பல 'ஷா'க்கள் சிதைக்கபடுவார்கள் | அஸ்வின்


Manisha Valmiki

கதறல் கேட்ட கதிரவனோ 
கண்மூட,
இடியாய் அவள் கூக்குரல் 
காதை கிழிக்கிறது!

மொட்டாகும் முன்பே
கசக்கி தேனெடுக்கத் துடிக்கும் 
வண்டுகள் நடுவே பெண்பூவாய்
மலர்ந்தது அவள் சாபமோ?

அண்ணனென நினைத்திருப்பாள்
அந்நாய்களை,
அடித்தவள் அடிவயிறு கிழித்த
அந்நொடிவரை..!

பிறப்பிலே தீட்டென்றவனே!
அவள் பிறப்புறுப்பை
தீண்டுகையில் அவர்கள்
தீண்டாமையும் ஒழிந்ததோ?

ஆடவன் காமத்திற்கு ஆடை
காரணமென்றவனே  அங்காங்கே 
ஐந்து வயதும் கிழிகிறதே 
அதற்கென்ன சொல்வாயோ?

முதுகெலும் பற்றவர்களின்
இந்நாட்டிலே மீதமிருந்த 
அவள் முதுகெலும்பும்
உடைக்கப்பட்டதே?

நீதியின் கண்கட்டி 
களவுசெய்த கயவர் கூட்டம்
தங்கையவள் நா வெட்டி
காமத்தை புசித்ததே?

காட்டேரியா யிருந்திருந்தால் உதிரத்தோடு
முடித்திருப்பான்,
காமப்பேயானதாலோ உயிரையே 
கொணர்ந்துவிட்டான்;

ராமனின் தேசத்தில் கசக்கப்பட்ட 
சீதையவளை,
காவல் காக்க அனுமான்கள் 
இல்லாமல் போயினரோ?

சட்டங்கள் ஆயிரமிருந்தாலும்
ஓட்டைகளில் ஒழியும் ஓநாய்கள்,
சாவடிக்கும் திட்டம் வரும்வரை 
நாறடிக்கத்தான் செய்யும்;

சதைகிழித்து சாக்கடையில் தள்ளி 
சாவடிக்காவிடில் நாள்தோறும் 
பல ஷாக்கள் சிதைக்கபடுவார்கள்
காமமதம் பிடித்த அம் மனிதபேய்களால்....

(நன்றி: அஸ்வின்)

#Ash

#JusticeForManishaValmiki

Add new comment

12 + 3 =