நீங்கள் பிறரை ஆசீவதிக்கவும், அங்கீகரிக்கவும் பிறந்துள்ளீர்கள்


pixabay

சீத்தல பாண்டியா என்னும் ஏழு வயது நிரம்பிய வட இந்திய சிறுமி 1990-இல் அகமதாபாத்திலிருந்து டெல்லி வரை ஸ்கேட்டிங்கில் பயணம் செய்தவர். ஏழு வயது சிறுமியின் இப்பயணத்தை வேடிக்கை பார்க்க ஆங்காங்கே கூட்டம் கூடியது. அவர்களிடம் நிதி திரட்டியபடியே தம் பயணத்தைத் தொடர்ந்தார் அந்த சிறுமி. அப்படி அவர் திரட்டிய தொகை எவ்வளவு தெரியுமா? 

11 இலட்சம் ரூபாய். இப்பெரும் தொகையை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு அப்படியே நன்கொடையாகத் தந்துவிட்டாள். அவளுடைய வாழ்வும் திறமைகளும் புற்றுநோளிகளுக்கு ஆசியாக மட்டுமல்ல, அவர்கள் ஒவ்வொருவரும் அன்பு செய்யப்படுகின்றார்கள் என்ற அங்கீகாரத்தையும் கொடுத்தது. நாம் இறைவனிடம் பொற்றுக்கொண்ட ஆசீர்வாதம் எந்த வடிவிலும் இருக்கலாம். ஆனால் அது மற்றவருக்கு ஆசீராக, அங்கீகாரமாக வேண்டும்.

இந்த உலகில் உள்ள பிரச்சனைகளுக்கு, மகிழ்ச்சியின்மைக்கு அடிப்படைக் காரணம் ஆசீரளிக்கப்படாத நிலையும், அங்கிகரிக்கப்படாத நிலையுமே (The unblessed Child) காரணம் என்று பால் டியூர்னர் என்ற உளவியலாளர் கூறுகின்றார். 

ஆம் நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் ஆசிர்வதிக்கப்பட அங்கிகரிக்கப்பட விரும்புகின்றோம். காரணம் படைப்பின் தொடக்கத்தில் கடவுளே நமக்கு ஆசீ வழங்கி, நாம் அனைவரும் அவருடைய உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற அங்கிகாரத்தையும் கொடுத்தார். அந்த ஆசீயும் அங்கிகாரமும் நமக்கு இவ்வுலகில் பற்றாக்குறையாகின்றபோதுதான் பிரச்சனைகள் உருவெடுக்கின்றன. 

இதைத்தான் ஏசாயின் ஆசிர்வாதத்தை யாக்கோபு எடுத்துச்சென்றபோது ஏசா தன் தந்தையிடம் ஒரு ஆசிராவது கிடைக்குமா என்று கதறுவதை நாம் தொடக்கநூலில் வாசிக்கின்றோம் (தொநூ. 27:34,36,38). நம்முடைய வாழ்வும் ஆசி அளிப்பதாகவும், நம்மவரை அங்கிகரிப்பதாகவும் அமைய நாம் என்ன செய்யவேண்டும். 

ஒரு சிறிய இனமாக இருந்த இஸ்ரயேல் மக்களை கடவுள் அபிரகாம் வழியாக தம் உரிமை சொத்தாக தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு நிறைவான ஆசீர் அளித்து, உலக அரசுகள் முன்னிலையில் தம் மக்கள் என்னும் அங்கிகாரத்தைக் கொடுத்தார். அவர்களும் தங்கள் வாழ்வால் அதை வெளிப்படுத்த முயன்றார்கள்.

எலிசா இறைவாக்கினர் காலத்தில்கூட (2 அர 7:7-11) அந்த இரண்டு தொழுநோயாளிகளும் எதிரிகளை விரட்டியடித்து கடவுள் கொடுத்த ஆசீயையும், அங்கிகாரத்தையும் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க விரைகின்றார்கள். தாங்கள் தொழுநோயாளிகள் என்று ஒதுக்கப்பட்ட நிலையிலும் தம்மை ஒதுக்கியவர்களுக்கு ஆசீரை எடுத்துச் செல்கின்றார்கள். 

“உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின் தேவைப்படுபவர்களுக்கு அந்த நன்மையைச் செய்ய மறக்காதே. அடுத்திருப்பவர் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே ‘போய் நாளை வா, நாளைக்குத் தருவேன்’ என்று சொல்லாதே” என்று நீதிமொழிகளின் புத்தகம் நமக்கு (3:27-28) எடுத்துரைக்கின்றது.

இயேசுவின் பிறப்பும்கூட இடையர்கள், கீழ்திசை ஞானிகள் என்று அனைவருக்கும் ஆசீராக இருந்தது. அவருடைய இருத்தல் அவரை சந்தித்த, அவரே தேடிச்சென்று சந்தித்த ஒவ்வொருவருக்கும் ஆசீராக இருந்தது. 

இயேசு தம் மக்களுக்கு அத்தகைய ஆசீரையும் கடவுளின் அன்பு பிள்ளைகள் என்ற அங்கிகாரத்தையும் கொடுக்கமுடிந்ததற்கு காரணம் அவர் தம் திருமுழுக்கின் போது தந்தையாம் இறைவனிடம் இவரே என் அன்பார்ந்த மகன், இவரில் நான் பூரிப்படைகின்றேன் என்னும் ஆசியையும் அங்கிகாரத்தையும் பெற்றுக்கொண்டதால் அன்றோ. அந்த ஆசீதான் எல்லா மக்களுக்கும் நிறைவாய் சென்றடைந்தது (மாற் 10:13-16).

இவ்வுலகில் என்றும் இருக்கின்ற இறைவன். நமக்காக தன்னைக் கொடுப்பதற்காக மனித உருகொண்டார். இருக்கிறவர் நமக்காக பிறந்திருக்கின்றார் - ஆசீரையும் அங்கீகாரத்தையும் கொடுப்பதற்காக. இந்நிலையில் நாம் நம்முடைய வாழ்வின் அடிப்படைத் தத்துவங்களைச் சிந்;தித்துப் பார்ப்போம். 

நம்முடைய இருப்பு என்றும் அழியாத இருப்பாக மாறவேண்டும் என்றால், நாம் அனைவருக்கும் ஆசிரையும் அங்கிகாரத்தையும் கொடுத்தாக வேண்டும். நம்முடைய குடும்பங்களில், வேலை செய்கின்ற இடங்களில், சந்திக்கின்ற நபர்களில் என எல்லா இடங்களிலும் ஆசியை அள்ளி தருவோம், நம்முடைய செயல்களால் ஒவ்வொரு மனிதரும் கடவுளின் பிள்ளைகள் என்ற அங்கிகாரத்தைக் கொடுப்போம். இப்பொழுதே நான் உங்களை மீட்டருள்வேன்; நீங்களும் ஓர் ஆசி மொழி ஆவீர்கள்; (செக்கரியா 8:13:).

Add new comment

8 + 0 =