வாழ்வே உண்மையான வழிபாடு | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பதினொன்றாம் புதன் 
I: 2 அர 2:1,6-14
II: திபா 30:20,21,24
III: மத் 6:1-6,16-18

கிறிஸ்தவ வாழ்வு என்பது மேலோட்டமான வாழ்வு கிடையாது. இது மனித  நேயத்திற்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் உன்னதமான வாழ்வியல். திருப்பலியில் பங்கெடுப்பதும் பக்தி முயற்சிகளில் பங்கெடுப்பதும் மட்டும் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு கிடையாது. பிறர் நல பணி செய்து மனித நேயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் உண்மையான கிறிஸ்தவ மதிப்பீடாக இருக்க முடியும். ஆண்டவர் இயேசு பலியை நிறைவேற்றும் குருவானவர் போல் தோன்றாமல், தன்னையே பலியாகக் கொடுத்து பிறர் வாழ்வு வளம் பெற உழைத்தவர்.

ஒரு கிறிஸ்தவ வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு நமக்கு பாடமாக கற்பித்துள்ளார். நோயாளர்களுக்கு நலம் அளித்து அன்பு செய்தார். பாவிகளை மன்னித்து மீட்புப் பெற வழிகாட்டினார். ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை பெற வழிகாட்டினார். மனிதநேயத்திற்கு மனித மாண்பிற்க்கும் முக்கியத்துவம் கொடுத்தார். இப்படிப்பட்ட வாழ்வை வாழ்பவர்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள். இதை நம் ஆண்டவர் இயேசுவின் முன்மாதிரியான வாழ்வின் வழியாக அறியமுடிகிறது.

இறைவேண்டல், தர்மம் செய்தல் மற்றும் நோன்பிருத்தல் போன்ற நல்ல மதிப்பீடுகள் வளர வேண்டும் என்ற கருத்தை ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வழியாக வலியுறுத்துகிறார். அதிலும் குறிப்பாக நாம் எப்படிப்பட்ட மனநிலையில் பயணித்து இப்படிப்பட்ட அறச் செயல்களை செய்ய வேண்டும் என்பதையும் ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். இயேசு, 'நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும்
சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்' என்றார்'' (மத்தேயு 6:2). பிறரிடமிருந்து பேர் புகழ் பெற வேண்டும் என்றோ அல்லது மதிப்பு பெற வேண்டும் என்றோ, அறச்செயல்களை செய்யாமல் பிறர் நலத்தோடு இறைவனுக்கு செய்வதாக நினைத்து செய்வதாக நினைத்து செய்ய வேண்டும். அப்பொழுது விண்ணரசில் நிறைவான கைமாற்றை நாம் பெற முடியும். எனவே அறச்செயல்களின் வழியாக மனித சேவையில் புனிதம் கண்டிட தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
வல்லமைகளை இறைவா! அறச்செயல்களின் வழியாக உம்மை போற்றிப் புகழ்ந்திட உமது அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

17 + 0 =