தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழக அரசின் அரசாணையும் | Fr. Prakash


தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழக அரசின் அரசாணையும்

பள்ளிப் பருவம் தொடங்கி பணியாற்றும் இடங்களிலும் விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை மகிழ்ந்து பாடி கொண்டாடியதை நாம்  மறக்கவே முடியாது. இந்தப் பகுதியில் தமிழ் தாய் வாழ்த்து எப்படி நம்மை வந்து சேர்ந்தது என்பதை அறிய முற்படுவோம்.

தமிழரின் தனிப் பெருமையே தங்களது தாய்மொழியாம் தமிழ். தாய்த்தமிழ் கன்னித்தமிழ் என்று வாயார ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நாம் வாழ்த்திவருகிறோம்.  எனவே இப்பேற்பட்ட தமிழைப் போற்றும் வண்ணம் தமிழ் தாய்க்கு ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று எல்லோருக்குமே ஆசையாய் இருந்தது. அந்த ஆசை நிறைவேறும் வண்ணம் நூறு ஆண்டுகளுக்கும் முன்பே முயற்சிகள் எடுக்கப்பட்டது என்பது நமக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. 

தமிழ் தாய்க்கு ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருந்தது தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தனர். ஆனால் என்ன பாட்டு பாடுவது என்று ஒரு முடிவு எட்டவில்லை. இந்த இடருக்கு ஒரு முற்றுப்புள்ளியாய் புதிய உதயத்திற்கு ஒரு ஆரம்பமாய் வந்ததுதான் கரந்தை தமிழ்ச்சங்கம்.

 

 

 

கரந்தை தமிழ்ச் சங்கம்

இந்நேரத்தில் கரந்தையில் தமிழ்ச்சங்கம் கூடியது. 1913ஆம் ஆண்டில் அந்த தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு அறிக்கையில் ஒரு பாடல் இடம்பெற்றது. அந்தப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக பாடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.   இந்த முடிவு தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது.  1914 ஆம் ஆண்டு முதல் அந்தப்பாடல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க பாடலாகவே பாடவும் செய்யப்பட்டது.  இந்த சங்கத்தை எடுத்துக்காட்டாய் கொண்டு தமிழகத்தின் வேறு பகுதிகளில் கூடிய தமிழ்ச் சங்கங்கள் இந்தப் பாடலை பாடத் தொடங்கின. இன்று இப்பாடல் தமிழ் தாய் வாழ்த்தாய் நின்று தமிழரின் பெருமையை பறைசாற்றுகிறது.

கரந்தைத் தமிழ்ச் சங்கம் வரலாறு

24.05.1901 அன்று பாலவனத்தம் நிலக்கிழவர் பொ.பாண்டித்துரையாரால் மதுரையில் புதிய தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா தஞ்சாவூரில் சிறப்பாக நடைபெற்றது. இதைக் கண்டு மகிழ்ந்த தஞ்சையைச் சேர்ந்த சில தமிழ்ச் சான்றோர், ‘நம் நகரத்தில் இதுபோல் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கினால் நன்றாக இருக்குமே’ என்று எண்ணினார்கள். அந்த நல்ல எண்ணத்தின் விளைவே தஞ்சை தமிழ்ச் சங்கம். நிலக்கிழவர் சாமிநாதனார் அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

காலப்போக்கில் அந்தச் சங்கம் மறைந்தாலும், கரந்தை வட ஆற்றங்கரையில் இருந்த பஞ்சநதம் பாவா மடத்தில் தமிழ்ச் சங்கம் ஒன்று தொடங்கப்பட்டது. ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தின் பெயர் மீதுள்ள ஈர்ப்பின் காரணத்தால், புதிதாகத் தொடங்கப்பட்ட சங்கத்துக்கு வித்யா நிகேதனம் என்று பெயர் சூட்டப்பட்டது. வித்யா நிகேதனம் தஞ்சைப் பகுதியில் மிகச் சிறப்பாகத் தமிழ்ப் பணியாற்றிவந்தது. ஆனால், சங்கத் தலைவர் ராஜாளியார், செயலாளர் சாமிநாதனார் ஆகியோரின் கட்டுப்பாடுகளை விரும்பாத இளைஞர்கள் தம்முள் இணைந்து தனியாக ஒரு சங்கத்தை நிறுவ எண்ணினார்கள்.

அதன் விளைவாகத் தோன்றியதுதான் இன்றைய கரந்தைத் தமிழ்ச் சங்கம். விரோதிகிருது ஆண்டு வைகாசித் திங்கள் முதல் நாள், 14.05.1911 அன்று நாவலர் ந.மு.வேங்கடசாமி தலைமையில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் உமா மகேசுவரனார் ஒரு சிறந்த வழக்கறிஞராக இருந்ததால், தமிழ்ச் சங்கத்துக்கு முறையான பொது விதிகளை ஏற்படுத்தினார். பிற்காலத்தில் எந்த ஒரு தனிநபரும் உரிமை கொண்டாட முடியாத வகையில், 1860ல், 21-வது சட்டப் பிரிவின்படி ஆனந்த சித்திரை ஆண்டு பத்தாம் நாள் (15.05.1914) சங்கம் பதிவு செய்யப்பட்டது.

சங்கத்தின் நோக்கம் 

தமிழ் மொழியின் நிலைமை, தமிழரின் வாழ்வு ஆகியவற்றைச் சீர்செய்வது, சங்க உறுப்பினர்களுக்குள் நட்புரிமையையும் ஒருமைப்பாட்டையும் உண்டாக்குவது, தமிழரின் அற நிலையங்களைப் பேணிக் காப்பது, உறுப்பினர்களின் ஒழுக்க நிலை, உடல்நிலை, சமூக நிலை, கல்வி நிலை - இவை செம்மையுறுவதற்கான வசதிகளை அமைப்பது, தமிழரின் தொழிலும் பொருளாதாரமும் வளம் பெறச் செய்வது - இவைதான் சங்கத்தின் நோக்கங்களாக வரையறுக்கப்பட்டன. தொண்டு - தமிழ் - முன்னேற்றம் என்பதே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலையாய கொள்கை என்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரன் முழங்கினார்.

நீராருங் கடலுடுத்த

கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல், மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ என்னும் பாடல் சங்கத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. முதன்முதலில் இந்தப் பாடலை மேடையில் பாடியவர் கூடலூர் வே.இராமசாமி. இந்தப் பாடல் தமிழ்நாட்டின் மேடைகளில் மட்டும் அல்லாது தரணி எங்கும் பாடிப் பரவ வேண்டும் என்பது உமா மகேசுவரனாரின் கனவு.

1913-ல் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பாடல் உலகெங்கும் பரவ வேண்டும் என்னும் கனவின் தொடர்ச்சியைப் போல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாம் ஆண்டு அறிக்கை ‘நீராரும் கடலுடுத்த’ பாடலுடனேயே தொடங்குகிறது. தமிழ்ச் சங்கத்தின் அடுத்தடுத்த முன்னெடுப்புகள் அப்பாடலைத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தது! 

தமிழ் தாய் வாழ்த்து பாடல் அறிவித்தல்

1967 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சரான கா. ந. அண்ணாதுரை தமிழ் மொழியின் வளர்ச்சிப்போக்கை முன்னெடுக்கும் விதமாக தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாட ஏதுவாக தமிழ்த்தாய் வாழ்த்தை தேர்ந்தெடுக்க ஆலோசனை செய்தார்.

அறுபதுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றங்கள் அரங்கேறத் தொடங்கின. மாநில மொழிகளை நசுக்கும் விதமாக மத்திய அரசு மேற்கொண்ட இந்தித் திணிப்பு முயற்சிகள் இந்தியா எங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. தமிழ்நாட்டு அரசியலில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்னும் மாபெரும் சமூகப் புரட்சி நடந்து முடிந்திருந்த காலகட்டம் அது. அதன் விளைவாக 1967-ல் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. தமிழ் மொழியின் வளர்ச்சிப் போக்கை முன்னெடுக்கும் விதமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாக்கள், கல்லூரி, பள்ளி விழாக்கள் அனைத்திலும் பாடக்கூடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தமிழறிஞர்களைக் கூட்டி ஆலோசனை செய்தார் முதல்வர் அண்ணா.

கரந்தை தமிழ்ச் சங்கம் தனது ஆண்டு அறிக்கையில் அதன் நிலையை தமிழக அரசிடம் தெரிவிக்க வேண்டுமென்று முன்னெடுத்து அப்போதைய முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களுக்கு எழுத்துப்பூர்வமான கோரிக்கையை அனுப்பியது. 

ஆலோசனையின் முடிவில் மனோன்மணீயம் சுந்தரனாரின்  நீராரும் கடலுடுத்த பாடலும், கரந்தை கவியரசு இயற்றிய வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே என்ற பாடலும் பரிந்துரைக்கப்பட்டன. நீராரும் கடலுடுத்த பாடலில் வரும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் வரிகளில் வரும் திராவிட என்ற சொல் அண்ணாதுரையை ஈர்த்தது. எனவே அப்பாடலையே அரசுபூர்வமாக தேர்ந்தெடுத்து அறிவிக்கவிருந்த நிலையில் 1969 இல் அண்ணா இறந்தார்.

இதன்பிறகு மு. கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்று இப்பாடலை 1970 மார்ச் 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. 

அதனை ஏற்று 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினோராம் நாளன்று நடந்த அரசு விழாவில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் பேசும் போது இனி தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து இருக்கும் என்றும் நீராரும் கடலுடுத்த எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலே  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அமையும் என்றும் அறிவித்தார். இப்பாடலே கரந்தை தமிழ்ச்சங்கம் முன்மொழிந்தது.

2021 ஆம் ஆண்டு திசம்பர் 17 தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் செயற்பட்ட தமிழக அரசு தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்தை அறிவித்தது.

இப்பாடலின் பொருள்

இப்பாடலின் பொருள், நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கின்ற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

இப்பாடல் எங்கு இடம் பெற்றிருக்கிறது

புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் 1891ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நாடகத்தை எழுதியவர் பி. சுந்தரம் பிள்ளை. பின்னர் மனோன்மணியம் சுந்தரனார் என்றே அழைக்கப்பட்டார்

அந்த நாட்களில் நாடகம் தொடங்கும் முன் கடவுள் வாழ்த்து இடம்பெறுவது வழக்கம் அந்த வகையில் தனது நாடகத்திற்கு கடவுள் வாழ்த்தாக தமிழ் தெய்வ வணக்கம் என்னும் பாடலை இயற்றி இடம்பெறச்செய்தார் இவர்.  அந்த நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ் தெய்வ வணக்கம் என்னும் தலைப்பில் ஒரு பாடலின் பகுதியை தமிழ் தாயை போற்றும் வகையில் அமைந்த வரிகளை ஏற்று தமிழ் தாய் பாடல் அறிவிக்கப்பட்டது, அதில் இருந்த ஒருசில வரிகள் விடப்பட்டன.

இந்த பாடலிலிருந்து பழம்பொருள், ஆரியம், அண்டை மாநிலச்சொற்கள் இவற்றை நீக்கி திருத்திய பதிவே நாம் இப்போது பாடுவது. இதற்கு   இசையமைத்தவர்            எம்.எஸ். விஸ்வநாதன்.

சுந்தரனார் இயற்றிய பாடல்

இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

மனோன்மணீயம் சுந்தரனார்

மனோன்மணீயம் பெ.சுந்தரம் கேரள மாநிலம் ஆலப்புழையில் 1855-ல் பிறந்தவர். பி.ஏ. பட்டம் பெற்றவர். சிறந்த தமிழறிஞர். அவர் இயற்றிய மனோன்மணீயம் என்னும் 4,500 வரிகள் கொண்ட கவிதை நாடக நூலில் உள்ள ஒரு பாடலே ‘நீராரும் கடலுடுத்த’ என்பதாகும்.
 

அரசாணை

தமிழ் தாய் வாழ்த்து பாடலை 1970 நவம்பர் 23 அன்று முத்தமிழ் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்த அன்றைய தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.  இந்த அரசாணையை தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் கல்வி நிலையங்களில் பொது நிறுவனங்களில் பொது நிகழ்ச்சிகளின்போது நிகழ்வுகளின் தொடக்கத்திற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 1913-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசிப்பும் இந்த அரசாணையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.  என்ன வரிகள் பாட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.  தற்போது இது எப்படி பாடப்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு ஒருங்கிணைந்த நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன அவற்றை கீழே காண்போம்.

1. மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய வரிகளைக் கொண்ட தமிழ்த்தாய் கீழ்க்கண்ட வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது.  தமிழ்த்தாய் வாழ்த்தின் கீழ்க்கண்ட வரிகள். 55 வினாடிகளில் முல்லைப்பாணி ராகத்தில் (மோகன ராகம்) மூன்றன் நடையில் (திகரம்) பாடப்படவேண்டும்,

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் 

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் 

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! 

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து  செயல்மறந்து 

வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”

2. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள். பொதுத்துறை பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், 

நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

3. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.

4. மாற்றுத் திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

5. பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும்.

6. அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால் தமிழ்நாட்டில் நடைபெறும் தனியார் அமைப்புகள் நடத்திடும் இலக்கிய மற்றும் பொதுநிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்.

வாழ்வில் செம்மை செய்பவள் நீ எனத் தொடங்கும் பாரதிதாசன் பாடலை புதுச்சேரி ஒன்றியப் பகுதி (யூனியன் பிரதேசம்)  தனது அதிகாரப்பூர்வ தமிழ்த்தாய் வாழ்த்தாய் அறிவித்திருக்கிறது.

 

- அருள்பணி. பிரகாஷ் SdC

Add new comment

14 + 6 =