கொடுப்பதில் இன்பமா! | குழந்தைஇயேசு பாபு


Giving

பொதுக்காலத்தின் 34 ஆம் திங்கள் - I. தி.வெ: 14:1-5; II. திபா: 24:1-2.3-4.5-6; III. லூக்: 21:1-4

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மறைமாவட்டத்தில் சிறைப்பணி செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பங்கிற்கு நிதி பெற்றுக்கொள்வதற்காகச் சென்றிருந்தேன். என்னோடு ஒரு சில அருள்சகோதரிகளும் தன்னார்வத் தொண்டர்களும் வந்திருந்தனர். நாங்கள் பெரும்பாலும் சிறைப்பணிக்காக எடுக்கப்படும் காணிக்கையை ஆலயத்தின் வெளிப்புறம் நின்றுதான்  எடுப்போம். அப்பொழுது யாசகம் வாங்கிக்கொண்டிருந்த சகோதர சகோதரிகள் அனைவரும் எங்களை கோபத்தோடு பார்த்தனர். ஏனென்றால் மக்கள் அனைவரும் சிறைப்பணிக்காக தாராளமாக நாங்கள் வைத்திருந்த  காணிக்கை வாளியில் தங்களது நன்கொடைகளை செலுத்தினார்கள். எனவே மக்கள் அனைவரும் யாசகம் வாங்கிக்கொண்டிருந்த சகோதர சகோதரிகளுக்கு போதிய உதவி செய்யவில்லை. இதுதான் அவர்களின் கோபத்திற்கு காரணம்.  

இந்தச் சூழலில் எங்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்த யாசகம் வாங்கிக்கொண்டிருந்த  ஏழைக்கைம்பெண் ஒருவர்  எங்கள் அருகில் வந்தார். அவர் எங்கள் தன்னார்வத் தொண்டர்களில் ஒருவரை பார்த்து "எதற்காக இவ்வாறு பணம்  பெறுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த  தன்னார்வத் தொண்டர் "நாங்கள் சிறைப்பணிக்காக காணிக்கை எடுக்கிறோம். இதில் பெற்றுக் கொள்கின்ற பணத்தை நாங்கள் சிறையில் வாடும் சிறைவாசிகளுக்காகவும் அவர்களின் குழந்தைகளின் படிப்பிற்காகவும் நாங்கள் பயன்படுத்துகிறோம்" என்று பகிர்ந்து கொண்டார். உடனே யாசகம் வாங்கக்கூடிய அந்த ஏழைக் கைம்பெண் தன் சேலையில் முடித்து வைத்திருந்த ஐம்பது ரூபாய் பணத்தை வாளியில் காணிக்கையாக போட்டு "இதையும் அவர்களுக்காக பயன்படுத்துங்கள்" எனக் கூறினார். இந்த நிகழ்வு என்னோடு வந்திருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த உண்மை நிகழ்வு மிகச் சிறந்த அனுபவத்தைத் தருவதாக அமைந்தது. இந்த உண்மை நிகழ்வை தியானிக்கும் போதெல்லாம் எனக்கு லூக்கா நற்செய்தியில் வருகின்ற ஏழைக் கைம்பெண்ணின்  காணிக்கை தான் நினைவுக்கு வரும்.

எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியம் அல்ல; மாறாக, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம். நம் ஆண்டவர் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் கைம்பெண்கள் இச்சமூகத்தால் மிகவும் ஒடுக்கப்பட்டார்கள். கணவனை இழந்து ஒரு பெண் வாழ்வது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான ஒன்றாகும். ஆண்டவர் இயேசு இந்த மனநிலையை மாற்ற வேண்டுமெனத் திருவுளம் கொண்டார். எனவேதான் காணிக்கைப் பெட்டிக்கு முன்பாக அமர்ந்தார். செல்வர்கள் காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போடுவதைக் கண்டார். அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். ஆனால் இந்த ஏழைக்கைம்பெண் தன்னிடமிருந்த அனைத்தையும் காணிக்கையாக போட்டார். இதற்கு முக்கிய காரணம் ஏழைக் கைம்பெண்ணின் தியாகவுள்ளமாகும். எவ்வளவு துன்பப்பட்டாலும் கடவுளுக்கு கொடுக்க வேண்டும் என்ற  நல்ல மனநிலை அந்த ஏழைக் கைம்பெண்ணுக்கு இருந்தது. அவர் சார்ந்த சமூகம் எவ்வளவு தன்னை நசுக்கினாலும் ஓரங்கட்டினாலும் மனத்துணிவோடு உழைத்து கடவுளுக்குத் தான் செலுத்தவேண்டிய காணிக்கையைச் செலுத்தினார்.

பல விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் இரண்டு காசுகள் என்பது இரண்டு நாள் வருமானம் ஆகும். இந்த இரண்டு நாள் வருமானத்தை அவர் காணிக்கையாகக் கொடுக்கிறார் என்றால் அது கடவுள் மீது அவர் கொண்ட அன்பையும் நல்லுறவையும் சுட்டிக்காட்டுகின்றது. எருசலேம் ஆலயத்தில் இரண்டு காசுகளுக்குக்  குறைவாக காணிக்கை செலுத்தக்கூடாது என்ற சட்டம்  இருந்ததாகவும் கூறப்படுகின்றது. எனவேதான் ஏழைக் கைம்பெண்  இரண்டு நாள் உழைத்து சம்பாதித்த இரண்டு காசுகளைக் கடவுளுக்காகக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க முன்வருகிறார். தனக்கு இருந்தாலும்  இல்லாவிட்டாலும் கடவுளுக்குக் கொடுக்கவேண்டும் என்ற ஆழமான இறைநம்பிக்கை அந்த ஏழைக்கைம்பெண்ணுக்கு இருந்ததால் தான் அவரால் தான் வைத்திருந்த அனைத்தையுமே கொடுக்க முடிந்தது. இத்தகைய மனநிலை தான் நம் ஆண்டவர் இயேசுவின் மனநிலை. ஆண்டவர் இயேசு நாம் அனைவரும் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காக தன்னையே முழுவதுமாக நமக்காக கையளித்தார். எனவேதான் இயேசு இந்த நிகழ்வை பார்த்ததும் அவரை பாராட்டி உலக மக்கள் அனைவருக்குமே அப்பெண்ணை ஒரு வாழ்வியல் முன்னுதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கடவுள் மீது   அதிக நம்பிக்கை வைப்பவர்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற மன நிலையில் இருப்பர். உதாரணமாக ஆபிரகாம் நம்பிக்கையின் தந்தை என அழைக்கப்படுகிறார். தன்னுடைய ஒரே மகனையே கடவுள் பலியாகக் கேட்டபோது ஒரு தந்தையாக அவர் மனம் வருந்தினாலும் கடவுள்  தன் மகனை பலியாகக்  கேட்டுவிட்டார் என்ற நம்பிக்கையோடு அவரை பலிகொடுக்கத் துணிந்தார். எனவே கடவுள் அவருடைய வழிமரபைக் கடற்கரை மணலை போலவும் விண்மீன்களைப் போலவும் பெருகச் செய்தார். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை வைக்காதவர்கள் கடவுளுக்கும் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்ற மனநிலை இல்லாதவர்களாக வாழ்ந்தனர். அதற்கு உதாரணம் ஏழை லாசரைக் கண்டுகொள்ளாத பணக்காரன் (லூக்: 16:19-31), தன் செல்வத்தில் நம்பிக்கை வைத்த பணக்காரன் (லூக்: 12:16-21), தன் செல்வத்தை பகிர மறுத்த பணக்கார இளைஞன் (லூக்: 18:18-27) ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

எனவே நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் கடவுள் மீது ஆழமான நம்பிக்கை வைக்கின்ற பொழுது கடவுளுக்கும் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்ற மனநிலை நம்மிலே நிச்சயமாக உருவாகும். எனவேதான் "இதைப்பற்றில்லாதோரின் காணிக்கைகளை உன்னத இறைவன் விரும்புவதில்லை ; ஏராளமான பலி செலுத்தியதற்காக  அவர் ஒருவருடைய பாவங்களை மன்னிப்பதில்லை" (சீஞா: 34:19) என சீராக்கின் ஞானநூலில் வாசிக்கிறோம். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் நம்பிக்கை உள்ள மனிதர்களாக வாழ்ந்து கடவுளுக்காக எதையும் இழக்க ஏழைக்கைம்பெண்ணைப்போல தயாராக இருக்கும் பொழுது நிச்சயமாக கடவுள் நம் வாழ்வை அங்கீகரிப்பார். நம் அன்றாட வாழ்விலே ஏழைக் கைம்பெண்ணைப் போல எவ்வளவு துன்பப்பட்டாலும் புறக்கணிக்கப்பட்டாலும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டாலும், கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு அனைத்தையும் இழக்க தயாராக இருக்கும் பொழுது நிச்சயம் கடவுள் நம் வாழ்வை ஆசீர்வதிப்பார். நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வோம். கடவுளுக்கு கொடுக்க வேண்டியவற்றை கடவுளுக்கு கொடுப்போம். நம்மோடு வாழக்கூடிய மனிதர்களுக்கு கொடுக்க வேண்டியவற்றை மனிதர்களுக்கு கொடுப்போம். அப்படி வாழ்வது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியம் அல்ல; மாறாக, எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம். எனவே இறை நம்பிக்கையோடு பிறருக்கும் கடவுளுக்கும் கொடுக்கின்ற பொழுது, நிச்சயமாக கடவுளின் அருளையும் ஆசியையும் நிறைவாகப் பெறமுடியும். கொடுப்பதில் இன்பம் காண கொடுக்கும் மனநிலை வேண்டி தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்  
வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்வில் எங்களுக்கு எவ்வளவோ  நன்மைகளை வழங்கியுள்ளீர். நாங்கள் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கு கைமாறாக உமக்கும் பிறருக்கும் மனமாரக் கொடுக்கும் மனநிலையைத் தாரும். எவ்வளவு கொடுக்கிறோம் என்ற நிலையைத் தாண்டி எத்தகைய மனநிலையில் கொடுக்கிறோம் என்ற மனநிலையில் இருப்பதை நிறைவாய் கொடுக்க நல்ல மனதை தாரும். அதற்குத் தேவையான அருளையும் ஆற்றலையும் தர வேண்டுமாய் வேண்டுகிறோம். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 9 =