மேலுமொரு வன்முறை!


அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளோய்டின் மரணத்தை அடுத்து, மற்றொரு கறுப்பினத்தவருக்கு எதிரான வன்முறை நடந்தேறியுள்ளது. அமெரிக்காவின் விஸ்காஸின் மாகாணத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரால் ஜேக்கப் பிளேக் என்ற கறுப்பினத்தவர் ஏழு முறை சுடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பின இளைஞர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து விஸ்கான்ஸின் மாகாணம் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஜேக்கப் பிளேக் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது பெண் தோழியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது வருகையை விரும்பாத அந்த பெண் தோழி காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஸ்கான்ஸின் மாகாணத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் ஜோஷ் கௌல் கூறுகையில், "தகவல் அறிந்தவுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஜாக்கோபை கைது செய்ய முயற்சித்துள்ளனர். ஒரு கட்டத்தில், அவர் மீது மின்னதிர்ச்சி மூலம் தற்காலிக பக்கவாதத்தை உண்டாக்கும் கருவியை பயன்படுத்தியுள்ளனர். அதன் பிறகு, காவல்துறை அதிகாரிகளை கடந்து தந்து காரின் கதவை திறந்த ஜாக்கோபின் பின்புறத்தில் ருஸ்டன் ஷெஸ்கி என்ற அதிகாரி ஏழு முறை துப்பாக்கிசூடை நடத்தினார்" என்று விளக்கினார்.

எனினும், சம்பவ இடத்திலிருந்த மற்ற எந்த காவல்துறை அதிகாரிகளும் ஜேக்கப் மீதி தாக்குதல் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜேக்கப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராடங்கள் நடந்து வருகின்றன. மேலும் சில இடங்களில், போராட்டம் வன்முறையாக மாறியதால் காவல்துறை வாகனங்கள், கடைகள் போன்றவை சேதத்திற்கு உள்ளாயின.

ஜார்ஜ் பிளாய்டின் மரணித்திற்கான போராட்டங்கள் ஓய்ந்த சில நாட்களிலேயே மற்றொரு கறுப்பினத்தவருக்கு எதிரான தாக்குதல் மனதை கலங்க வைக்கிறது. இவர்களுக்கான பாதுகாப்பு எப்போது கிடைக்கும்? இது போன்ற வன்முறைகள் எப்போது வேரோடு ஒழியும்?

Add new comment

1 + 0 =