குழந்தை மனநிலையில் | குழந்தைஇயேசு பாபு


15.07.2020

இன்றைய வாசகங்கள் (15.07.2020) - பொதுக்காலத்தின் 15ஆம் புதன் -  முதல் வாசகம்  எசா. 10: 5-7, 13-16;  நற்செய்தி வாசகம் மத்: 11: 25- 27        

"இயேசு 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்' என்றார்" (மத். 11:25). 

குழந்தைகள் கடவுளின் ஆசீராக இருக்கின்றனர். இவ்வுலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருமே நிச்சயம் குழந்தைப் பருவத்தை கடந்து தான் வந்திருப்பர். குழந்தையாய் இருக்கும் பொழுது எந்த ஒரு ஆணவமும் இறுமாப்பும் இல்லாமல் இருந்திருப்போம் . "நான் தான் பெரியவன் "என்ற ஆணவத்தை கடந்து மிகவும் எளிமையான மனநிலையில் நம் தாய் தந்தையரை சார்ந்து வாழ்ந்திருப்போம். நாம் தவறு செய்த பொழுது பெற்றோர்களின் கண்டிப்புகளைத் திறந்த மனநிலையோடு ஏற்றிருப்போம். கள்ளங்கபடு இல்லாத மனநிலை கொண்ட குழந்தைகளாக இருந்திருப்போம். தாழ்ச்சியோடு அறிய வேண்டுமென்ற மனநிலையிலிருந்து இருப்போம். மேலும் இருப்பதில் மகிழ்ச்சி கொண்டவராய் வாழ்ந்திருப்போம். 

குழந்தை மனநிலை கொண்டவர்களாக வாழ்ந்த நாம் வளர்ந்த பின்பு ஆணவமிக்கவர்களாகவும் இறுமாப்புடையவர்களாகவும் சுயநலவாதிகளாகவும் மாறுகிறோம். இத்தகைய மனநிலையை கொண்டதால் "நான்தான் "என்ற தற்பெருமை மனநிலைக்கு கடந்து விடுகிறோம். அதனால் நாம் இவ்வுலகம் சார்ந்த அறிவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து விட்டு கடவுளைப் பற்றிய ஞானத்தை இழந்து தவிக்கிறோம். இதனால் பல்வேறு துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகி வருகிறோம். 

கடவுளைப் பற்றிய ஞானத்தை அறிய எவையெல்லாம் தடையாக இருக்கின்றது என்ற தெளிவை இன்றைய வாசகங்கள் கொடுக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் அசீரிய நாட்டு அரசன் தனது வெற்றியை நினைத்து கர்வமும் ஆணவமும் கொள்கிறார். "என் கை வலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன் ;என் ஞானத்தாலும் அறிவுக்கூர்மையாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன் " {எசா. 10:13} என்று ஆணவத்தோடும் கர்வத்தோடும் தன் வெற்றியை நினைத்து பெருமிதம் கொள்கிறார். ஆனால் கடவுள் அசீரிய நாட்டு அரசனின் ஆணவத்தையும் இறுமாப்பையும் முன்னிட்டு "அவனை நான் தண்டிப்பேன்" {எசா. 10:12} என கூறினார். எனவே கடவுள் அசீரிய நாட்டு அரசர் கடவுளைப் பற்றிய ஞானத்தை அறிய வாய்ப்பினை இழந்து தண்டிக்கப்படுகிறார். 

நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுளின் ஞானத்தை பெரிதாக பார்க்காமல் நம்முடைய ஞானத்தால் தான் அனைத்தும் நிகழ்ந்தது என்று கருதும் பொழுது நிச்சயம் நமக்கு தோல்வி தான் என்ற சிந்தனையை இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. "உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்றுதூக்கி எறிந்துள்ளார்" {லூக். 1:52} என்று பாடிய அன்னை மரியாவின் வரிகள் செருக்குடன் சிந்திப்போருக்கு கிடைக்கும் தண்டனையைச் சுட்டிக்காட்டுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகமும் ஆணவமும் இருமாப்பும் இல்லாத குழந்தை மனம் உள்ளவர்களுக்கு தான் ஞானம் வெளிப்படுவதாக இயேசு சுட்டிக்காட்டுகிறார். "ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்" {மத். 11:25} என்று கூறி குழந்தை மனநிலையில்தான் கடவுளைப் பற்றிய ஞானத்தை அறிந்து கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டுகிறார். 

ஏன் இயேசு கடவுளின் ஞானத்தைப் பெற குழந்தை மனநிலையைப் பற்றி பேசுகிறார்? இதன் பின்னணி என்ன என்பது பற்றி பின்வருமாறு அறிவோம். இயேசு வாழ்ந்த காலத்தில் கடவுளைப் பற்றிய ஞானம் தங்களுக்கு மட்டுமே உண்டு என்று பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் கருதினர். தாங்கள் படித்த மறைநூல் அறிவில் தான் ஞானம் இருக்கிறது என்று ஆணவத்தோடு இருந்தனர். எனவே ஞானத்தின் கருவூலமாக இயேசுவின் போதனைகளையும் வல்ல செயல்களையும் ஏற்றுக்கொள்ளாமல் விமர்சனப்படுத்தினர். இயேசுவினுடைய போதனையில் உண்மையான இறைஞானம் இருக்கின்றது என்பதை உணராமல் இருந்தனர். 

"கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார். " {லூக். 1:50-51} என்ற அன்னை மரியின் பாடல் வரிகள் தாழ்ச்சியோடு கடவுளுக்கு அஞ்சும் மனிதர்கள் மட்டுமே இறை ஞானத்தைப் பெறமுடியும் என்ற சிந்தனையை வழங்குவதாக இருக்கிறது. 

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே இறை ஞானத்தைப் பெற குழந்தை மனநிலையை பெற்றுக் கொள்வோம். தாழ்ச்சி உள்ளவர்களாக, கடவுளை சார்ந்து இருப்பவர்களாக, தூய உள்ளம் கொண்டவர்களாக, எளிமையானவர்களாக இருந்து இயேசுவினுடைய போதனைகளை ஏற்றுக்கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம். அவ்வாறு வாழும் பொழுது நமக்கு கடவுள் தன்னுடைய ஞானத்தை நிறைவாகப் பொழிவார். கடவுளின் ஞானத்தை நாம் பெறும் பொழுது நமக்காகவும் நம் ஆண்டவர் இயேசு தன் தந்தைக்கு புகழ்ச்சி செலுத்துவார். எனவே இறை ஞானத்தை பெற குழந்தை மனம் வேண்டி இறையருள் வேண்டுவோம். 

இறைவேண்டல்
அன்பான இறைவா! எங்கள் வாழ்வில் ஆணவம், தற்பெருமை, இருமாப்பு போன்ற தீய மனநிலையை விட்டுவிட்டு குழந்தை உள்ளத்தோடு உம் போதனைகளை ஏற்றுக் கொள்ள அருள் தாரும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

16 + 3 =