யார் இந்த மார்த்தா! | குழந்தைஇயேசு பாபு


St. Martha

இன்றைய வாசகங்கள் (29.07.2020) - பொதுக்காலத்தின் 17 ஆம் புதன் - I. எரே. 15:10,16-21; II. திபா. 59:1-2,3,9-10,16-17; III. யோவா. 11:19-27 

இன்றைய நாளில் தாய் திருஅவையோடு இணைந்து புனித மார்த்தாவின் விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். "மார்த்தா" என்ற சொல்லானது அரேபிய மொழியிலிருந்து வந்தது. "மார்த்தா" என்ற பெயரின் பொருள் என்னவென்றால் "தலைவி" அல்லது "இல்லத்தரசி" என்று பொருள். எருசலேம் அருகே பெத்தானியா என்னும் ஊரில் இயேசுவால் அன்பு செய்யப்பட்ட இலாசர் மற்றும் மரியா போன்ற இருவரோடு உடன் பிறந்தவராவார் என்னும் குறிப்பு நாம் புதிய ஏற்பாட்டில் காண முடிகிறது. இறந்துபோன தனது சகோதரர் இலாசரை உயிர் பெற்றெழச் செய்யும் பொழுது, இயேசுவோடு உடனிருந்து அந்நிகழ்வை நேரில் கண்டார். 

புனித மார்த்தா பல நற்பண்புகளை தனதாக்கியுள்ளார். அவரின் வாழ்வு நமக்கு மிகச்சிறந்த பாடமாக இருக்கின்றது. அவற்றில் ஒரு சிலவற்றை நாம் காண்போம். 

மார்த்தா விருந்தோம்பல் பண்புக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார். தன் வீட்டிற்கு வந்த விருந்தினரை கண்ணும் கருத்துமாக உபசரிக்கும் மனநிலையை மார்த்தா கொண்டிருந்தார். இயேசு மார்த்தாவின் வீட்டிற்கு வந்த பொழுது, வீட்டு தலைவிக்குரிய மனநிலையோடு பொறுப்புடன் உபசரிக்க கண்ணும் கருத்துமாய் இருந்தார். இந்த செயல்பாடு இயேசுவால் விமர்சிக்கப்பட்டாலும், அவரின் விருந்தோம்பல் பண்பு நமக்கு மிகச் சிறந்த பாடத்தைப் புகட்டுவதாக இருக்கின்றது. 

இந்த விருந்தோம்பல் பண்பு இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் குறைந்து வருகிறது. விருந்தோம்பல் பண்பு தமிழரின் இயல்பிலேயே வளர்ந்த பண்பாகும். அப்படிப்பட்ட தமிழரின் வாழ்விலும் இப்பண்பு குறைந்து வருவது நம்மை ஆய்வுக்கு உட்படுத்துகிறது. எனவே மார்த்தாவைப் போல நாமும் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்க இன்று முதல் முயற்சி செய்வோம். 

மார்த்தா இறை நம்பிக்கையில் ஆழமுள்ளவராய் இருந்தார். இன்றைய நற்செய்தியில் மார்த்தா இயேசுவைப் பார்த்து "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்டதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்" என்று கூறினார். இந்த வார்த்தைகள் இயேசுவின் மீது கொண்ட மார்த்தாவின் ஆழமான நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. மார்த்தாவின் ஆழமான நம்பிக்கை, இறந்த இலாசரை உயிர்பெற்றெழச் செய்தது . இயேசு இந்த வல்லச் செயலை செய்ததற்கு இலாசர் மீது கொண்டிருந்த அன்பும், மார்த்தாவின் நம்பிக்கையுமே ஆகும். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் எவ்வளவு துயரங்களும் சோதனைகளும் இடையூறுகளும் வந்தாலும், இறைவனால் இயலும் என்ற நம்பிக்கை கொள்ளும் பொழுது நிச்சயமாக கடவுள் பல வல்ல செயல்களைச் செய்வார். 

மார்த்தா தனது தவற்றின் வழியாக நமக்கு பாடம் புகட்டுகிறார். தனது சகோதரி மரியாவைப் போல இயேசுவின் பாதம் அமர்ந்து அவரின் வார்த்தையை கேட்காமல் பரபரப்பாக விருந்து தயார் செய்வதில் இருந்தார். இது உடல் மற்றும் ஆன்ம உணவுக்கான முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. உடல் சார்ந்த உணவை தயாரிப்பதும் உபசரிப்பதும் தவறல்ல; மாறாக, ஆன்மா சார்ந்த உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதன் பிறகே உடல் சார்ந்த உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையை வலியுறுத்துவதாக இருக்கின்றது. எனவே இவ்வுலகம் சார்ந்தவற்றிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், இறைவனுக்கு முன்னுரிமை கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம். 

மார்த்தா இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவிக்கும் சீடராக இருக்கிறார். "நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்" என்ற மார்த்தாவின் வார்த்தைகள் இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பறைசாற்றுவதாக இருக்கிறது. எனவே நம்முடைய வாழ்விலும் நாம் நம்புகிற இயேசுவை முழுமனதோடு பறைசாற்ற முன்வருவோம். அப்பொழுது நாமும் மார்த்தாவைப் போல இறைக்கருவியாக உருமாற முடியும். 

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே புனித மார்த்தா கொண்டிருந்த விருந்தோம்பல் பண்பையும் இறை நம்பிக்கையையும் நற்செய்தியை பறைசாற்றும் பண்பையும் தவறிலிருந்து கற்றுக்கொள்ளும் பண்பையும் நாம் வளர்த்துக் கொள்ள தடையாயுள்ள அனைத்தையும் தகர்த்தெறிவோம். புனித அன்னை தெரசா அழைப்பிற்குள் அழைப்பை பெறுவதற்கு முன்பாக, இவ்வுலகம் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். எப்பொழுது தனது அழைத்தல் வாழ்விலே ஒரு வெறுமையை கண்டார்களோ, உயிருள்ள நற்கருணை ஆண்டவர் வழியாக இயேசுவின் திருவுளத்தை அறிந்தார்.

ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் உடன் இருந்ததால் தான் மிகச் சிறப்பான மனிதநேய செயல்பாடுகளைச் செய்ய முடிந்தது . எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே சிறப்பான மனிதநேயச் செயல்பாடுகளைச் செய்யவும் நம்பிக்கை வாழ்வுக்கு சான்று பகரவும் இயேசுவோடு உடன் இருப்போம். நம்மை நம்பி வருபவர்களை அன்போடு வரவேற்று விருந்தோம்பல் பண்பாடு உதவி செய்ய முயற்சி செய்வோம். இத்தகைய மனநிலைக் பெற்றுக்கொள்ள இறையருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் 

வல்லமையுள்ள இறைவா! நாங்கள் எங்களுடைய வாழ்விலே புனித மார்த்தாவைப் போல இறைநம்பிக்கை மிகுந்தவர்களாகவும் விருந்தோம்பல் பண்பு கொண்டவர்களாகவும் வாழ வளர வேண்டிய அருளைத் தரும். ஆமென். 

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

9 + 1 =