நண்பரைப் போல பேசும் கடவுளின் குரலை நான் கேட்கிறேனா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 17 ஆம்  செவ்வாய்  
I: வி.பா:   33: 7-11, 34: 5-9, 28
II : தி.பா: 103: 6-7, 8-9, 10-11, 12-13
III:  மத்:  13: 36-43

கடவுள் மோசேயிடம் ஒரு நண்பரைப் போல பேசுகிறார் என்பதை முதல் வாசகத்தில் நாம் வாசிக்கிறோம். கடவுளைச் சந்திக்க மோசே ஒரு கூடாரத்தை அமைக்கிறார், அது "சந்திப்பின் கூடாரம்" என்று அழைக்கப்படுகிறது. உலகைப் படைத்த கடவுள் படைப்புப் பொருளான  மனிதனின் நிலைக்கு  இறங்கி வந்து ஒரு நண்பனிடம் பேசுவதைப் போல பேசுகிறார் அல்லது உரையாடுகிறார் என்பதை அறிவது உண்மையிலேயே நமக்கு வியப்பாகத்தான் இருக்கிறது. 

அதேபோல்  கடவுளின் மகனான  இயேசுவும்  மக்களிடம் அன்பாகவும், பணிவாகவும், நட்பாகவும் பேசுகிறார். அவர் தம்முடைய சீடர்களுக்கு அவருடைய போதனைகளையும் உவமைகளையும் போதிப்பதோடு மட்டுமல்லாது  அதைத் தெளிவுபடுத்தி விளக்கவும் நேரம் ஒதுக்குகிறார். அவர்களின் நலனில் அக்கறை கொள்கிறார்.
நாம் அனைவரும் நம்முடைய நண்பர்களின் வார்த்தைகளைக் கேட்கவும் அவர்களோடு உரையாடி உறவாடவும் ஆர்வமாக இருக்கிறோம். ஒருபோதும் நேரத்தைக் கணக்குப்பார்ப்பதில்லை. அவர்கள் பேசும்போது நாம் ஒருபோதும் சலிப்படைவதில்லை. ஆனால் நம்மிடம் பேசும் கடவுளின் குரலைக் கேட்க நாம் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம் என்பதை சிந்திக்க நாம் இன்று அழைக்கப்பட்டுள்ளோம்.

கடவுள் ஒவ்வொருநாளும்  மனிதர்கள்,  நிகழ்வுகள், இறைவேண்டல் மற்றும் அவருடைய உயிரளிக்கும் வார்த்தைகள் மூலம்  தினமும் நம்மிடம் பேசுகிறார். நாம் கேட்கிறோமா? இயேசு இன்று நற்செய்தியில் "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்று கூறுகிறார். நம் காதுகளை கடவுளிடம் திருப்புவோமா? நாம் அவ்வாறு செய்தால், அவருடைய வார்த்தைகள் நம்மை பலனளிக்கும் வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் .

மோசே நாற்பது நாட்கள் உணவு உண்ணாமலும் தண்ணீர்  அருந்தாமலும் கடவுளோடு தன் நேரத்தை செலவழித்தார்.அவ்வாறே நாமும் ஒரு நண்பரைப் போல நம்மிடம் பேசும் நம் கடவுளோடு நேரத்தை செலவிட முயற்சிப்போம். அவ்வாறு செலவிட்டால் அலகையால் நம் மனமென்னும் நிலத்தில் கெட்டவிதைகள் விதைக்கப்படாது. கடவுளோடு உறவாடத் தயாரா?

இறைவேண்டல்

அன்பான இறைவா ஒரு நண்பரைப் போல் என்னிடம் பேசும் உமது உயிருள்ள  வார்த்தைகளைக் கேட்டு அதன்படி வாழ எனக்கு அருள் புரியும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

3 + 0 =