திருப்பாடுகளின் வெள்ளி | யேசு கருணா | Daily Reflection


திருப்பாடுகளின் வெள்ளி; I. எசாயா 52:13-53:12; II. எபிரேயர் 4:14-16, 5:7-9; III. யோவான் 18:1-19:42

2015ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. 'மக்களுக்குப் பரிச்சயமான அடையாளங்கள் எவை?' என்தே ஆய்வின் தலைப்பு. 'மெக்டொனால்ட்ஸை' குறிக்கும் 'எம்' என்ற ஆங்கில எழுத்து, ஆப்பிள் நிறுவனத்தின் 'கடித்த ஆப்பிள்', ஸோனி நிறுவனத்தின் வளைந்த கோடு, என பல அடையாளங்களோடு இணைத்து, 'சிலுவை' என்ற அடையாளமும் தாளில் குறிக்கப்பட்டிருந்தது. ஆய்வின் இறுதியில் அதிகம் பரிச்சயமான அல்லது அறிமுகமான அடையாளம் 'எம்' என்று கண்டுபிடிக்கப்பட்டது. வெறும் 30 சதவிகித மக்களே சிலுவை என்றால் என்ன என்பதை அறிந்தவர்களாக இருந்தனர்.

இன்று நாம் அருவருப்பான ஒன்றைப் பார்த்தால் 'ஹாரிப்ல்' என்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உரோமையர்கள் 'எக்ஸ் க்ருசே' ('சிலுவையிலிருந்து') என்பார்கள். மனிதர்கள் பார்வையில் அருவருப்பான ஒன்றை இன்று நாம் மகிமையின் சின்னமாகக் கொண்டாடுகிறோம்.

சிலுவை நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. எங்கு பார்த்தாலும் சிலுவை நம் கண்முன் நிற்கிறது.

கணிதத்தில் க்ராஸ் என்பது கூட்டல் அல்லது பெருக்கல்.

அல்ஜிப்ராவில் க்ராஸ் என்பது வெறுமை.

டிராஃபிக்கில் க்ராஸ் என்றால் ஆம்புலன்ஸ்.

பேட்டரியிலும், இரத்த வகையிலும் க்ராஸ் என்பது பாஸிட்டிவ்.

அடையாளங்களில் க்ராஸ் என்றால் 'தடை செய்யப்பட்டது'

ஏ பி சி டி இயில் க்ராஸ் என்றால் எக்ஸ்

சாலைகளில் க்ராஸ் என்றால் சந்திப்பு

உரோமை எழுத்தில் க்ராஸ் என்றால் பத்து

விடைத்தாளில் க்ராஸ் என்றால் தவறு

ஏடிஎம் பின்னை பதிவு செய்யும் போது க்ராஸ் என்றால் சீக்ரெட்

இப்படி திரும்பும் எல்லாப் பக்கமும் தெரியும் க்ராஸ் நமக்குச் சொல்வது என்ன?

'சிலுவை' என்றால் என்னைப் பொறுத்தவரையில் 'வாழ்வின் அடுத்த பக்கம்.'

இளமையிலிருந்து பார்க்கும் அதன் அடுத்த பக்கம் முதுமை சிலுவை.

பிறப்பின் சிலுவை இறப்பு.

விருப்பின் சிலுவை வெறுப்பு.

உடல்நலத்தின் சிலுவை நோய்.

நாம் ஒன்றை எடுக்கும்போதே அதன் அடுத்த பக்கமும் வருகிறதே. அந்த அடுத்த பக்கம்தான் சிலுவை. ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தை திறக்கும் நாம் அதன் கடைசி பக்கத்தில் அதை மூடித்தான் வைக்க வேண்டும். திரைப்படத்தின் தொடக்கத்தைப் பார்க்கும் நாம் அதன் முடிவையும் வாசிக்க வேண்டும். ஒன்றைத் தொடங்கும்போது அதன் முடிவும் நம் முன் வந்துவிடுகிறது. அந்த அடுத்த பக்கம்தான் சிலுவை.

சிலுவை என்றால் நம் நொறுங்குநிலை.

சிலுவை என்றால் நம் உறுதியில்லாத நிலை.

சிலுவை என்றால் நம் உடையும்நிலை.

சிலுவையை நோக்கிய நம் பார்வையை மூன்று நிலைகளில் விவிலியம் பதிவு செய்கிறது:

அ. 'இந்தச் சிலுவை உமக்கு வேண்டாம்' என இயேசுவிடம் சொல்கிறார் பேதுரு.

சில நேரங்களில் நாமும் சிலுவை வேண்டாம் என நினைக்கிறோம். ஆனால் இது எதார்த்தம் அல்ல.

ஆ. 'இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கும்' என்கின்றனர் வழிப்போக்கர்கள்.

இந்நிலையில் நாம் சிலுவையிலிருந்து பாதியிலிருந்து ஓடிவிட நினைக்கிறோம்.

இ. 'நீர் அரசுரிமை பெற்று வரும்போது என்னை நினைவுகூறும்' என்கிறார் நல்ல கள்வன்.

இவர்தான் சிலுவையை சரியாகப் புரிந்தவர். சிலுவையை அரியணையாகவும், இயேசுவை அரசராகவும், அவரின் முள்முடியை அரச கிரீடமாகவும், கையின் ஆணிகளை ஆயுதங்களாகவும் பார்க்க இவரால் மட்டுமே முடிந்தது.

ஆக, சிலுவையின் மறுபக்கத்தையே பார்க்க வைத்தவர் இவரே.

வாழ்வின் மறுபக்கம்தான் சிலுவை.

நம் வாழ்வில் சிலுவை என்னும் நொறுங்குநிலையை, உறுதியில்லாத நிலையை, உடையும்நிலையை நாம் எப்படி எதிர்கொள்வது?

(அ) மௌனத்தால்

இன்றைய முதல் வாசகத்தில் துன்புறும் ஊழியன் நான்காம் பாடலிலிருந்து வாசிக்கக் கேட்டோம். இங்கே, தான் அடிக்கப்பட்ட போதும், நொறுக்கப்பட்டபோதும் அமைதி காக்கின்றார் ஊழியன். இங்கே அமைதி என்பது வெறும் 'ஸைலன்ஸ்' அல்ல. மாறாக, எதிர்ப்பைப் பதிவு செய்யும் போராட்டக் குரல். பேச மறுப்பதும் ஒரு வகையான போராட்டமே. அந்த அமைதி எதிரியை அவமானம் அடையச் செய்யும்.

(ஆ) பலி பீடமாக மாற்றுவதால்

இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு சிலுவையில்தான் தலைமைக்குருவாக மாறுவதாக எழுதுகின்றார். சிலுவையை இயேசு இப்படித்தான் பார்த்தார். தன்னையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தார். அதையே பாவம் போக்கும் பலியாகக் கடவுள் ஏற்றுக்கொண்டார்.

(இ) எல்லாம் நிறைவேறிற்று

இப்படிச் சொல்லி இயேசு உயிர்விடுவதாக யோவான் நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். தன் வாழ்வின் இறுதிவரை தன் வாழ்வைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தார் இயேசு. இன்று நாம் நம்முடைய வாழ்வை நம் கட்டுக்குள் வைத்திருக்கிறோமா அல்லது மற்றவர்களின் விமர்சனங்களுக்கு உட்படுத்தி, மற்றவர்கள் சொல்வது போல, செய்வது போல வாழ முயற்சி செய்கிறோமா?

இறுதியாக, நவம்பர் 18, 1998 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் லிங்கன் சென்டரில் வயலின் கச்சேரி ஒன்று நடந்தது. அதனால் என்ன? அரங்கம் என்றால் கச்சேரிகள் நடக்கத்தானே செய்யும். அன்றைய நாளில் வயலின் வாசிக்க இட்ஸாக் பெர்ல்மன் என்பவர் அழைக்கப்பட்டிருந்தார். இவர் பெரிய வயலின் இசைக் கலைஞர். ஆனால், போலியோ நோயினால் அவதியுற்றதால் மிகவும் சூம்பிய கால்களை உடையவர். கைத்தடிகள் இன்றி அவரால் நடக்க முடியாது. அரங்கமே நிறைந்த அன்று தன் கைத்தடிகளை ஊன்றி மேடைக்கு வந்தார் இட்ஸாக். அனைவரின் கண்களும் இவர்மேல் இருந்தன. சபையோரை வணங்கிவிட்டு வயலினைக் கையில் எடுத்த இவர் வாசிக்கத் தொடங்கினார். வாசிக்கத் தொடங்கிய நொடியில் வயலினின் நான்கு கம்பிகளில் ஒன்று அறுந்து தொங்கியது. அரங்கம் சற்றென அதிர்கிறது. 'இவர் மறுபடியும் கைத்தடிகள் கொண்டு கீழே இறங்கி வந்து இதைச் சரி செய்து வாசிக்கத் தொடங்குவார்' என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், ஒரு நொடியும் இடைவெளி இல்லாமல் வெறும் மூன்று கம்பிகளைக் கொண்டு நாற்பத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து அழகாக வாசிக்கின்றார் இட்ஸாக். அரங்கமே எழுந்து நின்று அவரை வாழ்த்துகிறது. 'ஒரு கம்பி அறுந்தவுடன் நீங்கள் அதை மாற்றிவிட்டுத்தான் வாசிப்பீர்கள் என்று நாங்கள் நினைத்தோம்' என்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதற்கு இட்ஸாக், 'நல்ல இசைக்கலைஞனின் இசை அவனுடைய கையில் இருக்கும் வீணையில் அல்ல. அவனிடம்தான் இருக்கிறது' என்றாராம்.

வெறும் மூன்று கம்பிகளை வைத்து வாசித்த இட்ஸாக் போல, வெறும் மூன்று ஆணிகளில் தொங்கி கடவுளையும் மனுக்குலத்தையும் இணைக்கும் அழகிய ஸிம்பொனியை வாசித்தார் இயேசு.

நிராகரிக்கப்படுதல் (ரிஜெக்ஷன்), கைவிடப்படுதல் (அபேன்டன்மன்ட்), காட்டிக்கொடுக்கப்படுதல் (பிட்ரேயல்), மறுதலிக்கப்படுதல் (டினையல்), அவமானப்படுத்தப்படுதல் (ஹ்யுமிலியேஷன்), சிலுவையில் அறையப்படுதல் (க்ருஸிஃபிக்ஷன்) என்று அவருடைய வாழ்வு உறுதியற்ற நிலையில், வலுவற்ற நிலையில், நொறுங்குநிலையில் இருந்தாலும், அவர் குறுக்கு வழிகளைத் தேடவில்லை, எதார்த்தத்தை மறுக்கவில்லை, தப்பி ஓடவில்லை. 

எதிர்கொண்டார்.

இன்று நான் காணும் சிலுவை என்னில் எழுப்பும் உணர்வு என்ன?

'இதோ! மனிதன்!' எனத் தொங்குகிறார்.

அந்த மனிதனில் நான் என்னைக் காண்கிறேன்.

'நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்' என்னும் வரிகள், 'நான் யார்? நான் யாருக்காக?' என்ற கேள்விகளை என் முன்னே வைக்கின்றன.

அவற்றுக்கான என் பதிலிறுப்பு என்ன?

'மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்.

நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்.

அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.'

(எசாயா 53:4-5)

Add new comment

2 + 8 =