கடவுள் நமக்கென ஒதுக்கியுள்ள பணியைச் செய்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் நான்காம்  புதன்
I :தி ப : 12:24-13:5
II :  தி பா: 66:2-3,5-6,8
III : யோவான் : 12:44-50

ஒருமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மக்களிடம் ஒரு பேட்டி எடுக்கப்பட்டது. நீங்கள் விரும்பிய வேலையைச் செய்கிறீர்களா?  உங்கள் கனவு பலித்துவிட்டதா?  என மக்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சிலர் தாங்கள் விரும்பிய வேலையைச் செய்வதாகக் கூறினர். சிலர் கிடைத்த பணியை ஏற்றுக்கொண்டதாகச் சொன்னார்கள். பலர் தாங்கள் நினைத்தது வேறு நடந்தது வேறு எனப் புலம்பினர். 

ஆம் அன்புக்குரியவர்களே. நம் எல்லாருக்கும் பல ஆசைகளும் கனவுகளும் இருக்கும். நாம் நினைத்ததைச் செய்ய வேண்டும் என எண்ணுவோம். படிப்புக்கேற்ற வேலையைத் தேடித் தேடி வேலையே செய்யாமல் பலர் உள்ளனர். இந்த விரக்திக்கெல்லாம் காரணம் என்ன?. நம்மில் பலருக்கு நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப்பற்றிய சரியான தேடல் இல்லாததே. நம் வாழ்வின் நோக்கம் கடவுளுக்கே தெரியும். அதை அவரே நமக்குத் தெரிவிப்பார். நம்முடைய ஆசை ஒன்றாக இருக்கும். ஆனால் அது நமக்கு உகந்ததாக இருக்காது. கடவுளின் திட்டம் நமக்குப் பிடிக்காததாக இருக்கும். ஆனால் நமக்கு உகந்ததாக இருக்கும்.  சில வேளைகளில் நம் மனதில் நினைத்திராத ஒன்றை கடவுள் செய்யச் சொல்வார்.

இன்றைய முதல் வாசகத்தில் தூய ஆவியார் வழியாக கடவுள் சவுல், பர்னபாஸ் ஆகியோரை சிறப்பான பணிக்காகத் தான் ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறினார். அவர்கள் இருவரும் ஏற்கனவே திருத்தூதர்களோடு மகிழ்வாகப் பணிசெய்துகொண்டிருந்தார்கள் என்றபோதிலும் கடவுள் தங்களுக்குத் தந்த பணியை ஏற்று செயல்பாட்டார்கள்.

இன்றைய நற்செய்தியிலும் கூட இயேசு தன்னை  அனுப்பிய தந்தையைப் பற்றியே பேசுகிறார். தானாக எதையும் பேசவில்லை எனவும் தம்மை அனுப்பிய தந்தைக் கடவுளின் திருவுளப்படியே பேசுவதாகவும் கூறி தந்தை கடவுள் தனக்கென ஒதுக்கியுள்ள அல்லது வகுத்துள்ள திட்டத்தை நிறைவேற்றுவதை இயேசு கூறுகிறார். 

எனவே அன்புக்குரியவர்களே தந்தை கடவுள் நமக்கென்று ஒரு திட்டம் தீட்டியுள்ளார் என்பதை நாம் நம்ப வேண்டும். அதை நாம் உணர்வதற்கு செபம் ஒன்றே சிறந்த ஆயுதம். தூய ஆவியார் மூலம் நம் ஆண்டவர்  நமக்கு வகுத்துள்ள திட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். நாம் அதை உணர்ந்தவர்களாய் வாழ இறையருள் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! எந்தப் பணிக்காக நீர் என்னை குறித்து வைத்துள்ளீர் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்த உமதருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 0 =