குற்றவாளி ஆனவரா? குற்றவாளி ஆக்கப்பட்டவரா?

2017 திசம்பர் 31 அன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 'எல்கார் பரிஷத்’மாநாடு நடைபெற்றது. 2018 சனவரி 1 அன்று பீமா கோரேகானில் தலித்துகள் வீரவணக்க நிகழ்வை நடத்தினர். அதையடுத்து அங்கு பெரும் வன்முறையை இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தினர். பதிலடி கொடுத்து மக்களை காத்தனர் மகாராஷ்டிர தலித்துகள். இந்த சம்பவத்தில் தலித்துகள்தான் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். வன்முறை நடத்திய எந்த இந்துத்துவ இயக்கங்களை சார்ந்தோர் கைது செய்யப்படவில்லை. ஆனால்,எல்கார் பரிஷத் மாநாட்டில் கலந்து கொண்டு வன்முறையை தூண்டியதாக பல அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ‘ஊபா' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் முக்கிய மானவர்கள் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே ( இவர் புரட்சியாளர் அம்பேத்கரின் உறவினர்),

கவுதம் நவ்லாகா, கவிஞர் வர வரராவ், தொழிற்சங்கவாதி சுதா பரத்தவாஜ், சுதிர்தவாலே மற்றும் கபீர் கலைக் குழுவைச் சார்ந்த சாகர் கார்கே,ரமேஷ் கெய்சர், ஜோதி ஜக்தாப் உள்ளிட்ட 15 பேரை 'ஊபா' சட்டத்தில் கைது செய்து சிறைப்படுத்தியது. இந்துத்தவ பாஜக அரசு. இந்த பின்னணியில்தான் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். "தான் பீமா கோரேகானுக்கு சென்றதும் இல்லை; மவோயிஸ்டுகளை பார்த்ததும் இல்லை”என ஸ்டேன் சுவாமி மறுத்துள்ளார். ஆனாலும் தேசிய புலனாய்வு அமைப்பு நடக்க முடியாத இந்த பெரியவரால் தேசத்துக்கு ஆபத்து எனவும் மாவோயிஸ்டுகளுன் சேர் ந்து தேசத்துக்கு ஆபத்து விளைவிக்கும் சதி செயலில் ஈடுபட்டார் என பொய்யாக குற்றம் சுமத்தி ‘ஊபா' சட்டத்தில் சிறைப்படுத்தி இருக்கிறது.

அருட்தந்தை ஸ்டேன் கடந்த 50 ஆண்டுகாலமாக பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வருபவர்.கேரளா, தமிழ்நாடு, ஜார்கண்ட் என பல்வேறு மாநிலங்களில் களப்பணி செய்து வந்தவர். ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வந்தவர். இதைத்தவிர பாதர் ஸ்டேன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. முதிர்ந்த வயதில், ஓய்வெடுக்க வேண்டிய வயதில் 'ஊபா' சட்டத்தில் சிறைப்படுத்தும் கொடூர மன நிலை பாஜக கும்பலை தவிர வேறு யாருக்கு வரும்?

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பீமா கோராகானை வைத்துக் கொண்டு தலித்துகளை ஒடுக்குவதில் குறியாக இருப்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

தலித்துகள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என குறிவைத்து இந்துத்துவ பாஜக அரசு வேட்டையாடுவதை எல்லோரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காகப் போராடுவோம். 'ஊபா' சட்டத்தில் தளைப்படுத்தப்பட்டோரின் விடுதலைக்காக தேசிய அளவில் சட்ட ரீதியான பாதுகாப்பு அமைப்பை இப்போதாவது தொடங்க வேண்டும். அதுதான் அவசரமும் அவசியமும்.

Add new comment

7 + 8 =