தன்னையே வழங்கிய இறைமகனைப் பின்பற்றுவோம்! | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection | Corpus Christi


பொதுக்காலத்தின் பனிரெண்டாம் ஞாயிறு 
இயேசுவின் திருஉடல் திருரத்தம் பெருவிழா 
I : தொ நூ 14: 18-20
II : திபா 110: 1. 2. 3. 4 
III : 1கொரி 11: 23-26
IV :லூக் 9: 11b-17

"தன்னையே வெறுமையாக்கும் தலைவனின் அன்பு இதோ
தருகின்ற செயலிலும் நிகரற்ற பண்புஇதோ
தகைமை எனக்கில்லையே அதை நான் புரிவதற்கு
தகுதி எனக்காகுமோ எனக்குள் அவர் வருவதற்கு "

என்ற அழகிய பாடல் வரிகளோடு இயேசுவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 அன்புக்குரியவர்களே இன்று நாம் திருஅவையோடு இணைந்து இயேசுவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இப்பாடல் வரிகள் உணர்த்துவதைப் போல இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் நமக்குத் தந்தது தன்னிகரற்ற பண்பு. அதை புரிந்து கொள்வது கடினம். ஆம் நம் அறிவால் அதைப் புரிந்து கொள்ளவது கடினம். ஆனால் நம் நம்பிக்கையால் அம்மறைபொருளை நாம் சற்று உணர முற்பட்டால் இவ்விழா நமக்கு விடுக்கும் வாழ்வியல் பாடத்தை நாம் கற்றுக்கொண்டு வாழ்வாக்க இயலும்.

இயேசுவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழா நமக்கு உணர்த்தும் முதன்மையான மற்றும் முக்கியமான சிந்தனை தன்னைக் கொடுத்தல். அல்லது தன்னையே வெறுமையாக்குதல். இதை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள நம் அனைவருக்கும் தெரிந்த உதாரணமான தாய்மையை எடுத்துக்கொள்வோம். தாயானவள் தன் குழந்தைக்கு தன் உடலையும் இரத்தத்தையும் தருகிறாள். கருவிலே குழந்தை உருவான உடன் முதலில் சிறு புள்ளிபோல்தான் இருக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகள் தோன்றி தசைகளும் வளர்கின்றன. அக்குழந்தை தன் தசையை தாயிடமிருந்தே எடுத்துக்கொள்கிறது. தாய் தன் கருவிலுள்ள குழந்தை வளர்வதற்காக பலவற்றை இழக்கிறாள். தன்னையே தருகிறாள். அதற்காக பல வேதனைகளைத் தாங்குகிறாள். பல தியாகம் புரிகிறாள். அதன்மூலம் குழந்தைக்கு உயிர்துடிப்பைத் தருகிறாள். எல்லா ஊட்டச்சத்துகளையும் தன்மூலம் வழங்குகிறாள். குழந்தை பிறந்த பிறகும் கூட தன் இரத்தத்தைப் பாலாக்கி கொடுக்கிறாள். 

ஆம் தன்னையே வழங்குதற்கு தாய் சிறந்த உதாரணம். அந்த தாயின் அன்பை எவ்வாறு நம்மால் புரிந்து கொண்டு விளக்க இயலாதோ அதைப்போலத்தான் தன்னையே வெறுமையாக்கிய தன் உடலையும் இரத்தத்தையும் வழங்கிய இயேசுவின் அன்பை   நம்மால் ஒருபோதும் புரிந்து கொள்ளவும் விளக்கவும் முடியாது. இயேசு நமக்கு வழங்கிய இந்த உன்னதமான கொடை நம் ஆன்மாவிற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.அவ்வப்போது பாவங்களால்  இறந்தாலும் மீண்டும் மீண்டும் உயிரளிக்கிறது. தாயின் அன்பை விட ஆயிரமாயிரம் மடங்கு மேன்மையான அன்பின் சின்னம் இவ்வுலகில் இதைவிட வேறு இல்லை எனலாம். 

இதை நாம் உணர்ந்தால் மட்டும் போதாது. அவரின் உடலையும் இரத்தத்தையும் பெறும் நாம் அவருடைய உடலாகவும் இரத்தமாகவும் மாறவேண்டும். நம்மையே தர வேண்டும். நம்முள்ளே இருக்கும் தாயுள்ளத்தை பிறக்கு நம்மால் இயன்ற பகிர்வின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். சின்ன சின்ன முறையிலாவது பிறர் நலனுக்காக நம் விருப்பங்களை, நம் உடைமைகளை, இழக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது நாமும் இயேசுவின் திருஉடலாக இரத்தமாக உலகிலே திகழ முடியும்.தன்னிடமுள்ள ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஒலு சிறுவன் இழக்கத் துணிந்தான். அது ஐயாயிரம் பேருக்கு உணவானது. எனவே நம்மை இழக்கத் துணிவோம். பிறருக்கு நம்மை இயேசுவைப் போல வழங்குவோம். தன்னையே வழங்கும் இயேசுவைப் பின்பற்ற தயாரா?

 இறைவேண்டல் 
அன்பு இயேசுவே!  உம்மைப் போலவே பிறர் நலனுக்காக எங்களை இழக்கும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராஜசிங்கமங்கலம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 3 =