மேலுலகு சார்ந்தவற்றையே நாடுவோம்! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் 18 ஆம் ஞாயிறு
I: சபை 1:: 2; 2: 21-23
II:  திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17
III:கொலோ 3: 1-5, 9-11
IV: லூக் 12: 13-21

அன்று ஞாயிற்றுகிழமை. தன் மகனை கோவிலுக்கு வருமாறு அம்மா அழைத்தார். மகனோ தன் நண்பர்களுடன் சினிமாவுக்குச் செல்ல ஏற்கனவே திட்டம் தீட்டியதாகச் சொல்லி அம்மாவின் அழைப்பை மறுத்துவிட்டான். அம்மா எவ்வளவோ எடுத்துக் கூறியும் கோவிலுக்குச் செல்லவில்லை. மகன் திரையரங்கம் செல்லத் தயாரானான். தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மற்ற நண்பர்களுடன் சென்றான். சென்று கொண்டிருக்கும் போது திடீரென வழிமறித்த காவலர்கள் லைசன்ஸ் கேட்டார்கள். அப்போதுதான் மகனுக்கு வீட்டிலே வைத்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. காவலர்கள் வெகுநேரம் அவர்களை அமர வைத்துவிட்டு தண்டனையாக அபராதத்தொகை கட்டவைத்தனர். வாடிய முகத்துடன் வீட்டிற்கு வந்த மகனிடம் தாய் காரணம் கேட்க மகன் நடந்ததைச் சொன்னான். படமும் பார்க்கவில்லை ,செலவிற்கு கொண்டு சென்ற பணமும் அபராதமாய்ப் போய்விட்டது என வருந்தினான். அப்போது அம்மா "என்னோடு கோயிலுக்கு வந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்காதல்லவா " என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

இந்நிகழ்வு நமக்கும் உணர்த்தும் செய்தி என்ன?  நாம் அற்ப வியங்களுக்காக நம் நேரத்தையும் பணத்தையும் உழைப்பையும் செலவழிக்கும் போது அது பயனற்றதாய் முடியும் என்பதைத்தான்.  பல நேரங்களில் நம் உடலுக்கும் மனதுக்கும் ஆன்மாவிற்கும் பயன்தருகின்ற ஆசிர்வாதமான நற்காரியங்களைப்பற்றி சிந்திக்கத் தவறிவிடுகிறோம். அதனால் வாழ்வில் நிலைப்பது வெறுமையே. இதை நம்மால் மறுக்க இயலாது. இக்கருத்தை வலியுறுத்தி நம்மை மேலுலகு சார்ந்தவற்றை நாட இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

முதல்வாசகத்தில் சபை உரையாளர் மனித உழைப்பை வீண் என்கிறார். அதிகமாக நேரம் செலவழித்து உடலையும் மனதையும் வருத்தி சந்ததிக்காக செல்வம் சேர்க்கின்றேன் என்று தன் வாழ்நாட்களின் மகிழ்ச்சியை இழந்தவர்களின் நிலையை தத்ரூபமாக விளக்குவதாய் உள்ளன இவ்வார்த்தைகள். உழைப்பது வீணல்ல. ஆனால் அவ்வுழைப்பால் வரும் பயனை நாம் அனுபவிக்க இயலாமல் போனால் அவ்வுழைப்பை வீண் என்று சொல்வது சரியல்லவா.

நற்செய்தி வாசகம் இன்னும் ஆழமாக நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. மனித வாழ்வே நிரந்தரமற்றது. எந்த நொடியும் எதுவும் நடக்கலாம். இப்படிப்பட்ட நிலையற்ற வாழ்வுக்காக நாம் சேர்த்து வைக்கின்ற செல்வமோ கணக்கில்லாதவையாக மாறிவிடுகிறது.இறுதியில் நம் வாழ்வு முடிவுறும் போது நாம் சேர்த்துவைத்த அனைத்தும் வீண்தான் என்பதை இயேசு பேராசை கொண்ட செல்வந்தன் உவமை மூலம் விளக்குகிறார்.

 இயேசு மிக அருமையாக இன்றைய நற்செய்தியில் கூறுகிறார் "கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.” என்று. நாம் சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம் எவை? இறைவனின் அருள். நல்ல நண்பர்கள். பிறர் நலத்திற்காக நாம் செய்யும் நற்செயல்கள். அதனால் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. இவையல்லவா.

ஆம் அன்புக்குரியவர்களே இறைவன் முன் செல்வமுள்ளவர்களாய் வாழ நாம் கொள்ள வேண்டியது மேலுலகு பற்றிய நாட்டமே என இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கிறது.
ஆண்டவருக்கு உகந்த எண்ணம், சொல், செயல் அனைத்தும் நமக்கு விண்ணுலகிலும் செல்வம் சேர்க்கும். மண்ணுலகிலும் செல்வம் சேர்க்கும் என்பதை உணர்ந்து நிலையற்ற உலக செல்வங்களை மறந்து மேலுலகு சார்ந்தவற்றை நாடக் கற்றுக்கொள்வோம்.

 இறைவேண்டல் 
எங்கள் நிலையான செல்வமே ஆண்டவரே! நிலையற்ற வாழ்வு வாழும் நாங்கள் வீணானவற்றையும் அழிந்து போகின்றவற்றையும் விடுத்து மேலுகு சார்ந்தவற்றை நாட வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்
இன்றைய வாசகங்கள்

Add new comment

2 + 16 =