தவறுகளைச் சுட்டிக்காட்டவும் மன்னிக்கவும் நமக்கு கடமை உண்டு! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 13ஆம் வியிழன்
I : ஆமோ:  7: 10-17
II : திபா 19: 7. 8. 9. 10 
III : மத்: 9: 1-8

இன்றைய இரு வாசகங்களும் வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய இரு முக்கியமானை கடைமையினை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. பொதுவாக நாமாக இருந்தாலும் பிறராக இருந்தாலும் வாழ்க்கைப் பாதையை சரியாக அமைத்திட நமக்குச் சரியான வழிகாட்டிகள் தேவை. சரியான வழிகாட்டிகளிடம் இரு பண்புகள் உண்டு. முதலாவதாக தவறுகளைச்  சுட்டிக்காட்டுதல் இரண்டாவதாக மன்னித்தல்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் இறைவாக்கினர் ஆமோஸ் "தவறுகளைச் சுட்டிக் காட்டும் " பணியைச் செய்கிறார். கடவுளுக்கு எதிராக இஸ்ரயேல் மக்கள் செய்யும் தவறுகளையும் அரசன் பெறப்போகும் தண்டனையையும் எடுத்துரைக்கிறார். இங்கே நாம் சிந்திக்க வேண்டிய கருத்து என்னவெனில் நாம் யாருடைய மனநிலையைப் பெற்றிருக்கிறோம் என்பதே?

பல வேளைகளில் ஆமோஸ் இறைவாக்கினரைப் போல தவறுகளைச் சுட்டிக்காட்ட மட்டுமே விரும்பும் நாம் அரசனைப் போல சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளைத் திருத்த மனமில்லாமல் வாழ்கிறோம். இந்த மனநிலையை நாம் மாற்ற வேண்டும். தவறுகளைத் திருத்தும் மனநிலை நம்மிடம் இருந்தால் மட்டுமே தவறுகளைச் சுட்டிக்காட்டும் உரிமையையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். அது நம் கடமை என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு முடக்குவாத முற்றவரின் உடல் மற்றும் மனநோய்களை, மன்னிப்பதன் மூலம் முற்றிலும் குணமாக்குகிறார். அவருடைய தவறுகள் அனைத்தையும் அவர் மன்னித்ததால் முடங்கி கிடந்த அவருடைய ஆன்மா புத்தணர்வும் புத்துயிரும் பெற்றது. ஆம் நாம் மன்னிக்கப்படும் போது புதுவாழ்வு பெறுகிறோம். மன்னிக்கும் போது புதுவாழ்வு வழங்குகிறோம். எனவே "மன்னிக்க வேண்டியது " நம்முடைய கடமை. அதிலும் குறிப்பாக இயேசுவின் சீடர்களாக நாம் மாற விரும்பினால் மன்னிக்க வேண்டும். 

இயேசு தான் வாழ்ந்த கிலத்தில் தவறுகளை ச் சுட்டிக்காட்டியும், மன்னித்தும் பலருடைய வாழ்வை சீர்தூக்கினார். நாமும் அவரைப் பின்பற்றி தவறுகளை சரியான முறையில் சுட்டிக்காட்டுவதோடு மன்னிப்பையும் வழங்கி பிறர் வாழ்வை சீர்தூக்க முயலுவோம். அதேபோல நமது தவறுகளை நம்மீது அக்கறை கொள்வோர் சுட்டிக்காட்டி திருத்தும் போது அதை ஏற்றுக்கொள்வோம். அவர்களின் மன்னிப்பைப் பெற்று நம் வாழ்வையும் வளமானதாக மாற்ற முயலுவோம்.

 இறைவேண்டல் 

எங்களை முழுமையாக்கும் இறைவா! உம்முடைய அறிவுறுத்தல்களையும் மன்னிக்கும் கருணையையும் ஏற்றுக்கொண்டு நலமான வாழ்வு வாழவும் உம்மைப் பின்பற்றி பிறர் வாழ்வை நலமாக்கவும் ஆசி வழங்குவீராக ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

8 + 0 =