உரசிப்பார்க்கும் நிகழ்வுகள் | Heart Touching - Probing | rvapastoralcare

1. மனித வர்த்தகத்திற்கு பெருமளவு பலியாகும் புலம்பெயர்ந்தோர், இந்த தொற்றுநோய் பரவும் காலத்தில் அந்த கொடுமையை இன்னும் அதிக அளவில் உணர்கின்றனர் என்று புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணித்துறை அண்மையில் வெளியிட்டுள்ளனர். "நாம் அனைவரும் ஒரே மனித குடும்பமாக இணைந்தால் மட்டுமே இந்த  நெருக்கடி நிலையிலிருந்து மீளமுடியும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருந்த கருத்தை அடிப்படையாக கொண்டு புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணித்துறை  இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரவியுள்ள போராட்டங்கள் குறித்து கர்தினால் பீட்டர் டர்க்சன் கூறுகையில், "போராட்டங்கள் வெடித்துள்ள அனைத்து நகரங்களிலும் பல்வேறு கிறிஸ்தவ மற்றும் பல்வேறு சமய சகோதரர், சகோதரிகளுடன் இணைந்து, ஒப்புரவும் மன்னிப்பும் வளர்வதற்கு ஆயர்கள் ஜெபக்கூட்டங்களை ஏற்பாடு செய்வது உதவியாக இருக்கும்" என கூறியுள்ளார். மேலும் "வன்முறையற்ற போராட்டங்கள் இடம்பெறவேண்டும்" என்று ஜார்ஜ் பிலோய்ட் அவர்களின் சகோதரர் கூறிய கருத்தை நினைவுகூர்ந்த கார்டினால் அவர்கள், "வன்முறையற்ற போராட்டங்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த போராட்டங்கள், உலகிற்கே சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன" என சுட்டிக்காட்டினார். 

3. கடந்த ஜூன் 1 ஆம் தேதி அன்று, வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள எப்பிஸ்கோப்பல் ஆலயத்திற்கு அமெரிக்க அரசு தலைவர் டிரம்ப் அவர்கள் சென்றபோது, அங்கு கூடி தங்களின் போராட்டத்தை மேற்கொண்டோரை கண்ணீர் புகைகொண்டு காவல்துறை விரட்டியடித்தபின், டிரம்ப் அவர்கள், விவிலியத்தை சுமந்து நிற்பது போன்ற புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இது அந்த அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆலயத்திற்கு சென்ற அரசுத்தலைவர் அங்கு ஜெபிக்கவில்லை என்றும், அன்பை பறைசாற்றும் விவிலியத்தை அரசுத்தலைவர் தன் சொந்த நலனுக்காக பயன்படுத்தியது அதிர்ச்சியளிக்கிறது என்றும் ஆயர் பௌதே அவர்கள் கூறியுள்ளார். இதற்கிடையில், ஜூன் 2 அன்று, வாஷிங்டன் நகரில் உள்ள புனித 2 ஆம் ஜான்பவுல் தேசிய திருத்தலத்திற்கு டிரம்ப் அவர்கள் சென்றது தனது சுய ஆதாயத்திற்கான ஒரு செயல் என பேராயர் வில்டன் கிரிகோரி கூறியுள்ளார். 

4. மே 29 தேதி, அமெரிக்க அரசு தலைவர் டிரம்ப் அவர்கள், உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலக உள்ளதாக கூறி இருந்தார். இது தொடர்பாக எலிசா கோரேன் கூறுகையில், "அமெரிக்கா ஒரு உறுதியான நிலைப்பாட்டினை எடுத்தால் இன்னும் நல்லது செய்ய முடியும்" என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "இந்த நிலைமை ஒரு நடுத்தர அணுகுமுறைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அமெரிக்க பின்வாங்குவதில் அர்த்தமில்லை" என்றார்.

5. அமெரிக்காவில் நடைபெறும் ஜி 7  மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அவர்கள். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜி 7 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளை அதிகரிக்க டிரம்ப் விரும்புவதாகவும் இந்த சூழ்நிலையில்தான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அழைப்பு குறித்த ஆய்வுகள் நடந்து வருவதாகவும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

6. கடந்த மாதம் 5 ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களால் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தார்கள். இது குறித்து, காங்கிரஸ் எம் . பி . ராகுல் காந்தி கூறுகையில், இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்குள் சீன வீரர்கள் யாரும் இந்தியாவுக்குள் நுழையவில்லை. எல்லையில் அதே நிலைமை தான் உள்ளது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். நெருக்கடியான நேரத்தில் மௌனம் காப்பது சரியல்ல. இந்த விவகாரத்தில் எல்லையில் என்ன தான் நடக்கிறது என மத்திய அரசு முடிவை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

7. தற்போது செயல்பாட்டில் இருக்கும் 5 ஆம் கட்ட ஊரடங்கில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டு தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. எனினும், இதன் முடிவு அந்தந்த மாநில அரசு எடுக்கலாம் என்றும் கூறியுள்ளது. எனவே தமிழக அரசு சார்பில் இது குறித்த அனைத்து சமயத்தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலர் சண்முகம் தலைமையில் நடந்தது. இதில் இந்து, இஸ்லாம், கிறித்துவ, ஜெயின் மத தலைவர்கள் 
கலந்து கொண்டனர். ஆலோசனையில் கிடைக்கப்பெற்ற தகவல்களை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகு முதல்வர் ஆலோசித்து முடிவுகளை அறிவிப்பார் என்று தெரிகிறது. 

8. காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் 125 வது பிறந்தநாளான இன்று அன்னாரின் நினைவிடத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மலர் போர்வை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த அறிக்கையில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் மாவட்டங்களில் இது போன்ற நிகழ்வுகளுக்கு  பொதுமக்கள் கூடாமல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

9. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அரசு அலுவலர்கள் 50% பணிக்கு திரும்பி வரலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு செல்வதில் சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு இம்மாதம் 30ஆம் தேதி வரை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுதிறன் அரசு ஊழியர்களுக்கு அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளித்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

10. சில தினங்களுக்கு முன்னர் கனடாவின் லண்டன் நகரில் அங்குள்ள பேருந்து நிலையம் நிழற்குடையின் கீழ் இரவு 10 மணிக்கு 14 வயதான சிறுமி தனியாக உட்கார்ந்து இருந்தாள். அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இளைஞன் சிறுமியிடம் வந்து காரில் ஏறு எனக் கூறியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி அருகில் இருந்த ஹோட்டலுக்கு ஓடி சென்று அங்கிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அதற்குள் அங்கிருந்து கார் பறந்து சென்றுவிட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில் சிறுமி எங்களிடம் அளித்த தகவலின்படி சிவப்பு நிற காரில் தான் 30 வயதான இளைஞன் வந்துள்ளார். கருப்பு நிறத்திலான அந்த இளைஞனின் தலை வழுக்கையாக இருந்துள்ளது. மேலும் தெளிவாக பேசிய அவன் சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கிறான். இது தொடர்பான சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளோம். அந்தக் கார் ஓட்டுநர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறலாம் என தெரிவித்துள்ளனர்.

11.  உலகமே கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பிரான்ஸ் நாடு புதிய  சிக்கலில் மாட்டியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஒவ்வாமை என்னும் அலர்ஜி குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புவி  வெப்பமயமாதல் காரணமாக பிரான்சில் அலர்ஜி சீசன் நீடித்து உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். பிரான்சில் தேசிய காற்று ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள வரைபடம் ஒன்று கிட்டத்தட்ட பிரான்ஸ் முழுவதுமே மகரந்த அலர்ஜி எச்சரிக்கை பகுதிகளாக இருப்பதை காட்டுவதை காணமுடிகிறது. புல்லில் இருந்து வெளியாகும் மகரந்தத் துகள்கள் ஜூலையின் மையப்பகுதி அல்லது ஜூலை மாத இறுதி வரை நீடிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் மகரந்தத் துகள்களின் எண்ணிக்கை மிக அதிகம் இருக்கும் என்பதையும் ஆரஞ்சு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ள பகுதிகள் அதிகம் என்பதையும் காட்டுகின்றன. இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் நிபுணர் ஒருவர். அலர்ஜிக்கான அறிகுறிகளும் கொரோனாவுக்கான அறிகுறிகளும் முற்றிலும் வித்தியாசமானவை என்பதை  குறிப்பிட்டுள்ளார்.

12. அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் இன் 6 வயது மகள் தனது தந்தை இந்த உலகத்தை மாற்றி விட்டதாக நெகிழ்ந்துள்ளார். புன்னகை மாறாத முகத்துடன் தந்தையுடன் ஒன்றாக விளையாடும் தருணங்களை இழப்பதாக தெரிவித்துள்ளார், கியானா. தமது தந்தை அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்டது தெரியாமல் அவர் உலகத்தை மாற்றி விட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஜார்ஜ் எவ்வாறு இறந்தார் என்பது கியானாவுக்கு முழுவதுமாக தெரியாது எனக் கூறும் ஜார்ஜின் மனைவி ராக்ஸி மூச்சுவிட  முடியாததாலேயே ஜார்ஜ் மரணமடைந்தார் என நம்பவைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்ட அந்த காவலர் ஜார்ஜ் கழுத்தில் அமிழ்த்துவதை வீடியோவில் பார்த்து தந்தைக்கு உதவ தாம் அந்த இடத்தில் இல்லாமல் போய் விட்டேன் என்று கியானா கூறுவதாக தெரிவித்துள்ளார்.

13. கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் அவருக்கு ஆதரவு தெரிவித்தும் அவரது கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களும் பேரணிகளும் நடந்து வருகின்றன. அத்தகைய பேரணி ஒன்றில் ஒரு கூட்டம் கருப்பினத்தவர் முன் நின்றிருந்த போலீசார் அனைவரும் சட்டென முழங்கால்படியிட்டு தங்கள் ஆதரவை கருப்பின சகோதரர்களுக்கு தெரிவித்த ஒரு நிகழ்வு அமெரிக்காவில் நிகழ்ந்தது." இறைவா!ஆண்டாண்டு காலமாக எங்கள் கருப்பின சகோதர சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட இனவெறி கொடுமைகளுக்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்" என்று ஒருவர் பிரார்த்திக்க அவருடன் இருந்த அனைவரும் கருப்பினத்தவர்கள் முன்பு முழங்கால்படியிட்டு பிரார்த்தனை செய்வதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது. ஒரு மனிதனின்  கழுத்தின் மீது போலீசார் முழங்காலை வைத்து அலுத்துவதையா அல்லது ஒற்றுமையையும் அமைதியையும் காட்டப்படுவதையா? எதை விரும்புகிறோம்? என கேள்வி எழுப்புகிறார் அப்பகுதி பாதிரியார் ஒருவர்.

 - 04.06.2020 

Add new comment

16 + 2 =