வருமான சூழல் மிகவும் மோசமானது. அதனால் கால்பந்து போட்டிகளில் என்னை இன்னும் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதில் வரும் வருமானத்தை வைத்து என் வாழ்க்கையை நடத்தினேன். அது தவிர, எனது சம்மேளனமும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருந்தார்கள்," என்று ரூபா தேவி கூறினார்.

மேலும் அவர், "2010 முதல், இரண்டு ஆண்டுகளாக தேசிய அளவில் பெண்களுக்கான போட்டிகள் எதுவும் இல்லை. மூத்த நடுவர்கள், விளையாட்டு வீராங்கனையாக இருந்த என்னை நடுவராக ஆகச் சொன்னார்கள். ஒரு வேளை போட்டியில் விளையாடும் போது ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுவிட்டால் நடுவராகும் வாய்ப்பு கூட கிடைக்காது என்றார்கள்" என்று கூறினார்.

அவர்களின் அறிவுரையின்படி, ரூபா தேவி, 2012 ஆம் ஆண்டு நடுவர் (ரெபெரீ) மேம்பாட்டு பள்ளியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு, துணை ஜூனியர் மற்றும் ஜூனியர் மட்ட போட்டிகளில் நடுவராக பணியாற்றத் தொடங்கினார்.

இதன் பிறகு அவரது வாழ்வில் முன்னேற்றமே. இந்திய அளவில் பல போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். இலங்கையில் நடந்த மேற்காசிய போட்டிகளில் நடுவரில் ஒருவராகவும், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த சீனியர் பெண்கள் தேசிய போட்டிகளில் முக்கிய நடுவராகவும் இருந்தார்.

மூன்று வருடங்களுக்கு பிறகு, ஃபிஃபா  நடத்திய நடுவருக்கான தேர்வில் பங்கேற்றார். ஃபிஃபா நடத்திய போட்டிகளுக்கு நடுவராக தகுதி பெற்றார். "இது முற்றிலும் எதிர்பாராதது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த எல்லா பெயரும் புகழும் என் நண்பர்களுக்கும் என்னை ஆதரித்த சங்கங்களுக்கும் சேரும்" என்று ஆனந்தத்தில் திளைத்து நின்றார், ரூபா தேவி.

பிற விளையாட்டு மகளிர் நினைப்பது போலவே, ரூபா தேவியும், விளையாட்டில் பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகம் உருவாக்கித்தர வேண்டும் என்று விரும்புகிறார்.

விளையாட்டு நடுவராக இருப்பதோடு, ரூபா இளம் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியும் கொடுத்து வருகிறார். இளைய தலைமுறைக்கு அவர் கூறும் ஒரே ஒரு அறிவுரை: "உங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் மட்டுமே அதில் இறங்குங்கள்".

வாழ்வில் ஒரு கதவு மூடினால் வேறொரு கதவு கண்டிப்பாக திறக்கப்படும் என்பதற்கு ரூபா தேவி ஒரு நல்ல உதாரணமே!

Add new comment

9 + 6 =