முகிலன்மீது பாலியல் வல்லுறவு குற்றமா ?


scroll.in

கடந்த பிப்ரவரி 2019 இல் காணாமல் போன முகிலன் திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கபட்டதை அடுத்து, அவரை சென்னைக்கு கொண்டுவந்த தமிழக குற்றபிரிவு குற்றபுலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நேற்று சமூக வலைதளங்களில் முகிலனை திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து காவல்துறையினர் அழைத்து செல்வதாக கூறப்படும் காணொளிகள் வெளியாகின. அதனை தொடர்ந்து முகிலனை தமிழக சிபி சிஐடி அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், அவர் மீது பாலியல் வல்லுறவு வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் கூறபட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ரயில் நிலையத்தில், மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்த ஆண் நபர் ஒருவரை ரயில்வே பாதுகாப்புப்படை பிரிவினர் அப்புறப்படுத்த முயன்றபோது அவர் அங்கிருந்து விலக மறுத்ததாகவும் விசாரித்தபோது அவர் தனது பெயர் முகிலன் என்றும் வேலூர் காட்பாடிக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

"இரவு 10.30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த அந்த நபரை சிபி சிபிஐடி அதிகாரிகள் நேரடியாக பார்த்து அவர் காணாமல் போன முகிலன் தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் பின் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை எழும்பூரில் உள்ள குற்றபிரிவு குற்றபுலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். முகிலனிடம் அவர் காணாமல் போன காலக்கட்டத்தில் எங்கிருந்தார் என்பது குறித்து கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டார்" என்று கூறப்பட்டுள்ளது.

முகிலன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் வல்லுறவு புகாரில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு முகிலன் உட்படுத்தப்பட்டார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முகிலனின் மனைவி பூங்கொடி இது ஒரு பொய் குற்றச்சாட்டு என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நேற்று வெளியான காணொளியில், முகிலன் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கு எதிரான கோஷத்தை எழுப்பினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது தொடர்பாக புலனாய்வு செய்து ஒரு காணொளியை தயாரித்து யூடியூபில் வெளியிட்ட பிறகு முகிலன் பொதுவெளியில் காணப்படவில்லை.

(நன்றி: பிபிசி தமிழ்)

Add new comment

5 + 3 =