பகிர்வில் வாழ்வா! | குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (02.08.2020) பொதுக்காலத்தின் 18 ஆம் ஞாயிறு            
I: எசா: 55: 1-3 ;ப.பா திபா: 145: 8-9,15-16, 17-18 ;II : உரோ: 8: 35, 37-39 ;III : மத்: 14: 13-21

"பகிர்வில் வாழ்வா! "

ஒரு ஏழைத்தாய், தன் கணவனை இழந்த நிலையில் ஆதரிப்பார் யாருமின்றி, சாலை ஓரத்தில் சிறிய குடிசை வீட்டில் தனது ஒரே மகளுடன் வாழ்ந்து வந்தார். இருவரும் தங்களின் அன்றாட உணவிற்காக, சாலையில் ஆங்காங்கே கிடைக்கின்ற காலியான பாட்டில்களை  பொறுக்கி விற்று பசியை போக்கிக் கொண்டனர். அன்று ஒருநாள், பசியால் தளர்ந்துபோன தன் மகளிடம் இன்னும் ஓரிரு பாட்டில்கள் கிடைத்தால் இன்று நாம் சாப்பிடலாம் என்று ஆறுதல் கூறிவிட்டு காலியான பாட்டில்களை தேடும் பணியை தொடர்ந்தார். அப்போது காலியான பாட்டிலுடன் குப்பைத் தொட்டியை நோக்கி வரும் இளைஞனை கண்ட அந்தத்தாய், அதை தன்னிடம் தருமாறு கேட்டுக் கொண்டே  அவனருகே சென்றார். ஆனால் அந்த இளைஞன் பின்வாங்கி ,அந்தப் பெண்ணை ஏளனமாய் பார்த்து, அவள் அசுத்தமாக இருப்பதாக கூறி அருவருப்புடன் அந்த பாட்டிலை குப்பைத் தொட்டியிலே  போட்டான். இளைஞனின் செயலால் தான் மனவேதனை அடைந்தாலும் தன் குழந்தையிடம் தான் பட்ட அவமானத்தைக் காட்டிக்கொள்ளாமல் குப்பைத் தொட்டியிலிருந்து அந்த பாட்டிலைக் கையிலெடுத்தார் அந்த தாய். 

இதற்கிடையில் தாமதமாக தன் மகன் வருவதைக் கண்ட அந்த இளைஞனின் தாய், அதற்கான காரணத்தைக் கேட்க நடந்ததை அந்த இளைஞன் கூறினான். அதைக் கேட்ட அந்த தாய் முகவாட்டத்துடன், தானும் ஒரு காலத்தில் கணவனால் கைவிடப்பட்டு பிழைக்க வழியின்றி இருந்ததாகவும், இதேபோல் சாலையில் காலிப் பாட்டிலை பொறுக்கிக் கொண்டிருந்த  ஒரு பெண் தான் தனக்கு உதவி செய்ததாகவும் கூறினார். இதைக் கேட்ட அந்த இளைஞன் தான் நடந்துகொண்ட விதத்தை நினைத்து மனம் வருந்தி, தனது வாகனத்திலிருந்து வேறு ஒரு பாட்டிலை  எடுத்துக்கொண்டு அந்த ஏழைப் பெண்ணை நோக்கி ஓடினான். அவரிடம் மன்னிப்பு கேட்டு அந்த பாட்டிலை கொடுக்க, நன்றி உணர்வுடன் பெற்றுக்கொண்ட அவர் மகிழ்ச்சியுடன் தன் குழந்தையிடம் "உணவருந்த செல்லலாம்" என்று கூறினார். அப்போது அங்கு வந்த அந்த இளைஞரின் தாய், அந்த ஏழைத்தாய் தான் தனக்கு உதவி செய்தவர் என்பதை  உணர்ந்து, அவளிடம் தான் இந்நிலைக்கு வர காரணமான அவரை தன் வீட்டினுள் ஏற்றுக்கொண்டு அவரின் வாழ்வையே புதிய திசைக்கு மாற்றினார். இருப்பதில் பகிர்வதில் அல்ல, இருப்பதை பகிர்வதில் தான் கிறிஸ்தவம் அடங்கியிருக்கிறது. 

உணவு ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவையான ஒன்று. உணவிற்காகத் தான் ஒவ்வொரு மனிதரும்  நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து வருகின்றனர். சில மனிதர்கள் விருந்து, கேளிக்கைகள் என உணவை ஒருபுறம் வீணாக்க, மறுபுறம் ஆனால் எத்தனையோ ஏழை மனிதர்கள் உண்ண உணவில்லாமல் பட்டினியால் மடிந்து வருகின்றனர். இந்த நிலை மாறும் பொழுது நிச்சயமாக மனிதம் மலரும். இன்றைய வாசகங்கள் தம்மிடம் இருப்பதை பகிர்ந்து  பிறருக்கு உணவு கொடுக்க அழைப்பு விடுக்கிறது.  

"தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற புரட்சிக்கவிஞர் பாரதியின் வார்த்தைகள் உணவை பிறரோடு பகிர்ந்து வாழ வேண்டும் என்ற சிந்தனையை கொடுக்கின்றது.  நாம் ஜகத்தினை அழிக்க  வேண்டாம்; மாறாக பசி என்று நம்மிடம் வருபவருக்கு நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வோம். 

இன்றைய முதல் வாசகத்தில் யாவே இறைவன் தன் மக்களை அழைத்து பணமின்றி, எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி  பாலும்,   திராட்சை இரசமும், உணவும் உண்டு மகிழ்ந்து மனநிறைவு கொள்ளுங்கள் என அழைப்பதை நாம்  பார்க்கிறோம். என்னிடம் வந்து வாழ்வு பெறுங்கள், தாவீதுக்கு காட்டிய அதே அன்பை நான் உங்களுக்கு காட்டுவேன் என்று ஆறுதல் மொழி கூறுகிறார்.

நற்செய்தி வாசகத்திலும் இயேசு தன் போதனைகளை கேட்க வந்த பெருந்திரளான மக்களைப் பசியுடன் இருப்பதை உணர்ந்து, பரிவுடன் கண்ணோக்கி அவர்களுக்கு உணவளிக்கிறார்.  வெறும் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார் என்றால், தன்னிடமுள்ள தாராள குணத்தை தன் போதனையால் மக்களில் உயிர்பெறச் செய்து உணவைப் பகிர செய்கிறார். 

இறை சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம் இயேசுவைப் போல பரிவு கொண்டவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இதற்கு ஒருசில விவிலியப் பகுதிகளும் முன்னுதாரணமாக இருக்கின்றன. ஆபிரகாம் தனது இல்லத்திற்கு வந்த கடவுளின் மனிதர்கள் மூவரை அன்போடு வரவேற்று அவர்களுக்கு உணவளித்தார். "ஆபிரகாம் தன் இல்லத்துக்கு வந்த மூவருக்குத் தண்ணீரும் அப்பமும்  கொடுத்தார்." (தொ.நூ: 18: 1-10). இது இருப்பதை பகிர்தலுக்கு மிகச்சிறந்த ஒரு முன்மாதிரியாக நமக்கு இருக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்விலும் நம்மை நாடித் தேடி வருகின்ற விருந்தினர்களை அன்போடு வரவேற்று அவர்களுக்கு உணவளிக்க அழைக்கப்பட்டுள்ளோம். வந்தவர்களை வரவேற்று விருந்து உபசரிக்கும் பழக்கம் இன்றைய காலகட்டத்தில் குறைந்து வருகின்றது. எனவே இப்பழக்கத்தை வளர்த்துக்கொள்ள ஆபிரகாமின் மனநிலையை நமதாக்குவோம்.

தொடக்ககால திருத்தூதர்கள் "தேவைக்கு அதிகமானதை இல்லாதவர்களோடு  பகிர்ந்துக் கொண்டனர்." (தி.ப: 2: 42-47). திருத்தூதர்களின் இந்த பகிர்வு மனப்பான்மை நமக்கு மிகச் சிறந்த பாடமாக இருக்கின்றது. இன்றைய கால கட்டத்தில் ஒரு சில மனிதர்கள் உண்ண போதுமான உணவு இல்லாமல் மடிந்து வருகின்றனர். இதற்கு முதல் காரணம் அளவுக்கு அதிகமாக இருப்பதை இல்லாதவர்களோடு  பகிர்ந்து கொள்ளாமையே ஆகும். இவ்வுலகில் வறுமை, பசி, பட்டினிக்கு காரணம் இல்லாமை அல்ல, பகிராமையே. எனவே நம்மிடம் அளவுக்கு அதிகமாக இருப்பதை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் நல்ல மனப்பக்குவத்தை நமதாக்க முயற்சி செய்வோம்.

லூக்கா நற்செய்தியில் சுட்டிக்காட்டப்படும் ஏழைக் கைம்பெண் தனது பிழைப்புக்காக வைத்திருந்த பணத்தைக் கூட கடவுளுக்கு கொடுக்க முன்வந்தார். "ஏழைக் கைம்பெண்ணோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டு விட்டார்." (லூக்: 21:4) என்ற வார்த்தைகள் ஏழைக் கைம்பெண்ணின் உச்சக்கட்டத் தியாகத்தை சுட்டிக்காட்டுகிறது. எனவே நம்முடைய அன்றாட வாழ்விலேயே ஏழைக் கைம்பெண்ணைப் போல உதவ முன் வரவில்லை என்றாலும் நம்மிடம் இருப்பதை இல்லாதவரை இனங்கண்டு பகிர முயற்சி செய்வோம்.

நல்ல சமாரியனுடைய   உதவும் மனநிலையையும் நமதாக்க அழைக்கப்பட்டுள்ளோம். "இதற்குமேல் செலவானால் திரும்பிவரும் போது கொடுத்து விடுகிறேன்." (லூக்: 10: 35) என்ற மனிதநேயச் செயல்பாடு நம்மிடம் இருப்பதை பிறருக்கு பகிர்ந்து வாழ்வு கொடுக்க அழைக்கின்றது.

பகிர்வு நிறைந்த மனநிலையை  மேற்கூறிய சில எடுத்துக்காட்டுக்கள் வழியாக நாம் அறிய வருகின்றோம். இந்த சிந்தனை இன்றைய நற்செய்தியிலும்  ஆழமாக அறிவுறுத்தப்படுகிறது.  "அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்." (மத்: 14:35) என்ற அப்பம் பகிரும் நிகழ்வு இயேசுவின் தாராள உள்ளத்தையும் இரக்கத்தையும் பகிர்வு மனப்பான்மையையும் சுட்டிக் காட்டுகிறது.

எனவே இன்றைய வாசகங்கள் சுட்டிக்காட்டுவது போல நம்மிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து, உண்ண உணவில்லாத மக்களுக்கு உணவளிக்கும் மனப்பக்குவத்தை பெற்றுக் கொள்வோம்.  அப்பொழுது நாமும், இயேசு கொண்டிருந்த பரிவு மனநிலையை கொண்டிருக்க முடியும். இத்தகைய மனநிலையை கொண்டிருக்கத்தான் நம் ஆண்டவர்  இயேசு அழைக்கிறார். பகிர்ந்து வாழ்வது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பதை உணர்ந்து, பகிர்தலில் இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளுக்கு சான்றுப்பகர்வோம். பகிர்வு மனநிலை என்பது உடல் சார்ந்த உணவை மட்டும் பகிர்வது  அல்ல; மாறாக, ஆன்மா சார்ந்த இறை உணவையும் அறிவு சார்ந்த விழிப்புணர்வையும்  பகிர்வதாகும் . உதாரணமாக, நாம் தூய வாழ்வு  வாழ்ந்து பிறரும் தூய வாழ்வு வாழ வழிகாட்டுவது.  நாம் அறிவு திறமையில் சிறந்து விளங்கும் பொழுது பிறரும் அறிவுக்கூர்மையில் சிறந்து விளங்க வழிகாட்டுவது. இவ்வாறாக,  இன்றைய நாளில்  பகிர்வின் மனநிலையை பெற்று பிறரின் உடல், ஆன்மா மற்றும் அறிவு பசியினைப்  போக்கும் கருவிகளாக மாற முயற்சி செய்வோம் . மேலும் கொரோனா தீநுண்மியின் காரணமாக உண்ண போதிய உணவு இல்லாமல் வருந்துகின்ற நம்மோடு வாழக்கூடிய மக்களுக்கு பகிர்வு மனப்பான்மையோடு உதவி செய்வோம். பகிர்தலின்  வழியாக இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர தேவையான  இறையருளை வேண்டுவோம். 

இறைவேண்டல்:
வல்லமையுள்ள இறைவா ! உண்ண உணவில்லாமல் வருந்துகின்ற எத்தனையோ மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய நல்மனம் தரும். பிறரின் தேவைகளை பூர்த்தி செய்யும் மனநிலையோடு பகிர உமது அருளை தாரும். ஆமென்.

 

Add new comment

6 + 1 =