மனமாற்றத்திற்கு வழிகாட்டும் இரண்டாம் வருகை! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலம் 34 ஆம் வியாழன்; I : தானி: 6: 11-27; II: 3: 68, 69, 70, 71, 72, 73, 74; III : லூக்:  21: 20-28

நம்முடைய கிறிஸ்தவ வாழ்வில் கடவுளுக்காக நம்மையே ஆயத்தப்படுத்த ஒவ்வொரு நொடிப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். ஆண்டவரின்  இரண்டாம் வருகை என்று சிந்திக்கும்  பொழுது எப்பொழுது வருவார் என்று நமக்கு தெரியாது. அது தந்தை கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் அந்த வருகைக்காக நாம்  எப்போதும் தயாராக இருக்க  வேண்டும் என்பது முக்கியம்.

இன்றைய நற்செய்தியை நாம் வாசிக்கும் போது அவ்வார்த்தைகள் நம்மை பயமுறுத்துவது  போல இருக்கலாம். ஆனால் இன்றைய நற்செய்தி  நமக்கு சொல்லும் பாடம் என்னவெனில் நாம் அனைவரும் நம் வாழ்வை மனமாற்றத்தின் வழியாக அழகு செய்ய வேண்டும் என்பதே. கடவுள் தன் ஒரே மகனை இந்த உலகிற்கு அனுப்பியது நாம் அனைவரும் மனமாற்றம் பெற்று மீட்படைய வேண்டும் என்பதற்காகவே ஆகும். நாம் மனமாற்றத்திற்கு தயாராக  இருக்கும்பொழுது, ஆண்டவரின் வருகை ஆசீர்வாதமாக இருக்கும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சக்கேயுவின் மனமாற்றம். சக்கேயு இயேசுவைக் காண வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இயேசுவைக் காண பல தடைகளைத் தாண்டி முயற்சி செய்தார்.  இறுதியில் இயேசுவின் பார்வையில் தயவை பெற்றார்.  இயேசு அவர்கள் இல்லத்திற்கு சென்று விருந்து உண்டார்.  "இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று " என்று  இயேசுவே கூறும் அளவுக்கு ஆசிர்வாதத்தை பெற்றார். மமனமாற்றமே சக்கேயுவிற்கு ஆசிர்வாதத்தைப் பெற்றுத் தந்தது. இப்படித்தான் நாம் இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்படுத்த வேண்டும். 

ஆண்டவர் வருகை எப்படி இருக்கும் என்று தெரியாது. எப்பொழுது வரும் என்றும் தெரியாது. ஆனால் எப்போது வந்தாலும் நாம் தயாராகவும் தைரியமாகவும் வாழ வேண்டும். அப்படி தைரியமாக வாழ வேண்டுமென்றால் நம் உள்ளமும்  வாழ்வும் தூய்மை நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட முறையில்  வாழ்வை அமைக்க வேண்டும். 

ஆண்டவரின் வருகை க்கு நாம் எப்படி ஆயத்தப்படுத்த கூடாது என்பதற்கு யூதாஸ் இஸ்காரியோத்து ஒரு மிகச்சிறந்த உதாரணம். ஆண்டவர் இயேசு தன் உள்ளத்தில் வந்தபோதிலும், இயேசுவை முழுமையாகச்   சுவைக்காமல் பாவம் செய்தார். எனவே ஆண்டவரின் வருகை அவருக்கு சாபமாக மாறியது.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு நமக்கு வெளிப்படுத்தும் அறிகுறிகளை அடையாளம் கண்டு அவர் வழி நடக்க அழைக்கப்பட்டுள்ளோம். இரண்டாம் வருகையின் அறிகுறிகள் நம்மை பயமுறுத்துவதற்காக அல்ல ; மாறாக நம்மை பக்குவப்படுத்துகின்றது.  மடியில் கனம் இருப்பவன் தான் பயப்பட வேண்டும். அதாவது வாழ்க்கையிலே பாவம் செய்பவன் தான் ஆண்டவரின்  இரண்டாம் வருகை குறித்து பயப்பட வேண்டும். ஆனால் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி வழியில் நடப்பவர்கள் இரண்டாம் வருகையைக் குறித்து பயப்படத் தேவையில்லை. ஏனெனில் அது எப்போதும் நிகழ்ந்தாலும் அது அவர்களுக்கு  ஆசீர்வாதமாக மாறும்.   எனவே மனமாற்றத்தின் வழியாக ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தப்படுத்த நம்மை முழுவதுமாக கையளிப்போம்.

 இறைவேண்டல் : 
அன்பான ஆண்டவரே! உமது  வருகைக்காக எந்நாளும் தயாராக இருக்க அருளையும் ஆற்றலையும் மனமாற்ற வாழ்வையும் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

14 + 2 =