தூய ஆவியாரின் வழிநடப்போமா! குழந்தைஇயேசு பாபு


பொதுக்காலத்தின்  28 ஆம் சனி - I.  எபே: 1:15-23; II. திபா: 8:1-2.3-4.5-6; III. லூக்: 12:8-12

நம்முடைய நம்பிக்கை உயிர் பெறுவது கோட்பாடுகளில் அல்ல, மாறாக செயல்பாடுகளில். "உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே" (யாபு:2:26) என்று யாக்கோபு தனது திருமடலில்  கூறியுள்ளார். நம்முடைய நம்பிக்கை வாழ்வு நிறைவுள்ள வாழ்வாக இருக்க வேண்டுமெனில் நம்முடைய நம்பிக்கை செயல்பாட்டோடு  முடியவேண்டும். தொடக்க கால கிறிஸ்தவர்கள் தாங்கள் பெற்ற நம்பிக்கையின் பொருட்டு இயேசுவின் மீது ஆழமான அன்பு கொண்டிருந்தனர். இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளை ஆழமாக வாழ்ந்து பிறருக்கும் ஆணித்தனமாக வல்லமையோடு அறிவித்தனர். நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்தனர். தங்களுடைய நம்பிக்கையை  செயல்பாட்டின் வழியாக வெளிப்படுத்தினர். அப்பொழுது அவர்களுக்கு துணையாக இருந்தவர் தூய ஆவியார் மட்டுமே.

 தூய ஆவியாரைப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் இவ்வுலகில் அழியக்கூடிய உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அழியாத ஆன்மாவிற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பர். அப்பொழுது உலக வாழ்வில் துன்பப்பட்டாலும் தேவையான துணிச்சலைத் தூய ஆவியார் கொடுப்பார். நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை நிறைவாக வாழும் பொருட்டு தூய ஆவியாரின் வழிகாட்டுதலை பெற்று நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகரும் பொழுது இம்மண்ணுலக வாழ்வில் துன்பங்கள் பல பட்டாலும் விண்ணுலக வாழ்விலே நிறைவான மகிழ்ச்சியை நாம் பெற முடியும். இதை வாழ்ந்து காட்டியவர்கள் தான் நம் திருஅவையின் மறைசாட்சிகள். தொடக்க காலத்தில் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்காக தன்னுடைய உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டை பெரிதாக மதித்து தங்கள் உயிரையே தியாகம் செய்து இரத்தம் சிந்தினர். இதற்கு துணையாக இருந்தவர் தூய ஆவியார் மட்டுமே. எனவேதான் மறைச்சாட்சியாக மரித்த மனிதர்கள் மாமனிதர்களாகவும் புனிதர்களாகவும் போற்றப்படுகின்றனர். இத்தகைய சான்று பகரக்கூடிய  வாழ்வை வாழத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

ஒரு ஊரில் இரண்டு குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அந்தக் குடும்பங்களில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. போதிய பொருளாதாரம் இல்லாததால் பல இடையூறுகளும் தடைகளும் இருந்தன.இந்த இரு குடும்பங்களில் ஒரு குடும்பத்தினர்  துன்பங்களின் மத்தியிலும் பெரு மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். மற்றொரு குடும்பம் துன்பத்தில் மூழ்கி  மனஉளைச்சலுக்கு உள்ளாகி  மகிழ்ச்சியற்ற வாழ்வில் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இந்த குடும்ப தலைவிக்கு ஐயம் எழுந்தது. எப்படி இந்தத் துன்பங்களை அந்த குடும்பத்தினர்  மகிழ்ச்சியோடு எதிர்கொள்கின்றனர் . நாங்களும் அவர்களும் ஒரே மாதிரிதான் துன்பப்படுகிறோம். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். எங்களால் மகிழ்ச்சியோடு இருக்க முடியவில்லை? என்ற கேள்வி அவரிடத்தில் எழுந்தது. இவற்றை மற்றொரு குடும்பத்தின் குடும்பத்தலைவிடம் கேட்டபோது "நாங்கள் ஒவ்வொரு நாளும் தூய ஆவியாரின் துணையோடு எங்கள் வாழ்வை தொடங்குகின்றோம். "ஓ தூய  ஆவியே! எங்கள் நாவை சுத்தப்படுத்தும்.உமது சுட்டெரிக்கும் அக்கினியால்  எங்களை .தூய்மைப்படுத்தும்" என்ற மன்றாட்டை ஒவ்வொரு நாளும் சொல்லி தூய ஆவியாரின் அருளைப் பெற்று வருகிறோம்.

 இந்த மன்றாட்டு தொடக்ககால திருஅவையில் புனித ஸ்தேவானுக்கு துன்பத்தின் மத்தியிலும் மகிழ்ச்சியை கொடுத்தது போல எங்களுக்கும் அந்த மகிழ்ச்சியை  கொடுக்கிறது. நாம் துன்பத்தின் மத்தியில் மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமெனில் தூய ஆவியாரின் துணையில் வழி நடக்க வேண்டும். தூய ஆவியாரை மூச்சுக் காற்றாக உள்ளிழுக்க வேண்டும். தூய ஆவியாரின் வழிநடத்துதல் நம் உள்ளத்திலும் உடலிலும் இருக்கும் பொழுது நம் வாழ்வு ஆவியால் வழிநடத்தப்படும். அப்பொழுது நாம்  பேசுகின்ற ஒவ்வொரு பேச்சும் சுவையாகவும் இனிமையாகவும் வளமையாகவும் மாறும். நம்முடைய வாழ்வு நமக்கு மகிழ்ச்சியாகவும் பிறருக்கு மகிழ்ச்சியாகவும் அமையும் என்று பதில் கூறினார். இதைக்கேட்ட மற்றொரு குடும்பத்தலைவி துன்பத்தில் மத்தியிலும் துணிவோடு மகிழ்ச்சியாக இருக்க தூய ஆவியார் மட்டுமே வழிகாட்டமுடியும் என்பதை அறிந்துகொண்டு ஒவ்வொரு நாளும் தங்கள் குடும்பத்தை தூய ஆவியாரிடம் ஒப்படைக்க தொடங்கினார். அன்று முதல் அந்த குடும்பத்தினர் துன்பத்தின் மத்தியிலும் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். 

இத்தகைய வாழ்வுதான் கிறிஸ்துவ மனநிலையோடு வாழக்கூடிய வாழ்வு. கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல இன்பமும் துன்பமும் நிறைந்தது. இன்பத்தையும் துன்பத்தையும் ஒரேமாதிரியாக எதிர்கொள்ள பகுத்தறியும் ஞானத்தைக் கொடுக்க வல்லவர் தூய ஆவியார் மட்டுமே. எனவேதான் இன்றைய நற்செய்தி வழியாக நம் ஆண்டவர் இயேசு தூய ஆவி யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். தூய ஆவிக்கு எதிரான, மன்னிக்க முடியாத குற்றத்தை நமக்கு உறுதிப்படுத்துகிறார். இயேசு தூய ஆவியின் வல்லமையால் பல்வேறு வல்ல செயல்களைச் செய்கிறார். இயேசு குணப்படுத்துகின்ற வல்லமையை செய்கின்ற பொழுது  இதைக்கண்ட திருச்சட்ட அறிஞர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் ஒரு சில யூதர்கள் இவரின் வல்லமையை தீய ஆவியின்  சக்திக்கு ஒப்பிட்டனர். கடவுளின் அருளையும் ஆசியையும் தீய ஆவிக்கு ஒப்பிட்டனர். "மானிட மகனுக்கு ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரை பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்" என்று இயேசு கூறி தூய ஆவியின் வழி நடக்க வேண்டும் என்ற ஆழமான கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

தூய ஆவியார் மட்டுமே நம் வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் மனத் திடத்தையும்  அருளையும் கொடுக்க முடியும். நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை வழங்குபவராக தூய ஆவியார் இருக்கிறார். "ஆண்டவரே, ஆண்டவரே, உமது ஆவியை அனுப்பி மண்ணகத்தில் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்" (திபா: 104:1) என்ற வார்த்தைகள்  தூய ஆவியார் நம்மைப் புதுப்பித்து வழிநடத்துகிறார் என்ற சிந்தனையை  வழங்குகின்றன.

யூதர்களுக்கு அஞ்சி கதவை மூடி வைத்திருந்த சீடர்கள் நடுவே வந்து, அவர்களுக்கு அமைதியை அளித்து, அவர்கள் மீது ஊதி தூய ஆவியை பொழிந்து, அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கும் வல்லமையை உயிர்த்த ஆண்டவர் வழங்கினார். திருத்தூதர்கள் தூய ஆவியின் வல்லமையைப் பெந்தகோஸ்து நாளிலே பெற்ற பிறகு எந்த யூதர்களுக்கு அஞ்சினார்களோ, அதே யூதர்களிடத்தில் வல்லமையோடும் ஆற்றலோடும் இயேசுவைப்பற்றி நற்செய்தியை அறிவித்தனர். இப்படிப்பட்ட வாழ்வு வாழ்வது தான் தூய ஆவியோடு வழி நடக்கக்கூடிய வாழ்வு. நம்முடைய சிந்தனை சொல் செயல் அனைத்தும் தூய ஆவியால் வழிநடத்தப்பட அவரோடு வழி நடப்போம். அதற்கு தேவையான தூய வாழ்வையும், இறை நம்பிக்கையையும், அன்பான உள்ளத்தையும், தாழ்ச்சி உள்ள மனநிலையையும் பெற்றுக் கொள்ள முயற்சி செய்வோம். அவ்வாறு வாழும் பொழுது நம்முடைய வாழ்வு தூய ஆவியால் வழிநடத்தப்படக் கூடிய வாழ்வாக மாறும். அத்தகைய மனநிலையை பெற தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

வல்லமையுள்ள இறைவா! எங்களை எந்நாளும் வழிநடத்த தூய ஆவியாரை எமக்கு கொடையாக அளித்ததற்காக நன்றி செலுத்துகிறோம். தூய ஆவியின் வல்லமையையும் ஆற்றலையும்  உணர்ந்து தூய வாழ்வில் வழி நடக்க அருளைத் தாரும். தூய ஆவிக்கு எதிராக நாங்கள் பேசிய நேரத்திற்காக மன்னிப்பு வேண்டுகிறோம். தூய ஆவியால் எந்நாளும் எங்களை திடப்படுத்தி நல்ல  கிறிஸ்தவர்களாக வாழ எங்களை வழிநடத்தும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 14 =