திருத்தூதர்களா நாம்! | குழந்தைஇயேசு


பொதுக்காலத்தின் 30 ஆம் புதன் - I. எபே: 2:19-22; II. திபா 19:1-2.3-4; III. லூக்: 6:12-19

விடிந்ததும் இயேசு தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்'' (லூக்கா 6:13) என்ற வசனம் திருத்தூதருக்குரிய வாழ்வு வாழ நமக்கு அழைப்புவிடுக்கின்றது. திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவினுடைய பணியைச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். அதற்கு நாம்  நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும். எனவேதான் புனித அன்னை தெரசா  கடவுள் என்னை ஒரு வெற்றியாளராக இருக்க அழைக்கவில்லை. மாறாக நம்பிக்கைக்குரியவராக இருக்க அழைத்தார்' என்று கூறியுள்ளார்.  திருத்தூதர்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கைக்குரியவர்களாக வாழ்ந்தனர்.

இன்றைய நாளில் அன்னையாம் திருஅவை திருத்தூதர்களான புனிதர்கள் சீமோன் மற்றும் யூதாவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது . இவர்களைப் பற்றி அதிக அளவில் விவிலியத்தில் இல்லாவிட்டாலும் இவர்கள் தாங்கள் பெற்ற அழைப்பிற்கு ஏற்றவாறு வாழ்ந்தனர். இறுதிவரை ஆண்டவர் இயேசுவின்  நற்செய்தி மதிப்பீடுகளைக் கடைபிடித்து நம்பிக்கைக்குரியவர்களாக வாழ்ந்தனர். தாங்கள் நம்பிய அந்த நற்செய்தி மதிப்பீட்டை இயேசுவை அறியாத மக்களுக்கு அறிவித்து தங்களுடைய இரத்தத்தைச் சிந்தி மறைச்சாட்சியாக மரித்தனர்.

நம் வாழ்வை பயனுள்ள வகையில் வாழ எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்று தேவையில்லை; மாறாக, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டை நம்பிக்கையோடும், நம்பகத்தன்மையோடும் வாழ்ந்தாலே போதும். இதைத்தான் இன்றைய விழா நாயகர்கள் செய்து காட்டினர். நாம் எவ்வாறு நம்பிக்கைக்குரிய திருத்தூதர்களாக வாழ்வது? என்ற கேள்விக்கு இன்றைய நற்செய்தியில் பதில் இருக்கின்றது.

முதலாவதாக ஆண்டவர் இயேசு திருத்தூதர்களாகிய பன்னிருவரை  தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகக் கடவுளிடம்  வேண்டுவதற்காக ஒரு மலைக்கு சென்று இரவெல்லாம் செலவிட்டார் என்று வாசிக்கின்றோம். இயேசு இறைமகனாக இருந்தபோதிலும் இறைவேண்டல் செய்வதன் வழியாக தேர்ந்து தெளியும் ஆற்றலைப் பெற்றார். இயேசுவின் சீடர்கள் பலர் இருந்தும் தன்னுடைய இறையாட்சிப் பணி தொடர்ந்து இம்மண்ணில் வாழ்வாக்கப்பட வேண்டுமென்று பன்னிரண்டு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்தார். திருத்தூதர்களும் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு பெந்தக்கோஸ்து நாளிலே தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட பிறகு வல்லமையோடு நற்செய்தி அறிவித்தனர். இதற்கு அடிப்படையாக இருந்தது இறைவேண்டல். அன்னை மரியாவும் திருத்தூதர்களும் இறைவேண்டல் செய்கின்ற பொழுது தான் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டனர். எனவே நாமும் இறைவேண்டலில் நிலைத்திருக்கும் பொழுது தூய ஆவியின் வல்லமையைப் பெற்று தேர்ந்து தெளியும் அறிவோடு நற்செய்தியை நம்பிக்கையோடு அறிவித்து நம்பிக்கைக்குரியவர்களாய் வாழ முடியும்.

இரண்டாவதாக இயேசு இயேசு 12 திருத்தூதர்களைத்  தோ்ந்தெடுத்த நிகழ்வு இன்றைக்கு தரப்பட்டிருக்கிறது. எதற்காக இயேசு இந்த சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். அதற்கான காரணம் மாற்கு நற்செய்தி 3: 14 – 15 ல் தரப்பட்டுள்ளது. 1. தம்மோடு இருக்க 2. நற்செய்தியைப்பறைசாற்ற அனுப்பப்பட 3. பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே. இயேசு அழைத்ததன் நோக்கத்தை திருத்தூதர்கள் தூய ஆவியின் வல்லமையைப் பெற்றுக்கொண்ட பிறகு மிகச் சிறப்பாகச் செய்தனர். தமது உயிரையும் பெரிதாக பொருட்படுத்தாமல் மிகுந்த வல்லமையோடு நற்செய்தியை அறிவித்தனர்.

இயேசுவின் மூன்றாண்டு பணிக்காலங்களில் அவரோடு உடனிருந்து அவர் செய்த வல்ல செயல்களையும் போதனைகளையும் கண்டு தங்களை தயார்படுத்தினர். தாங்கள் அனுபவித்த அந்த இறை நம்பிக்கையை இயேசுவை அறியாத பல இடங்களில்  அறிவித்து மிகச் சிறப்பான நற்செய்திப் பணியை செய்தனர். அப்பணியின் வழியாக எல்லோருக்கும் மீட்பு செய்தியை அறிவித்தனர். தங்கள் உயிரை விடவும் நற்செய்தியை மிகுந்த அன்பு செய்து மிகச் சிறப்பான வகையிலே அறிவித்தனர். மக்களை வாட்டி வதைத்த தீய ஆவியை இயேசுவின் பெயரால் விரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு நலமான வாழ்வை வழங்கினர். இதைத்தான் இன்றைய புனிதர்களான சீமோன் மற்றும் யூதா ஆகியோர் செய்து மறைசாட்சிகளாக இரத்தம் சிந்தி ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்தனர்.

திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக மாறி உள்ள நாமும் இறைவேண்டலின் வழியாகத் தூய ஆவியின் வல்லமையைப் பெற்றுக்கொள்வோம். அதன் வழியாக திருத்தூதர்களைப் போல ஆற்றலோடு இயேசுவோடு உடனிருப்போம். அதன்பிறகு ஆற்றலோடு நம்முடைய சொல்லாலும் செயலாலும் நற்செய்தியை பிறருக்கு பறைசாற்றி சான்று பகரக்கூடிய வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இந்த உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய தீய சக்திகளான அநீதிகளையும் அலகையின் ஆதிக்கங்களையும் விரட்டியடிக்க அழைக்கப்பட்டுள்ளோம். 

இத்தகைய பணிகளைச்செய்ய நம்மையே ஆயத்தப்படுத்தி முழுமையாக நம்மை இறைவனிடம் கையளிக்கும் பொழுது நாமும் திருத்தூதர்களாக உருமாற முடியும். பின்நவீனத்துவ காலத்தில் வாழுகின்ற நாம் இயேசுவின் நற்செய்தியை இந்த காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் பறைசாற்ற அழைக்கப்பட்டுள்ளோம். நற்செய்தி என்பது திருவிவிலியத்தில் உள்ள இறை வார்த்தைக்கு விளக்கம் அளிப்பது மட்டுமல்ல; மாறாக, இந்த உலகத்தில் என்ன நன்மைகள் செய்ய முடியும் என்ற கருத்தியலை அறிவிப்பதும் நற்செய்தி தான். நம்மோடு வாழக்கூடியவர்களிடம் நல்ல செயல்களை பற்றி பேசுவதே ஒரு நற்செய்தி பணிதான். இப்படிப்பட்ட மனநிலையில் பயணிக்க அழைக்கப்பட்டுள்ளோம். தீய சக்திகள் என்பது ஏதோ ஒரு மாயாஜால சக்தி அல்ல; இந்த உலகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் அநீதிக்கு எதிராக நாம் குரல் கொடுப்பதே தீய சக்திக்கு எதிரான ஒரு நற்செய்தி பணியாகும். இத்தகைய பணிகளை முழு ஈடுபாட்டோடு செய்யும் பொழுது நாமும் திருத்தூதர்களாக  மாறுகிறோம்.  அப்படிப்பட்ட மனநிலையில் பயணிக்க இன்றைய விழா நாயகர்களான திருத்தூதர்களின் யூதா மற்றும் சீமோன் ஆகியோரின் பரிந்துரையை நாடுவோம். அதற்குத் தேவையான தூய ஆவியின் ஆற்றலை வேண்டுவோம்.

இறைவேண்டல் 
வல்லமையுள்ள இறைவா! திருத்தூதர்கள் தூய ஆவியின் வல்லமையைப் பெற்றுக்கொண்ட பிறகு மிகச்சிறந்த நற்செய்திப் பணியை செய்தது போல நாங்களும் தூய ஆவியின் வல்லமையோடு மிகச்சிறந்த நற்செய்திப் பணி செய்து திருத்தூதர்களாக உருமாற அருள்தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 13 =