தோற்பதால் வெல்தல் | Win the Crowd


13 Sunday of Oridinary Time

'வின் தெ க்ரவ்ட்!' (Win the Crowd) 'மக்களை வெற்றிகொள்!'

தன்னிடம் உள்ள மாக்ஸிமுஸ் என்னும் கிளாடியேட்டர் அரங்கத்திற்குள் செல்லுமுன் இப்படிச்சொல்லிதான் அவனுடைய தலைவன் வழியனுப்புவான்.

'வின்னிங்!' 'வெற்றி கொள்தல்!' - நாம் அனைவரும் விரும்பும் ஒன்று.

வெற்றிகொள்தலில் இருவகை உண்டு. முதல் வகையில், ஒருவர் தன்னுடைய எதிராளியைத் தாழ்த்தி அல்லது அழித்து வெற்றி பெறுவார். இந்த வகை வெற்றியில் நிறைய இரத்தம், காயம், கண்ணீர், அழுத்தம் இருக்கும். இரண்டாம் வகையில், ஒருவர் தன்னுடைய எதிராளியை அல்லது அடுத்தவரை உயர்த்தி வெற்றி பெறுவார். இந்த வகை வெற்றியில் நிறைய மகிழ்ச்சி, நிறைவு, கருணை இருக்கும். 

அல்லது, முதல் வகை வெற்றி, எடுப்பதால் பெறும் வெற்றி. இரண்டாம் வகை வெற்றி, கொடுப்பதால் பெறும் வெற்றி.

இந்தக் கொரோனா காலத்தில் நம் நாட்டில் செயல்படும் அரசு, முதல் வகை வெற்றிக்கே முயற்சிக்கிறது. சரியான திட்டமிடுதல் இல்லாமல் தொடங்கப்பட்ட ஊரடங்கு மற்றும் லாக்டவுன், மருந்து, கவச உடை, சோதனைப் பெட்டி வாங்கியதில் ஊழல், பி.எம் கேர்ஸ் என்ற பெயரில் வேகமாக சேகரிக்கப்பட்ட ஆனால் மூடியே வைக்கப்பட்ட பணம், மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைகளைத் தனியார்வயப்படுத்துதல் என்ற நிலையில் செயல்பட்டு கொரோனா மேல் வெற்றிகொள்ள நினைக்கிறது. இம்முறைகளால் அரசுக்கும் வெற்றி இல்லை, மக்களுக்கும் வெற்றி இல்லை.

இன்னொரு பக்கம், சாதாரண மக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள் போன்றவர்கள் தங்களையே கொடுத்து மக்களை வெற்றிகொள்கிறார்கள்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு, கொடுப்பதால் பெறும் வெற்றியை, அல்லது இழப்பதால் பெறும் வெற்றியை, அல்லது தோற்பதால் பெறும் வெற்றியைப் பற்றிப் பேசுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 அர 4:8-11,14-16) எலிசா வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம். எலிசா சூனேம் என்ற நகருக்கு வருகின்றார். அங்கிருந்த பணக்கார மற்றும் செல்வாக்குநிறை பெண்மணி அவரை அழைத்து விருந்தோம்பல் செய்கிறார். தொடர்ந்து அவருக்கு உணவளிக்கிறார். ஒரு கட்டத்தில், 'நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று கருதுகிறேன். ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும்போது இங்கே ஓய்வெடுக்கட்டும்' என்று தன் கணவனிடம் சொல்கின்றார். 

இங்கே நமக்கு மூன்று விடயங்கள் தெரிகின்றன: (அ) பெயரில்லா இந்தப் பெண்ணின் பரிவு - அதாவது, எலிசாவுக்கு என்ன தேவை என்பதை உணர்கிறார். அடுத்தவரின் தேவை என்ன என்பதை அறிதல்தான் பரிவு. பரிவு வந்தால் தான் பகிர்வு சாத்தியமாகும். (ஆ) எலிசா மேல் பரிவுகொள்வதோடு நிறுத்தாமல் அந்தப் பரிவை பகிர்வின் செயல்பாடாக மாற்றுகிறாள். எலிசாவுக்கென மாடியில் ஓர் அறையையும், படுக்கை, மேசை, விளக்கு போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறாள். (இ) பெண்கள்தான் இல்லத்தின் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். ஏறக்குறைய நம் முந்தைய தமிழ்ச் சமூகம் போல. குறிப்பாக, வள்ளல் பாரி ஆண்ட பறம்பு நாட்டில் குடும்பத்தலைவியர்களே வீட்டின் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். (ஈ) எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஓர் ஆண்டவரின் மனிதர் என அறிகிறார். 

ஆக, பரிவு கொண்ட ஒருத்தி, பகிர்ந்து கொள்ளத் துணிந்து, முன்பின் தெரியாத ஒரு அந்நியரை ஆண்டவரின் அடியவர் புனிதர் என வரவேற்கின்றார். இப்பெண்ணின் இச்செயலுக்கு எலிசா ஏதாவது கைம்மாறு செய்ய நினைக்கின்றார். 'அரசரிடமோ படைத்தலைவரிடமோ ஏதாவது பரிந்து பேச வேண்டுமா?' (காண். 2 அர 4:13) எனக் கேட்கின்றார். அப்பெண் மறுக்கிறாள். 'வேறு எந்த விதத்தில் உதவி செய்யலாம்' என நினைக்கின்ற எலிசா, குழந்தையின்மை என்னும் அவளது குறையைப் போக்குகின்றார்: 'அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்!' குழந்தையின்மை என்பது கடவுளின் சாபம் என்று மக்கள் கருதிய அக்காலத்தில், கடவுளின் சாபத்தை நீக்குகின்றார் எலிசா.

இங்கே, சூனேமியப் பெண் தன்னிடம் உள்ளதை இழந்ததால் எலிசாவின் நல்மனத்தினை வெற்றிகொள்கின்றார். எலிசாவின் கொடையினை வெற்றிகொள்கின்றார். தன்னுடைய ப்ரைவஸி, வசதி, பொருள்கள் என அனைத்தையும் கொடுத்தார். ஆனால், அப்படி இழந்ததால் கடவுளின் மனிதரின் நல்மனத்தை வெற்றிகொண்டார். அவருடைய வசதிகளும், பணமும், செல்வாக்கும் பெற்றுத்தராத குழந்தைப்பாக்கியத்தை கைம்மாறாகப் பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 10:37-42) மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கின்றது:

அ. சீடத்துவத்தின் அடையாளம் சிலுவை சுமத்தல்

ஆ. இயேசுவை ஏற்றுக்கொள்தல்

இ. இயேசுவின் சீடர்களுக்கு (சிறியோருக்கு) உதவுதல் மற்றும் அதன் கைம்மாறு

நற்செய்தி வாசகத்தின் மையமாக இருக்கின்ற வாக்கியம் நம் கவனத்தை ஈர்க்கிறது: 'தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.'

இழத்தலில்தான் ஒருவர் வெற்றி பெறுகிறார் அல்லது காத்துக்கொள்கிறார் என்பது இயேசுவின் புரட்டிப் போடுதலாக இருக்கிறது.

இதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

என்னிடம் 1000 ரூபாய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். தேவையில் இருக்கும் ஒருவர் திடீரென்று என்னைத் தேடி வருகிறார். அவரிடம் நான் என்னிடம் உள்ள 1000 ரூபாயைக் கொடுத்துவிடுகிறேன். அப்படி என்றால் எனக்கு 1000 ரூபாய் இழப்பு தானே? 

இல்லை!

அந்த 1000 ரூபாயை நான் இழக்கவில்லை. மாறாக, அந்த 1000 ரூபாயை நான் இன்னொருவருடைய கையில் கொடுத்து, இப்போது நான் அவரைப் பிடித்துக்கொள்கிறேன். ஆக, என்னிடமிருக்கும் 1000 ரூபாய் அப்படியே இருப்பதுடன், என் கைக்குள் இன்னொரு நபரும் இருக்கிறார். அப்படி என்றால் எனக்கு வெற்றிதானே! நான் எதையும் இழக்கவில்லைதானே!

இந்த உலகில் நாம் எதையும் இழக்கவும் முடியாது! எதையும் பெறவும் முடியாது! இன்னொருவரிடம் இருந்த ஒன்று என்னிடம் சற்று நேரம் இருக்கிறது. என்னிடம் சற்று நேரம் இருக்கும் ஒன்று இன்னொருவரின் கைக்கு மாறுகின்றது. 

சூனேம் பெண் செய்ததும் அதுதான். எலிசாவுக்கு உணவு தந்ததால் அவருடைய பாத்திரம் காலியாகிப்போகவில்லை. மாறாக, தன் பானையில் இருந்த சோற்றை எலிசாவின் வயிற்றுக்கு மாற்றிக்கொள்கின்றார். பாத்திரத்தில் இருந்தால் சோறு கெட்டுப் போயிருக்கும். ஆனால், எலிசாவின் வயிற்றை அவள் சோற்றால் நிரப்பியதால், அவளின் வயிற்றை இறைவன் குழந்தையால் நிரப்புகின்றார். 

இப்படி நாம் பார்க்கத் தொடங்கிவிட்டால், நாம் அனைத்தையும் அனைவருக்கும் கொடுத்துக்கொண்டேதான் இருப்போம்.

இந்நாள்களில் நான், திரு. சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய, 'வேள்பாரி' என்னும் புதினத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பறம்பு நாட்டுத் தலைவன் பாரியைப் பற்றியது அது. 'முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி' என்று நாம் கேள்விப்பட்டிருப்பதை இவரைக் குறித்தே.

அந்த நிகழ்வு இப்படி நடக்கிறது.

பாரிக்கும் ஆதினிக்கும் திருமணம் நடக்கிறது. ஆதினி குறிஞ்சி நாட்டின் கால் பதித்த முதல் நாளில் அவளுக்கு தன் நாட்டின் ஆச்சர்யமான தீக்கக்கி மரத்தைக் காட்ட இரவில் அவளை அழைத்துச் செல்கின்றார். தன் தேரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டுச் செல்லும் இவர்கள் அடுத்த நாள் மதியம்தான் அந்த இடம் வருகிறார்கள். அதற்குள் ஒரு முல்லைக்கொடி இவர்களுடைய தேரின் சக்கரத்தில் படர ஆரம்பிக்கிறது. மெதுவாகக் கொடியை விலக்கித் தேரை நகர்த்தலாம் என்கிறாள் ஆதினி. ஆனால், பாரிக்கு அப்படிச் செய்ய மனமில்லை. தன்னுடைய தேரை தன்னுடைய பொருளாக அல்லது உடைமையாகப் பார்க்காமல், காட்டில் நிற்கும் ஒரு மரமாகப் பார்க்கிறார். அப்படியே அதை விட்டுவிட்டு நகர்கிறார். ஆக, மரத்தின் நீட்சிதான் தேர். தேரின் எச்சம்தான் மரம். இதை அவர் கைக்கொண்டதால் அப்படியே தேரை 'இழக்க' துணிகின்றார். அவர் தேரை அன்று இழந்ததால் இன்று மாபெரும் புகழை அடைந்தவராக மாறுகின்றார். ஆக, இழத்தல் ஒருபோது இழப்பு அல்ல.

இழப்பதில் இன்னொரு சிக்கல் இருக்கிறது.

அதாவது, எனக்கு இதைவிட அதிகம் கிடைக்கும் என நினைத்து நான் இழப்பது. 

எடுத்துக்காட்டாக, எனக்கு மேலிருக்கும் அதிபர் அல்லது ஆயர் அவர்களுக்கு நான் ஒன்று செய்தால், அது எனக்கு வேறொரு வகையில் கிடைக்கும் அல்லது இன்னும் அதிகம் கிடைக்கும் என்ற மனப்பான்மையில் இழப்பது தவறு. ஏனெனில், அப்படிச் செய்யும் போது நான் எதையும் இழக்கவில்லை. மேலும், அவர்களை நான் எனக்காகப் பயன்படுத்திக்கொள்பவன் ஆகின்றேன். மனிதர்கள் ஒருபோதும் பயன்பாட்டுப்பொருள்கள் அல்ல. அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அந்த நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவர்கள். அதனால்தான், இயேசு, 'இறைவாக்கினரை இறைவாக்கினர் என்பதற்காகவும், நேர்மையாளரை நேர்மையாளர் என்பதற்காகவும்' என வரையறுக்கின்றார்.

இழத்தலையும் பெறுதலையும், அல்லது தோற்பதால் வெல்தலையும் இரண்டாம் வாசகம் (காண். உரோ 6:3-4,8-11) உருவகமாகச் சொல்கிறது. கிறிஸ்து இயேசுவோடு நம் பாவத்திற்கு இறந்த அல்லது நம் பாவத்தை இழந்த நாம் அவரோடு சேர்ந்து உயிர்க்கின்றோம். நம் இறப்பு நமக்கே வாழ்வாக மாறுகிறது.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், சூனேம் பெண் தன் வீட்டின் சிறு பகுதியையும், தன் பாத்திரத்தின் சிறு உணவையும் இழக்கின்றார். ஆண்டவரின் அருளைப் பெற்றுக்கொள்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில், பாவத்தின் வழியாக நாம் இறக்கின்றோம். அந்த இறப்பே புதுவாழ்விற்கான கதவுகளை நமக்குத் திறந்துவிடுகிறது.

நற்செய்தி வாசகத்தில், உயிரை இழப்பவர் பெறுகின்றார். தன் உறவுகளை இழப்பவர் அவற்றைவிட பெரிய உறவைக் கண்டுகொள்கின்றார். சீடர்களுக்கு உதவி செய்பவர் கைம்மாறு பெறுகிறார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வைக்கும் சவால்கள் எவை?

அ. தோற்கப் பழகுதல்

அன்றாடம் நாம் கொரோனோ முன்னால் தோற்றுக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய தனிமனித விலகலும், சமூக விலகலும், ஊரடங்கும், முகக்கவசமும், சானிட்டைசரும், நம் மருந்துகளும், நம் அறிவியல் கண்டுபிடிப்புக்களும் நமக்கு வெற்றியைத் தரவில்லை. ஆனால், நாம் தோற்கும் ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்பு வந்துகொண்டேதான் இருக்கிறது. செத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம், தடுப்பு மருந்து வெற்றி என்று நல்ல செய்திகள் நம் காதுகளுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. நாம் இவ்வளவு நாள்கள் இழந்தது நம்மிடம் தேவையில்லாதவற்றைத்தான். இவை யாவும் இல்லாமல், ஏன் இறை யாவும் இல்லாமலும் நான் இருக்க முடியும் என்று நமக்குக் கற்பித்து வருகிறது கொரோனா. ஆக, தொடர்ந்து தோற்கப் பழகுதல் வேண்டும். தோற்றலும் வெற்றியே என உணர்தல் நலம்.

ஆ. தாராள உள்ளம்

தேவையில் இருப்பவர்களை நான் என்னுடைய நீட்சியாகப் பார்க்கும் உள்ளம் வரவேண்டும் என்றால், 'ஒவ்வொரு விருந்தினரும் ஒரு ஆசீர்' என உணர வேண்டும். சில இல்லங்களில் இன்றும் திண்ணைகள் வைத்துக் கட்டுகின்றனர். சிலர் விருந்தினர்களுக்கென்று சிறப்பான பாத்திரங்களையும் தட்டுக்களையும் அறைகளையும் ஒதுக்கி வைக்கின்றனர். சிலர் அன்றாடம் ஒரு கை எக்ஸ்ட்ரா அரிசி சமைக்கிறார்கள். கைகளை விரித்துக் கொடுப்பதால்தான் இந்த உலகை நம் கைக்குள் வைத்துக்கொள்ள முடியும் எனக் கற்றுத் தந்தவர் கிறிஸ்து பெருமான். சூனேம் பெண்ணின் தாராள உள்ளத்தை நாமும் கொண்டிருக்க முயற்சிக்கலாம்.

இ. சிலுவை சுமத்தல்

சூனேம் பெண்ணுக்கு எலிசாவின் இருப்பு சில நேரங்களில் துன்பமாக, இடையூறாக இருந்திருக்கலாம். நம் வாழ்விலும் சில சுமைகள் சிலுவைகளாக அழுத்தலாம். ஆனால், சிலுவைகள் சுமக்காமல் வெற்றி இல்லை. நாம் சுமக்கும் கொரோனா என்னும் கொடிய சிலுவை விரைவில் மறைந்து போகும். சிலுவையைச் சுமப்பவர் வேறெந்தச் சுமையையும் தன்மேல் வைத்துக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு கட்டத்திலும் நான் இழக்கத் துணியும்போது இழத்தலும் இன்பம் என அறிவேன்.

ஒருவர் மற்றவருக்கு பேரன்பு காட்டுதல் நலம். ஏனெனில், திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல, 'ஆண்டவரின் பேரன்பை நாம் எந்நேரமும் பாடுகிறோம்' (திபா 89:1).

28 ஜூன் 2020 பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு (I. 2 அரசர்கள் 4:8-11,14-16 II. உரோமையர் 6:3-4,8-11 III. மத்தேயு 10:37-42).

அருள்பணியாளர் யேசு கருணா

பேராசிரியர், புனித பவுல் குருமடம், திருச்சி

Add new comment

5 + 2 =