நொறுங்குண்ட மூவர்! | பேராசிரியர் யேசு கருணா


9 ஆகஸ்ட் 2020 ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு I. 1 அரசர்கள் 19:9, 11-13 II. உரோமையர் 9:1-5 III. மத்தேயு 14:22-33

நொறுங்குண்ட மூவர்!

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் நாம் மூன்று நொறுங்குண்ட மனிதர்களைச் சந்திக்கின்றோம்:

(அ) 'என் உயிரை எடுத்துக்கொள்ளும்!' - எலியா

பாகாலின் நானூறு பொய் இறைவாக்கினர்களைக் கொன்றழித்த எலியா, சீனாய் அல்லது ஒரேபு மலையில் ஆண்டவரைச் சந்திக்கின்றார். தன்னுடைய வெற்றியின் இறுதியில் விரக்தி அடைகின்றார் எலியா. 'ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும். என் உயிரை எடுத்துக்கொள்ளும்!' எனக் கண்ணீர் விடுகிறார். ஒரு நாளைக்கு முன் பெரிய ஹீரோவாக இருந்தவர், இப்போது ஜீரோ போல ஆண்டவர் முன் படுத்துக் கிடக்கின்றார்.

(ஆ) 'என் உள்ளத்தில் பெருந்துயரம் உண்டு!' - பவுல்

புறவினத்தாரின் திருத்தூதர் என்று புகழ்பெற்ற பவுல், தன் சொந்த மக்களைத் தன்னால் மீட்க முடியவில்லையே என்றும், நற்செய்தியின் பக்கம் அவர்களைத் திருப்ப முடியவில்லையே என்றும் வருந்துகின்றார். 'என் உள்ளத்தில் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு' என அதைக் குறித்து ஆண்டவர் முன் புலம்புகின்றார். புறவினத்தார்முன் ஹீரோ போல விளங்கியவர், தன் சொந்த இனத்தாராகிய இஸ்ரயேல் மக்கள்முன் ஜீரோ போல ஆகின்றார்.

(இ) 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' - பேதுரு

ஆண்டவர்தாம் கடல்மீது நடந்து வருகிறார் என அறிகிற பேதுரு, அவரை நோக்கித் தானும் கடல்மேல் நடந்துசெல்ல விழைகின்றார். 'வா!' என்ற இயேசுவின் கட்டளையை ஏற்று நடக்கத் தொடங்கியவர்,பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்!' என அலறித் துடிக்கின்றார். மற்ற திருத்தூதர்கள்முன்னும் இயேசுவின் முன்னும் ஒரு ஹீரோ போலத் தன் பயணத்தைத் தொடங்கியவர், புயலின் முன் ஜீரோவாக மாறுகின்றார்.

நம்பிக்கை மற்றும் நற்செய்தி ஆர்வத்தின் பிதாமாகன்கள் என்றழைக்கப்படுகின்ற இம்மூவரும் நொறுங்குண்ட நிலையில் இருக்கின்றனர். அல்லது தங்களின் வாழ்வில் நொறுங்குநிலையை அனுபவித்துள்ளனர்.

என்ன வியப்பு என்றால், அவர்களின் நொறுங்குநிலையில்தான் கடவுள் செயலாற்றுகின்றார்.

எலியாவுக்கு மெல்லிய ஒலியில் தோன்றுகிறார்.

பவுலுக்குத் தன் மாட்சியை வெளிப்படுத்துகின்றார்.

பேதுருவின் கரம் பிடித்துத் தூக்குகின்றார்.

ஆக, நம் வலுவின்மையில் இறைவனின் வல்லமை செயலாற்றுகிறது என்ற நற்பாடத்தைத் தருகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

நாம் செய்ய வேண்டியது என்ன?

(அ) என்னுடைய நொறுங்குநிலை மற்றும் வலுவின்மையைப் பட்டியலிடுவது. உடல்சார், உள்ளம்சார், உறவுசார் வலுவின்மைகளைக் கணக்கெடுக்க வேண்டும் முதலில்.

(ஆ) என் நொறுங்குநிலையிலிருந்து நான் வெளிவர வேண்டும் எனில், அதற்கு எதிர்ப்புறமாக என் முகத்தைத் திருப்ப வேண்டும். கார்மேல் மலையிலிருந்து எலியா சீனாய் பக்கம் திரும்ப வேண்டும். இஸ்ரயேலரிடமிருந்து பவுல் இயேசுவின் பக்கம் திரும்ப வேண்டும். புயலின் பக்கம் இருந்து பேதுரு தன் முகத்தை ஆண்டவரின் பக்கம் திருப்ப வேண்டும்.

(இ) கடவுள் தன் வல்லமையால் என் வலுவின்மையைக் களைந்தபின், நான் முந்தைய நிலையை உதறித் தள்ள வேண்டும். எலியா போல அவருடன் நடக்க வேண்டும். பவுல் போல அவர்மேல் ஆர்வம் கொள்ள வேண்டும். பேதுரு போல அவருடன் படகில் ஏற வேண்டும்.

இதையே,

மனித நொறுங்குநிலை இறைவனின் உறுதியையும்,

மனித வலுவின்மை இறைவனின் வல்லமைiயும் தழுவிக்கொள்வதை,

இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 85) உருவகமாகப் பதிவு செய்கிறது:

'பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்.

நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.

மண்ணினின்று உண்மை முளைத்தெழும்.

விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.

நல்லதையே ஆண்டவர் அருள்வார்.

நல்வினையையே நம் நாடு நல்கும்.'

கொரேனா காலத்தில், இதுவே நம் நம்பிக்கையாகவும் எதிர்நோக்காகவும் இருக்கட்டும்!

நொறுங்கிக் கிடக்கும் நம்மை நோக்கி அவர் வருகின்றார்.

சுழற்காற்று என்னும் ஊடகங்களில் அல்ல.

நிலநடுக்கம் என்னும் அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளில் அல்ல.

தங்கள் முகங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு முகஒளி கொடுக்கும் மென்மையான தென்றல் ஒலியில் அவர் வருகின்றார்.

நம் படகிலிருந்து அவர் தூரமாகத் தெரிகிறார்.

சில நேரங்களில் அச்சுறுத்தும் கொரோனா என்னும் பேய்தான் கடவுளோ என்று பயமுறுத்துகின்றார்.

ஆனால், அருகில் அவர் வரும்போது, 'துணிவோடிருங்கள்! அஞ்சாதீர்கள்!' என்கிறார் அவர்.

அருள்பணியாளர் யேசு கருணா

பேராசிரியர், புனித பவுல் குருமடம், திருச்சி

 

Add new comment

2 + 7 =