நீர் என்னோடு இருப்பதால் - மூவொரு இறைவன்


trinity

மூவொரு இறைவன் ஒரு மறைபொருள். இந்த மறைபொருளை நாம் புரிந்து கொள்ளவும், விளக்கிச் சொல்லவும் இயலாது. இப்படிச் சொல்லி மறையுரையை முடித்துவிடலாம் என நினைத்தேன். மூவொரு இறைவன் - ஒரு அனுபவம். கடவுள் அனுபவம் பெற்ற ஒருவர் அல்லது ஒரு சமூகத்தவர் அல்லது ஒரே நம்பிக்கையைப் பகிர்கின்ற மக்கள், தங்கள் கடவுள் இப்படித்தான் என்று அனுபவித்து அதைச் சொற்களால் வடிக்க முயற்சி செய்கின்றனர். யூதர்களின் யாவே, இசுலாமியர்களின் அல்லா, இந்துக்களின் விஷ்ணு-பிரம்மன்-சிவன், புத்தர்களின் புத்தர், சைனர்களின் மகாவீரர் இப்படியாக, மனிதர்கள் கடவுளர்களையும், கடவுள்-மனிதர்களையும் கொண்டாடி வருகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூட கடவுள் என்பவர் ஒரு அனுபவமே.

'அவர் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை. மனிதர்களையும் மதிப்பதில்லை' என்று நடுவரைப் பற்றி லூக்கா எழுதும் பதிவில் அந்த மனிதர் பெற்றிருப்பதும் கடவுள் அனுபவமே. ஆக, மூவொரு இறைவன் என்பது வெறும் நம்பிக்கைக் கோட்பாடு அல்ல. மாறாக, முதலில் அது ஓர் அனுபவம். இந்த அனுபவத்தை விவிலியம் பல இடங்களில் பதிவு செய்துள்ளது: ஆபிரகாமுக்கு மெம்ரே என்ற இடத்தில், மோசேக்கு இன்றைய முதல் வாசகத்தில், யோசுவாவுக்கு எரிக்கோவில், திருத்தூதர்களுக்கு இயேசுவில் (நற்செய்தி வாசகம்), முதல் கிறிஸ்தவர்களுக்கு தூய ஆவியாரில் (இரண்டாம் வாசகம்).

என் வாழ்வில் மூவொரு இறைவன் அனுபவம் என்ற ஓர் அனுபவத்தைப் பெற எனக்கு உதவியது திருப்பாடல் 23. இத்திருப்பாடலின் பின்புலத்தில் நான் மூவொரு இறைவனைப் பற்றிய என் புரிதலை முன்வைக்கிறேன்.

முதலில், அனுபவம் என்றால் என்ன?

அனுபவம் என்பது ஒரு நிகழ்வில் பங்கேற்கும் ஒருவர், அந்த நிகழ்வை தன்னுடைய பின்புலத்திலிருந்து கண்டு, அந்த நிகழ்வு தன்மேல் தாக்கத்தை ஏற்படுத்த அனுமதித்து, அந்தத் தாக்கத்தை அறிவால் உணர்வது.

திருச்சியிலிருந்து மதுரைக்கு ஒரு பேருந்து செல்கிறது. பேருந்தில் நடத்துனர், ஓட்டுநர் உட்பட 30 பேர் இருக்கிறோம். இந்த 30 பேரும் பேருந்து நிகழ்வில் பங்கேற்கின்றனர். ஆனால், இவர்களின் பின்புலம் வேறு. நடத்துனர், ஓட்டுநர், புதிதாய் மணமுடித்த தம்பதியினர், வயதானவர்கள், குழந்தைகள், வெளிநாட்டவர் இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்புலத்தைக் கொண்டிருக்கிறார். மதுரையில் இறங்கியவுடன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை உணர்வர்: 'பஸ் ஒரு பக்கம் இழுக்குதுய்யா. கியர் சரியா விழல. ஆனா, ரோடு ஃப்ரீயா இருந்துச்சு' என்பார் ஓட்டுநர். 'இந்த பஸ்ல ஏறுன எல்லாரும் 500 ரூபாய்த் தாளை நீட்டினாங்க. சில்லறை வாங்கப் போகணும்' என சலித்துக்கொள்வார் நடத்துனர். 'இரண்டு நாளா தூக்கமில்லை. பஸ்ல நல்லா தூங்கியாச்சு' என்பார் வெளியூரில் வேலைக்குச் சென்ற ஒருவர். 'இருக்கை சாய்வா இருந்துச்சு. நான் கால அதுல தூக்கி வச்சுகிட்டேன்' என்று சொல்லும் குழந்தை. 'வாவ்! வாட் எ லவ்லி ட்ரைவ்!' என வியப்பார் வெளிநாட்டவர். 'என்னங்க! அதுக்குல்லயும் மதுரை வந்துடுச்சு!' என்று தன் கணவனின் காதில் சிணுங்குவாள் புதிதாய் மணமுடித்த காதலி-மனைவி. இதுதான் இவர்கள் பெற்ற அனுபவம்.

இரண்டாவதாக, எதற்காக நாம் கடவுளைத் தேடுகிறோம்?

நம் வாழ்வில் நாம் உணரும் பத்து எதிர்மறை உணர்வுகளில் அல்லது உணர்வுகளால் நாம் இறைவனைத் தேடுகிறோம் என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்:

1. பயம் - எதிர்காலம், நிகழ்காலம், மனிதர்கள், நிகழ்வுகள் பற்றிய பயம்.

2. கோபம் - எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாததால் எழும் கோபம்.

3. குற்றவுணர்வு - நாம் செய்த தவறு அல்லது பாவத்திற்காக எழும் வருத்தம்.

4. தாழ்வு மனப்பான்மை - தன்மதிப்பு குறைந்த நிலை.

5. பொறாமை - குறைவு மனப்பான்மை கொண்டிருத்தல்.

6. பலிகடா ஆக்கப்படுவது - எல்லாரும் என்னைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று உணர்வது.

7. ஒதுக்கப்படுதல் - பிறப்பிலிருந்து அல்லது சூழ்நிலைகளால்.

8. நிராகரிக்கப்படுதல் - தகுதி பெற்றிருந்தும் தான் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற உணர்வு.

9. விலகிக்கொள்தல் - ஒரு நபர் தானே விலகிக் கொள்தல்.

10. இறுமாப்பு - தன்னிடம் இருப்பதை விட அதிகமாகக் காட்டிக்கொள்வது. லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட் போல.

இந்த உணர்வுகளில் சில உணர்வுகளை, அல்லது எல்லா உணர்வுகளையும் உணருகின்ற ஒருவர், அவற்றுக்கு மாற்றாக அல்லது மருந்தாக நேர்முக உணர்வுகளைத் தேடுகின்றார். பயத்திற்கு மருந்தாக நம்பிக்கை, கோபத்திற்கு மருந்தாக ஏற்றுக்கொள்தல், குற்றவுணர்வுக்கு மருந்தாக மன்னிப்பு, தாழ்வு மனப்பான்மைக்கு மருந்தாக தன்மதிப்பு, பொறாமைக்கு மருந்தாக நிறைவுமனம், பலிகடா மனநிலைக்கு மருந்தாக தலைவன் மனநிலை, ஒதுக்கப்படுதலுக்கு மருந்தாக உள்வாங்கப்படுதல், நிராகரிக்கப்படுதலுக்கு மருந்தாக அங்கீகரிக்கப்படுதல், விலகிக்கொள்தலுக்கு மருந்தாக பங்கேற்றல், இறுமாப்புக்கு மருந்தாக தன்னறிவு. மேற்காணும் மருந்து உணர்வுகளை அடையும் பயணமே இறையனுபவம்.

மூன்றாவதாக, திருப்பாடல் 23 இல் மூவொரு இறைவன்.

'மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,

நீர் என்னோடு இருப்பதால்

எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்.

உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்' (திபா 23:4)

இந்த உலகில் எதிர்மறை உணர்வுகள் இருக்காது என்பது எதார்த்தம் அல்ல. ஆனால், எதிர்மறை உணர்வுகளிலும் 'நீர் என்னோடு இருக்கிறீர்' என்று தாவீது தன்னுடைய ஆண்டவரின் உடனிருப்பை உணர்கிறார். தாவீது கொண்டிருந்த பயம், கோபம், குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை, இறுமாப்பு, பொறாமை போன்ற அனைத்திலும், அனைத்தின் நடுவிலும் கடவுளின் உடனிருப்பை உணர்கின்றார். அந்த உடனிருப்பு தீங்குகளை அகற்றுவதில்லை. ஆனால், தீங்கு பற்றிய அச்சத்தை அகற்றுகின்றது.

கிறிஸ்தவ மரபில், இங்கே, 'நீர்' என்று தாவீது விளிப்பவரை, 'தந்தை' என எடுத்துக்கொண்டால், 'கோல்' என்பதை 'மகன்' என்றும், 'நெடுங்கழி' என்பதை 'தூய ஆவியார்' என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

எப்படி?

ஆடுகளை மேய்க்கும் ஒவ்வொரு ஆயனும் தன் கையில் கோல் ஒன்றையும், நெடுங்கழி ஒன்றையும் வைத்திருப்பான். இவை ஆயனின் கைகளில் இருப்பவை என்று சொல்வதை விட, இவை அவனுடைய கைகளின் நீட்சிகள் என்றே சொல்ல வேண்டும். 'ஆடுகளை வழிநடத்தவும், வரிசையை ஒழுங்கமைக்கவும், எதிரி விலங்குகளை விரட்டவும், திருடர்களை எதிர்க்கவும், சில நேரங்களில் அதை ஊன்றி அதில் சாய்ந்துகொண்டே தூங்கவும்' ஆயன் கோலைப் பயன்படுத்துகின்றான். 'நெடுங்கழி' என்பது ஆடுகளுக்கு இலை, தழைகளை மரத்திலிருந்து இழுத்துப் போடுவதற்காக, நுனியில் சிறு கத்தி கட்டப்பட்ட ஒரு நீண்ட குச்சி. ஆக, 'கோல்' ஆடுகளுக்கு 'பாதுகாப்பையும்', 'நெடுங்கழி' ஆடுகளுக்கு 'உணவையும்' தருகிறது. அல்லது, 'கோல்' என்பது 'பாதுகாப்பின்,' 'நெடுங்கழி' என்பது 'பசியாற்றுதலின்' அடையாளங்கள்.

யூதாவின் செங்கோலாகப் பிறந்த இயேசு தன்னுடைய இறப்பால் நமக்கு பாவத்திலிருந்து பாதுகாப்பை உறுதி செய்தார். தன்னுடைய அருள்வரங்களால் தூய ஆவியார் நம் பசியாற்றுகிறார்.

ஆக, ஆயன் மற்றும் ஆயனின் நீட்சிகளாக இருக்கின்ற கோலும், நெடுங்கழியும், மூவொரு இறைவன் அனுபவத்தைத் தருகின்றன. 'ஆடு மேய்ப்பவன் - கோல் - நெடுங்கழி' என மூன்றும் வேறாக இருந்தாலும், 'உடனிருப்பு - பாதுகாப்பு - பசியாற்றுதல்' என்னும் மூன்று செயல்களில் ஒருவரோடு ஒருவர் இணைந்தே இருக்கின்றனர்.

மேலும்,

திபா 23:6 இல் இது அப்படியே தலைகீழாக இருக்கிறது:

'உம் அருள்நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்.

நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்'

இயேசு தருவது அருள்நலம். ஆவியார் உறுதிசெய்வது பேரன்பு. இந்த இரண்டும் புடைசூழ்ந்து வர ஒருவர் ஆண்டவரின் (தந்தையின்) இல்லத்திற்குள் நுழைகின்றார். அங்கே நெடுநாள் வாழ்கின்றார்.

இப்படித்தான், நான் மூவொரு இறைவன் மறைபொருளை, 'உடனிருப்பு - பாதுகாப்பு - பசியாற்றுதல்' 'ஆண்டவரின் இல்லம் - அருள்நலம் - பேரன்பு' எனப் புரிந்துகொள்கிறேன்.

நிற்க. வாழ்வின் ஒவ்வொரு நன்மையான, தீமையான, ஒன்றும் புரியாத சூழலிலும், ஏதோ ஒன்றைப் பார்த்து, அல்லது ஏதோ ஒருவரைப் பார்த்து, 'நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' என்று நம்மால் சொல்ல முடிந்தால், அதுவே, அவரே மூவொரு இறைவன்.

I. விடுதலைப் பயணம் 34:4-6, 8-9 II. 2 கொரிந்தியர் 13:11-13 III. யோவான் 3:16-18

நன்றி: பேராசிரியர் முனைவர் யேசு கருணா

Add new comment

3 + 8 =