நம்முடைய அடையாளம் எது? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 16 ஆம் திங்கள் 
I: மீக்: 6: 1-4, 6-8
II: தி.பா: 50: 5-6. 8-9. 16bஉ-17. 21,23
III: மத்: 12: 38-42

அடையாளம் என்பது ஒருவரை அல்லது ஒன்றினை இனம் கண்டறிய உதவும் குறி. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு ஒரு அடையாளத்தை இச்சமூகம் கொடுக்கின்றது. நம்மைப் பெற்றெடுத்தப் பெற்றோர் நமக்கு பிள்ளைகள் என்ற அடையாளத்தைத் தருகின்றனர். நாம் படிக்கும் பொழுது ஆசிரியர்கள் நமக்கு மாணவர்கள் என்ற அடையாளத்தைத் தருகின்றனர். நாம் திருமணம் செய்தபிறகு ஒரு பெண்ணோ ஆணோ கணவர் அல்லது மனைவி என்ற அடையாளத்தை தருகின்றனர். நாம் பிள்ளைகளைப் பெற்ற பிறகு நம் பிள்ளைகள் நமக்கு தாய் அல்லது தந்தை என்ற அடையாளத்தைத் தருகின்றனர். அடையாளம் என்பது மனித வாழ்வோடு பிரிக்க முடியாத ஒன்று. நம்முடைய அடையாளம் மனித மாண்பையும் மனித வளத்தையும் மனித இறையியல்பையும் சிதைக்கக்கூடியதாக இருக்கக் கூடாது.

ஆனால் நாம் இன்று சாதி, மதம், மொழி மற்றும் நாடு போன்றவற்றின் பெயரால் அடையாளங்களைத் தேடி வருகிறோம். நாம் அடையாளங்களாக நினைப்பது உண்மையான அடையாளம் கிடையாது. இந்த அடையாளங்கள் அனைத்தும் நாம் இந்த உலகத்தில் பிறந்ததால் கொடுக்கப்பட்ட அடையாளங்கள். நம்முடைய உண்மையான அடையாளம் நாம் இறைசாயலில் படைக்கப்பட்டு இறைவனின் பிள்ளையாக வாழ்வதேயாகும். நாம் இறைச்சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்பதையும் மறந்து நம்முடைய அடையாளத்தை தொலைத்து வருகிறோம். எனவே தான் நாம் இந்த உலகம் சார்ந்த அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். கடவுள் நமக்கு கொடுத்த அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கின்றோம். 

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். குடும்பம், மதம், மொழி, சாதி, இனம், நாடு படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர் போன்ற இவ்வுலகம் சார்ந்த அடையாளங்களைத் தாண்டி நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற அடையாளத்தை உயர்த்திப் பிடிக்க அழைக்கப்பட்டுள்ளோம். இத்தகைய சிந்தனையை சிந்திக்கத் தான் இன்றைய நற்செய்தி வழியாக நம் ஆண்டவர் இயேசு நம்மை அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் "போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம் " (மத். 12:38) என்று கேட்டனர். இது இயேசுவின் மேல் கொண்ட நம்பிக்கையற்றத் தன்மையை சுட்டிக்காட்டுகிறது. இயேசு வல்லசெயல்களையும் போதனைகளையும் வழங்கிய பொழுதும் அவரை ஏற்றுக்கொண்டு நம்பிக்கைக் கொள்ள மறுத்தனர். எனவேதான் நம் ஆண்டவர் இயேசு "விபச்சார தலைமுறையினரே" என மிகக் கடுமையாக சாடுகிறார்.

"யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்க ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாக இருக்கிறது " (1 கொரி. 1:22-24) என்ற இறைவசனம் யூதர்களின் வாழ்வில் கடவுளின் தூதர்களாக ஏற்றுக்கொள்ள அரும் அடையாளங்களைக் கேட்பது வழக்கம். இயேசுவை மெசியா என்று மக்கள் கூட்டத்தினர் சொல்லிக்கொண்டிருந்ததால், அதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே அடையாளம் ஒன்று செய்ய கேட்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நிறைவான அரும் அடையாளங்கள் இயேசுவின் போதனைகள் வழியாகவும் வல்லச்செயல்கள் வழியாகவும் காண்பிக்கப்பட்டு விட்டன. இருந்தபோதிலும் இயேசுவை ஏற்றுக் கொள்ள அவர்களுடைய ஆணவம் தடையாக இருந்தது. இது அவர்களின் இறை நம்பிக்கையற்ற தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. எனவேதான் இயேசு அவர்களை விபச்சார தலைமுறையினர் என கூறுகிறார். 

விபச்சார தலைமுறையினர்என கூறுவதன் இறையியல் பின்னணி என்னவென்றால் பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களுக்கும் கடவுளுக்குமான உறவு திருமண உறவாக உருவகப்படுத்தப் பட்டிருந்தது. கடவுளை கணவராகவும், இஸ்ரயேல் கடவுளுக்கு மனைவியாக உருவகம் செய்திருந்தார்கள். இஸ்ரேல் மக்கள் பல நேரங்களில் கடவுளுடைய அரும்பெரும் செயல்களை கண்டும் அவரை நம்பாது வேற்றுத் தெய்வச் சிலைகளுக்கு பலி செலுத்தினர். இது கணவராகிய கடவுளுக்கு மனைவியாகிய இஸ்ரேல் நம்பிக்கை துரோகம் செய்ததால் இயேசு அவர்களை விபச்சார தலைமுறையினர் என கூறுகிறார். 

இப்படிப்பட்ட நம்பிக்கையற்ற தன்மை இயேசு வாழ்ந்த காலத்திலும் மறைநூல் அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் இருந்தது. இயேசுவினுடைய இறையாட்சிப் பணியை சோதிக்கும் நோக்குடனே அவர்கள் அடையாளம் கேட்டதால், இயேசு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் கொடுக்கப்படாது எனக் கூறினார். இஸ்ரேல் இனத்தாராகிய யோனா பிற இனத்தாராகிய நினிவே மக்களுக்கு மனம் மாறி மன்னிப்பை பெற இறைவாக்கு உரைத்தவுடன், கடவுளின் வார்த்தையை நம்பினார். ஆனால் யூத இனத்தில் பிறந்த இயேசு போதனைகள் வழியாகவும் வல்ல செயல்கள் வழியாகவும் இறையாட்சி பற்றிய அறிவித்த பொழுதும் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு மனம் மாறவில்லை. 

நாமும் நம்முடைய அன்றாட வாழ்விலே நம் ஆண்டவர் இயேசுவின் போதனைகளைப் பற்றி அறிந்துகொள்ள பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. ஆனால் அதை ஏற்றுக்கொண்டு கடவுளை நம்பி நாம் அவரின் பிள்ளைகள் என்ற அடையாளத்தை உணர்கின்றோமா? என சிந்திப்போம் . கடவுளின் பிள்ளைகளாக நாம் அனைவரும், சமத்துவமாக அவரின் பிள்ளைகளாக வாழ படைக்கப்பட்டவர்கள். எனவே இவ்வுலகம் சார்ந்த அடையாளங்களான குடும்பம், மதம், மொழி, சாதி, இனம், நாடு படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர்போன்ற அடையாளங்களைக் களைந்து, நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற அடையாளத்தோடு ஒருவரை ஒருவரை ஏற்றுக்கொண்டு அன்பு செய்வோம். நாம் வாழும் இந்த கிறிஸ்தவ வாழ்வை மதம் சார்ந்த ஒன்றாகக் கருதுவதைத் தாண்டி, மனிதநேயம் சார்ந்த வாழ்வியலாக கருதி நம்மையே இறைவனிடம் ஒப்புக் கொடுப்போம். 

 இறைவேண்டல் 

வல்லமையுள்ள இறைவா! நீர் எங்களுக்கு தந்துள்ள கொடைகளையும் வல்ல செயல்களையும் அனுபவித்துவிட்டு உம்மைப் புறக்கணிக்காமல் இருக்க நல்ல இறைநம்பிக்கையை தாரும். நாங்கள் உம்முடைய சாயலில் படைக்கப்பட்ட பிள்ளைகள் என்பதை உணர்ந்து அனைவரையும் சகோதர சகோதரியாக ஏற்றுக்கொள்ளத் தேவையான மனப்பக்குவத்தை தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 1 =