நமது அன்பு பரவுகிறதா? தேங்கி நிற்கிறதா?| குழந்தை இயேசு பாபு | Daily Reflection


spreading love

பொதுக்காலத்தின் முதலாம் புதன் - I. எபி: 2:14-18; II. திபா: 105:1-2,3-4,6-7,8-9; III. மாற்: 1:29-39

ஒரு அரசு அதிகாரி நீதியுடனும் நேர்மையுடனும் நற்காரியங்களும் அதிக சீர்திருத்த செயல்பாடுகளையும் செய்து வந்தார். அதனாலேயே அவர் அடிக்கடி பணியிடம் மாற்றப்பட்டார். ஆனால் அவர் செல்லும் போதெல்லாம் மனமகிழ்ச்சியுடன் செல்வார் செல்லுமிடமில்லாம் நற்காரியங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நிறைந்தவராய்.

நதி ஓரிடத்தில் தேங்கியிருந்தால் அதன் நோக்கம் நிறைவுறாது. அதுபோலத்தான் அன்பு ஓரிடத்தில் தேங்கியிருந்தால் அதில் பலனில்லை. இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம்  வேறு பகுதிகளுக்கெல்லாம் சென்று தன்னுடைய பணியை செய்யவேண்டுமெனவும்  அதற்காகவே அவர் வந்ததாகவும் கூறுகிறார். இயேசு அன்பு நிறைந்தவர். நன்மைகள் செய்ய வேண்டுமென்ற ஆர்வமுடையவர். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் அனைவரும் கடவுளின் அன்பையும் அருளையும் பெற வேண்டுமென்று விரும்பியவர். பாவிகளும், பிற இனத்தவரும், வரி தண்டுபவர்களும் கூட கடவுளுடைய இரக்கத்தைப் பெற வேண்டும் என எண்ணியவர். எனவேதான் அவர் நாடோடி போல ஊர் ஊராகவும், தெருக்கள்தோறும் அலைந்து தன் உடல்  களைப்பை கூட பொருட்படுத்தாமல் பணி செய்தார் என விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். 

பொதுவாக பணியிட மாற்றங்கள் தரப்படும்  போது நம்மில் பலர் அதனை விரும்புவதில்லை. தெரியாத இடம்,அறியாத நபர்கள்,  என அனைத்தையும் எண்ணி பயப்படுகிறோம். ஆனால் கொஞ்சம் மாற்றி யோசித்துப் பார்த்தால், புதிய ஊர், புதிய உறவுகள் நட்புகள் கிடைப்பதோடு நம்முடைய அன்பைக் காட்டவும்  நற்காரியங்களைச் செய்யவும் நமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்கள் அவை. இயேசு ஒரே இடத்தில் தெரிந்தவர்களுக்கு மட்டும் பணி செய்திருந்தால் மற்ற ஊரில் உள்ள மக்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்காது. தன் அன்பைத் தேக்கி வைக்கமால்  பலருக்கு பகிர்ந்த அன்னை தெரசா கன்னியர் மடத்தின் அறையிலிருந்து வெளியேறி தெருக்களில் அலைந்து தேவையில் உள்ளோரைத் தேடி உதவியால்தான் நாம் அனைவரும் இன்று அவரை அறிகிறோம். 

இச்சிந்தனைகள் நமக்குத் தரும் செய்தி என்ன? நம்முடைய அன்பும் நற்செயல்களும் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, சில மனிதர்களுக்கு மட்டுமோ இல்லாமல் பல இடங்களுக்கும் பல மனிதர்களுக்கும் சென்று அடைய வேண்டும். அதற்கு நாம் நம்முடைய சுயநலனைக் களைந்து பயணிக்க வேண்டும். நம்முடைய எண்ணங்களும், பார்வையும் பரந்து விரிந்தவையாக இருக்க வேண்டும். இதனால் நாம் துன்பம் அடைய நேரிட்டாலும், நம்மைப் போல் துன்பப்படுபவர்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அதைக் கருதி நம் அன்பைப் பகிர வேண்டும்.  இத்தகைய அன்பு வாழ்வு வாழ இறைவனிடம் வரம் கேட்போம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா!
செல்லும் இடமெல்லாம் அன்பை வழங்கி நன்மைகள் செய்து கொண்டே சென்ற இயேசுவைப் போல நாங்களும் எம் அன்பை எமது நற்செயல்கள் மூலம் பலருக்கும் வழங்க அருள் தாரும். ஆமென்.

Add new comment

10 + 5 =