துணிச்சலோடு இறைப்பணியா! | குழந்தைஇயேசு பாபு


அன்றாட இறைவார்த்தை பகிர்வு (01.08.2020)

இன்றைய வாசகங்கள் (01.08.2020)
பொதுக்காலத்தின் 17 ஆம் சனி           
I.  எரே: 26: 11-16, 24
II. திபா: 69:14-15,29-30, 32-33
III. மத்: 14: 1-12

"துணிச்சலோடு இறைப்பணியா!" 

நாம் இந்த உலகத்தில் மனத் துணிவோடு வாழ்ந்து உண்மையை உரக்க கூறவும் நீதியை நிலைநாட்டவும் ஒழுக்கம் நிறைந்த வாழ்வு வாழவும் அழைக்கப்பட்டுள்ளோம்.  நாம் வாழும் இந்த உலகத்தில் உண்மை பொய்யாகவும், நீதி அநீதியாகவும், ஒழுக்க வாழ்வு ஒழுக்கமின்மையாகவும் மாறி வருகின்றன. இந்த நிலை மாறி நீதியையும் உண்மையையும் ஒழுக்கமான வாழ்வையும் நாம் வாழும் சமூகத்தில் நிலைநாட்ட, இறைவாக்கினர் எரேமியா போலவும் திருமுழுக்கு யோவானை போலவும் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம்.  

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  நேர்மையின் சிகரமாக கருதப்படுகின்ற திருவாளர் சகாயம்  ஐஏஎஸ் அவர்களின்  உரையைக் கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" என்ற உயர் குறிக்கோள் கொண்ட உரையை கேட்ட பொழுது நேர்மையாக வாழ்வது என்றால் என்ன? என்ற வினாவிற்கு பதில் கிடைத்தது. இவர் இன்றைய சமூகத்தின் அநீதிகளுக்கு துணை போகாமல், உண்மையோடும் நேர்மையோடும் செயல்பட்டார். இவ்வாறு செயல்பட்டதால் பெரும்பணத்தை முதலீடு செய்யும் முதலாளிகளாலும் அரசியல் பின்புலம் உள்ள தலைவர்களாலும் பெரிதும் எதிர்க்கப்பட்டார், விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டார், மிரட்ட லுக்கு ஆளானார், பலமுறை பணிமாற்றம், இடமாற்றம் பெற்றார். இருந்தபோதிலும் மனத் துணிச்சலுடன் அநீதிகளையும் உண்மையற்ற செயல்பாடுகளையும் எதிர்த்தார். இதுதான் உண்மையான சாட்சிய வாழ்வு. இவரின் நேர்மையுள்ள வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பவர் இவரின் மனைவியாவார்.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே நேர்மை, உண்மை உள்ளவர்களாக வாழும் பொழுது பல பிரச்சனைகள், எதிர்ப்புக்கள், சவால்கள், சங்கடங்கள் வரும். அவற்றை இறை நம்பிக்கையோடும்  மனத்துணிவோடும் எதிர்க்க, எ‌தி‌ர்‌கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்குத் துணிவை தருகின்றன. 

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா "நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பியுள்ளார். எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனை பற்றி ஆண்டவர் தம் மனதை மாற்றிக் கொள்வார்." (எரே: 26: 12-13) என்று கூறுகிறார். இவ்வார்த்தைகள் எரேமியாவின் துணிச்சல் மிகுந்த இறைவாக்குரைத்தலைச் சுட்டிக்காட்டுகிறது.  இந்த ஊனுடலை ஒட்டியிருக்கும் உயிரை ஒரு முறை மட்டுமே எடுக்க  முடியும் இவ்வுலகம் சேர்ந்த மன்னருக்கும், தலைவர்களுக்கும், மக்களுக்கும் அஞ்சாமல் துணிச்சலோடு உண்மை, நேர்மை மற்றும் நீதி  போன்றவற்றை பற்றி இறைவாக்குரைத்தார். இதன் காரணமாக இறைவாக்கினர் எரேமியா எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், துணிச்சலோடு இறைவனைப் பற்றிய உண்மையை பறைசாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

இன்றைய நாள்  நற்செய்தி  வாசகமும் திருமுழுக்கு யோவானின் துணிச்சல் மிகுந்த உண்மையான நீதியுள்ள வாழ்வுக்கு சான்றாக இருக்கின்றது. ஏரோது அரசன் தனது சகோதரரான பிலிப்பின் மனைவியை தன் மனைவியாக கொண்ட ஒழுக்கமற்ற நிலையை துணிச்சலோடு சுட்டிக்காட்டினார்.  நேர்மைக்கும் உண்மைக்கும் தன்னுடைய பணி வாழ்வின் வழியாகச் சான்று பகர்ந்து இயேசுவின் வருகைக்கு மக்களை ஆயத்தப்படுத்தினார். திருமுழுக்கு யோவானை மக்கள், "மெசியா" எனக் கருதினாலும் அதை ஏற்றுக்கொள்ளாது, இயேசுவே, உண்மையை நீதியை வழங்கி உலகை மீட்க வந்தவர்  என்று சுட்டிக்காட்டினார் . இவர் உண்மையையும் நேர்மையையும் ஒழுக்கநெறி வாழ்வையும் மக்களுக்கு துணிச்சலோடு அறிவுறுத்தி மனம்மாறி நற்செய்தியை நம்ப வழிகாட்டியுள்ளார்.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் இந்த உலகைச் சார்ந்த உடலை கொல்ல முடிந்த ஆட்சித் தலைவர்களுக்கும் மக்களுக்கும் அஞ்சாமல், உண்மைக்கும் நேர்மைக்கும் நீதிக்கும் முன்னுரிமை கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம் . அவ்வாறு வாழும் பொழுது நாம் பல துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அத்துன்பங்களையெல்லாம் இறைவனின் துணையோடு எதிர்கொள்ளும் பொழுது கடவுள் நமக்கு நிறைவான வாழ்வை கொடுப்பார். அவர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள விண்ணுலகப் பேரின்ப வாழ்வைக் கொடையாகக் கொடுப்பார். மனத்துணிச்சலுடன் இறைவனின் பெயரால் எரேமியா மற்றும் திருமுழுக்கு யோவானைப் போல பணிச் செய்யத் தேவையான அருளை வேண்டுவோம்.  

இறைவேண்டல் :
நீதியின் நாயகனே இறைவா! எங்கள் உடலை மட்டும் கொல்ல முடிந்த மனிதர்களுக்காக அஞ்சாமல்,  உண்மையோடும் நீதியோடும் நேர்மையோடும் எங்கள் வாழ்வில் பணிசெய்ய உமது அருளை தாரும். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து இம்மண்ணுலகத்தில் இறையாட்சி மலர எங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தும். அதற்குத் தேவையான தூய ஆவியினுடைய கொடைகளையும்  கனிகளையும் தாரும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

10 + 8 =