மதிமயங்கியவர்களா நாம்? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் இரண்டாம் சனி  - I. எபிரேயர்: 9:2-3,11-14; II. திபா: 47:1-2.5-6.7-8; III. மாற்கு: 3:20-21

சமூகப் பணிக்கான படிப்பினைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற இளைஞர் ஒருவர் இருந்தார். அவர் முக்கியமாக மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையில் முழு மூச்சாய் பணிசெய்தார். மாற்றுத்திறனாளிகளை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்குரிய சலுகைகளையெல்லாம்  பெறுவதற்கு உதவி செய்வது, அவர்களுக்குரிய நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு அளிப்பது எனப் பல நற்காரியங்கள் செய்து வந்தார். ஆனால் அவருக்கென்று நிரந்தரமாக ஒரு வேலை இல்லை. இவருடைய நண்பர்களும் குடும்பத்தாரும் எப்போதும் இவரைத் திட்டித்தீர்த்தனர். "பைத்தியக்காரன். பிழைக்கத் தெரியாதவன். சமூக சேவை செய்கிற இவன் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்ற போகிறான்" போன்ற வசைமொழிகளைக் கூறுவர். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய பணியை மிகுந்த மனநிறைவுடன் செய்தார் அந்த இளைஞர்.

உலகில் நல்லவர்கள், நேர்மையாளர்கள், பிறர் நலப் பணிசெய்பவர்கள் எல்லாருக்கும் கிடைக்கின்ற அடைமொழி "பைத்தியக்காரன். உலகம் தெரியாதவன்" என்பவைதான். இயேசுவும் இப்பெயரைப் பெற்றார் என்பதில் ஆச்சரியமில்லை. தன்னுடைய பணிவாழ்வில் தான் சந்தித்த மக்களுக்கு நல் வாழ்வு அளிக்க வேண்டும் என்பதற்காகத் தன்னைப்பற்றி கொஞ்சம் கூட இயேசு கவலை கொள்ளவில்லை. உண்பதற்கு கூட நேரமின்றி நல்லது செய்தார் இயேசு. அதற்கு அவர் வாங்கிய பட்டம் "மதிமயங்கியவன்" என்பது.

நாமும் மதிமயங்கிப்போய்தான் இருக்கிறோம். அது நமது சுயத்தை மட்டும் கவனித்துக்கொள்ளும் ஒரு மயக்கநிலை. எப்போதும் எதை உண்பது? எதை உடுப்பது? என சிந்தித்துக்கொண்டிருக்கும் சுயநலமான நிலை. சொகுசான சுலபமான வாழ்வையே நாடும் மனநிலை. இப்படி நம்மைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதால் அருகிலுள்ளவரின் துன்பம் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. நற்செயல்கள் செய்யும் எண்ணமும் நம்மிடம் பல வேளைகளில் உருவாவதில்லை. 

இயேசுவின் மதிமயக்கத்தையும் நமது மதிமயக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். இயேசுவின் மயக்கம் பிறர்நலனை மையமாகக் கொண்டது. நமதோ பல வேளைகளில் தன்னலம் கொண்டது. எனவே "ஊர் என்ன பேசினாலும் பறவாயில்லை என்னால் இயன்ற அளவு என் அயலாருக்கு நலப்பணிகள் செய்வேன்" என்ற மதிமயக்கம் கொண்டவர்களாக வாழ முயற்சி செய்வோம். அதற்கான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

அனைவருக்கும் நல்லதையே செய்யும் இறைவா! நாங்கள் பொதுநல எண்ணம் கொண்டவர்களாக வாழவும்,அவ்வெண்ணத்தோடு பிறர்நலப் பணி செய்பவர்களை குறைகூறாமல் உற்சாகப் படுத்தவும் வரம் தாரும். ஆமென்.

Add new comment

1 + 11 =