துணிவோடு வாழ்வதா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 18 ஆம் செவ்வாய் 
I: ஏரே: 30:1-2, 12-15, 18-22
II:  திபா: 102:16-18, 19-21, 29, 22-23
III: மத்:  15:1-2, 10-14

"துணிவோடிருங்கள் நான்தான் அஞ்சாதீர்கள்" (மத். 14:27). 
வாழ்கை என்னும் கடலில் எழும் சவால்கள் எனும் புயலை எதிர்கொள்ள நம்பிக்கை மிகமிக அவசியம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது.
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"
என்று பாடினானன் மகாகவி. நாம் வாழும் இன்றைய சூழ்நிலையில் எதற்கெடுத்தாலும் பயம்தான். ஒன்றுமில்லாதவனுக்கும் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வதற்கும் பயம். அதிகம் உள்ளவனுக்கு பாதுகாப்பாய் வாழவேண்டுமே என்ற பயம். மாணவர்களுக்கு தேர்வு பயம். பெண்களுக்கு தனியாய் நடப்பது பயம். இப்படி பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். 

ஆனால் நம்மையே நன்றாக ஆய்ந்து பார்த்தோமானால் பல வேளைகளில் நம்முடைய அச்சங்கள் அனைத்தும் அர்த்தமற்றவைகளாகவே இருக்கின்றன். சிறு சிறுகாரியங்களுக்கு கூட பயந்து வாழ்வதாலோ என்னவோ வாழ்வில் ஏற்படுகின்ற முக்கியமான சவால்களை சந்திக்கத் துணிவின்றி மூழ்கிப்போய்விடுகின்றோம். எங்கே சென்றது நம் இறைநம்பிக்கை? நம்மிடம் தன்னம்பிக்கை என்ற ஒன்று உள்ளதா? என்ற நம்மையே கேட்டுப்பார்த்து அவற்றை வளர்த்துக்கொண்டால், வாழ்வின் எந்த துன்பமும் சவாலும் நம்மை மூழ்கடிக்காது. எனவே இறை நம்பிக்கை நம்மிடம் இருக்கும் பொழுது, நிச்சயமாக நாம் துணிவோடு செயல்பட முடியும். 

இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு "அஞ்சாதீர்கள்" என்ற வார்த்தைகளைக் கூறி துணிச்சலை நமக்கு கொடுக்கிறார். இன்றைய நாளில் நம் ஆண்டவர் இயேசு நாம் துணிச்சல் மிகுந்தவர்களாக வாழ வேண்டுமென அழைப்பு விடுக்கிறார். "அஞ்சாதீர்கள்" என்ற வார்த்தையைக் கேட்டவுடன் என்னோடு பள்ளியில் படித்த ஒரு நண்பரை நினைவுக்கு வருகின்றது. நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது எங்கள் பள்ளியில் பேச்சுப் போட்டியானது நடத்தினார்கள். நான் அந்த பேச்சு போட்டியில் கலந்து கொள்ள என்னோடு படித்தவர்கள் ஊக்க மூட்டினர். ஆனால் எனக்கு மிகுந்த பயமாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன் வரை ஒரு முறை கூட மேடையில் ஏறியதில்லை. என்னுடைய வகுப்புத் தோழர் எனக்கு நம்பிக்கையூட்டி "அஞ்சாதீர் உன்னால் முடியும்" என்று கூறினார். அப்பொழுது எனக்குள்ளே ஒரு துணிச்சல் பிறந்தது. அந்தத் துணிச்சலோடு நானும் உற்சாகமாக பேசினேன். இறுதியில் பேச்சுப்போட்டியில் முதல் பரிசை முதல் முதலாக பெற்றேன். அன்றுமுதல் எல்லா பேச்சுப் போட்டிகளிலும் கலந்து கொள்ள தொடங்கினேன். 

நம் ஆண்டவர் இயேசுவும் அஞ்சி நடுங்கிய சீடர்களுக்கு "துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்று ஒரு நண்பரைப் போலசீடர்களைத் தட்டிக்கொடுத்து துணி உள்ளவர்களாக நற்செய்திக்கு சான்று பகர அழைப்பு விடுத்தார். மனிதர்கள் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. மாறாக, கடவுளுக்கு மட்டும் அஞ்சும் பொழுது, கடவுள் நமக்கு நிறைவான ஆற்றலையும் ஞானத்தைக் கொடுப்பார். பழைய ஏற்பாட்டில் "கடவுளுக்கு அஞ்சி நடப்பது உண்மையான ஞானம்" எனக் காண்கின்றோம். 

நம்முடைய அன்றாட வாழ்விலே ஞானத்தோடு நம் வாழ்வை வாழ்ந்திட, கடவுளுக்கு மட்டும் அஞ்சி இவ்வுலகம் சார்ந்தவற்றிற்கு அஞ்சாமல் துணிவோடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் வல்ல செயல்களை சீடர்கள் கண்டிருந்தும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளாமல் சீடர்கள் இருந்தனர். எனவே சீடர்கள் கடலில் நடந்து வந்த இயேசுவைப் பார்த்து அஞ்சியதால் "அஞ்சாதீர்கள்" என்று கூறி துணிவோடு வாழ வழிகாட்டினார். இதன் வழியாக நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் இயேசுவின் பிரசன்னம் நம்மோடு இருக்கும் பொழுது நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. நாம் அஞ்சு பொழுது துணிவை இழந்துவிடுகிறோம். எனவே துணிவும் மிகுந்தவர்களாக வாழ இயேசுவினுடைய உடனிருப்பை உணர்வோம். இறையச்சத்தின் வழியாக அதற்கு தேவையான ஞானத்தைப் பெற்றுக் கொள்வோம். 

 இறைவேண்டல் 
நம்பிக்கையின் நாயகனே வாழ்வில் புயலாக எழும் சவால்களின் போது உம் உடனிருப்பை உணர்ந்து நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிபெறும் வரம் தாரும். மேலும் நாங்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக வாழ்ந்து துணிவுடன் வாழ தேவையான ஞானத்தைப் பெற்றுக் கொள்ள அருள்தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 1 =