கொரோனா முடக்கம் - அர்த்தமுள்ளத் தவக்காலம்

விவிலியத்தில் கடவுளின் இரக்கத்தையும் அருளையும் பெருவதற்கு சாக்குடை அணிந்து, சாம்பல் பூசி, நோன்பு இருந்து செபித்தார்கள். இயேசுவும் நாற்பது நாட்கள் தனித்திருந்து செபித்தார். திருத்தூதர்கள் தங்களை அறைக்குள் அடைத்துக்கொண்டு தனிமையில் இருந்தார்கள். புனிதர்கள் பலர் வனத்துறவுபூண்டு தனிமையில் இறைவனை தரிசித்தார்கள். இந்த பாரம்பரிய பயிற்சியின் அடிப்படையில் உருவாகியதுதான் நாம் பின்பற்றும் தவக்காலம். 

எத்தனையோ ஆண்டுகள் தவக்காலத்தை அர்த்தமுள்ள வழிகளில் கடைபிடித்து, இறையருளைப் பெற்றிருக்கின்றோம். இருந்தபோதிலும் இந்த ஆண்டு அனைவருக்கும் வித்தியாசமாகவே இருந்தது. திருவழிபாட்டு நாள்காட்டியின் அடிப்படையில் தவக்காலம் நிறைவுபெற்று இயேசுவும் உயிர்த்துவிட்டார். ஆனால் இந்த கொரோனா நோய் தொற்று முடக்கத்தில்தான் தவக்காலம் பயிற்சி என்பது எப்படியிருக்கவேண்டும் என்பதன் முன்சுவையை நாம் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் எனச் சொல்லலாம். 

அனைவரும் வீட்டில் இருக்கின்றோம். பல நேரங்களில் தனித்து இருக்கின்றோம். இறைவேண்டல் செய்கின்றோம். உலகத்தில் கஷ்டப்படுகின்ற பல மக்களின் வாழ்வு நம் கண்முன் திரையில் தெரிகின்றது. நாம் இதுவரை குறைகூறி வந்த இந்த வாழ்க்கை ஒப்பிட்டுப் பார்த்தபின், எவ்வளவு நன்மை நிறைந்தது நம் வாழ்க்கை என உணர்ந்து கடவுளுக்கு நன்றிகூறுகின்றோம். கடவுளே எங்களையும் அனைத்து மக்களையும் காப்பாற்று என வேண்டுகின்றோம்.

குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிக்கும்போது நம்முடைய குறைகளை நிறைகளைக் கண்டுபிடித்து மனம் வருந்துகிறோம். மாற்ற முயலுகின்றோம். மற்றவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களை மாற்றுகின்றோம். மனித பலவீனம் என்பது எல்லோருக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறோம். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் தருணங்களை எங்கெல்லாம் விட்டிருக்கின்றோம், எங்கெல்லாம் உருவாக்கத் தவறியிருக்கின்றோம் என்பதை உணருகின்றோம்.
மற்றவர்கள் மீது அக்கறை கொண்டு உதவ ஆரம்பித்திருக்கின்றோம். குடும்பத்திலுள்ளவர்களுக்காக நமக்கு பிடித்தவை சிலவற்றைத் தியாகம் செய்து கொண்டிருக்கின்றோம்.

இப்படி பல்வேறு வழிகளில் நம்மை பயிற்சிக்குட்படுத்தி, நல்ல மனிதர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றோம். கடவுளை நெருங்கிச் செல்கின்றோம். எனவே கொரோனா கட்டுப்பாடு என்பது நமக்கு அரிதாய் கிடைத்திருக்கும் தவக்காலம் எனக் கருதி, நம்மை புடமிடுவோம். கடவுளை நெருங்கிச் செல்வோம். அவரின் அருளாசியைப் பெற்றுக்கொள்வோம். 

Facebook: http://youtube.com/VeritasTamil

Twitter: http://twitter.com/VeritasTamil

Instagram: http://instagram.com/VeritasTamil

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil

Website: http://www.RadioVeritasTamil.org

Blog: http://tamil.rvasia.org

**for non-commercial use only**

Add new comment

11 + 0 =