மதுரை உயர் மறைமாவட்ட திருச்சபையில் திருநங்கைகளின் பங்கேற்பு | Transgender


மதுரை உயர் மறைமாவட்டம் தன் வரலாற்றில் முதன் முறையாக திருநங்கைகள், திருச்சபையின் அனைத்து பணிகளிலும் பங்கேற்க அழைத்துள்ளது. இந்த வரலாற்று நிகழ்வானது டிசம்பர் மாதம் 12ஆம் தேதி 2021ல் மதுரை உயர் மறைமாவட்டத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மதுரை உயர் மறைமாவட்ட முதன்மைக்குரு ஜெரோம் எரோணிமுஸ் அவர்களின் தலைமையில் நொபிலி மறைப்பணி நிலைய இயக்குநர் பெனடிக்ட் பர்னபாஸ், குடும்பநலவாழ்வு பணிக்குழு செயலர் தந்தை ஜேம்ஸ் பால்ராஜ் மற்றும் பெண்கள் பணிக்குழுவின் செயலர் சகோதரி ரீட்டா இருதயம் (SCC) அவர்களின் முயற்சியோடு முதன்முறையாக மதுரை உயர் மறைமாவட்டத் திருஅவை திருநங்கைகளோடு இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது.

கூட்டொருங்கியக்கத் திரு அவையின் முக்கியமான பணியான, அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வைக்கும் தன்மையான, குறிப்பாக பெண்கள், இளையோர், விளிம்புநிலையில் உள்ளோர் (மூன்றாம் பலினத்தார் உட்பட) அனைவரையும் ஒன்றிணைத்து திரு அவை செயல்பட வேண்டும் என்ற கருத்தினை மையப்படுத்தியது.

சமுகத்தினாலும், குடும்பத்தினாலும், உற்றார் உறவினர்களாலும் ஒடுக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ள இச்சமூகத்தினருக்கு முக்கியத்துவம் பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கோடு இந்த விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டது.
சமுகத்தில் திருநங்கைகள் மதிக்கப்பட்டு அரசு சாசன பட்டியலில் அவர்கள் இடம் பெற உழைக்க வேண்டும் என்றும், திருநங்கைகள் கத்தோலிக்க திரு அவையின் எல்லா நிகழ்வுகளிலும் பங்கு பெற வேண்டும் என்று அழைப்புவிடுத்தார் மதுரை உயர் மறைமாவட்ட முதன்மைக்குரு ஜெரோம் எரோணிமுஸ்.

நமக்கு மகிழ்ச்சியளிக்கவே கிறிஸ்து பிறந்துள்ளார். நாம் ஒருவொருக்கொருவர் அன்பினையும் கரிசனையையும் வெளிப்படுத்தி உண்மையான அன்பினை பகிர்ந்து வாழ வேண்டும். மனிதர் எல்லோர்க்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியினை பெற்றுத்தரவே. எனவே எல்லோரும் எப்போதும் மகிழச்சியாக வாழுங்கள் என்று மதுரை உயர் மறைமாவட்ட நொபிலி மறைபணி நிலையத்தின் இயக்குநர் தந்தை பெனடிக்ட் பர்னபாஸ் வாழ்த்தினார்.
பல்வோரு சபைகளிலிருந்து இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து அருட்சகோதரிகளும் இங்கு கூடி வந்திருந்த 24 திருநங்கைகளுக்கும் உணவுப்பொருள்களை வழங்கி அவர்களுடைய மகிழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

மதுரை பகுதியில் வாழும் திருநங்கைகளின் தலைவியான சித்ரா அவர்கள், எங்கள் உறவினர் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு, மிகவும் ஏழ்மையில் வாழும் எங்களது உணர்வுகளை மதித்து, மறைமாவட்ட மறைபணி நிலையத்திற்கு அழைத்து, அன்பும் பாராட்டும் கொடுத்த தந்தையர்கள் மற்றும் சகோதரிகளுக்கு நன்றி என்று கூறினார். சமுகத்தில் எங்களை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக நாங்கள் தொடங்கியிருக்கும் “மதுரை டிரான்ஸ் கிச்சன்” வழியாக எங்களுக்கு பல்வோறு வழிகளில் உந்து சக்தியாக இருந்து ஆதரித்து வரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இறுதியாக, “இந்த உலகில் நாம் ஒன்றும் கொண்டு வந்ததில்லை, கொண்டு போவதுமில்லை, எனவே ஒருவரையொருவர் மதித்து வாழ்வோம்;” என்று கூறினார்.

நிகழ்வின் முடிவில், திருநங்கைகளின் நடனமும், அவர்கள் மதுரையில் ஆரம்பித்துள்ள மதுரை டிரான்ஸ கிச்சினில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவினை அன்பின் விருந்தாக உண்டு கிறிஸ்துவின் மகிழ்வினை பகிர்ந்து கொண்டனர்.

 

அருள்பணி. அன்பு செல்வம் 
மதுரை உயர் 
மறைமாவட்டம் 

Add new comment

12 + 3 =