கடவுளோடு பேசுங்களேன், எல்லாமே நடக்கும்…


pixabay

செபம் என்பது அனுபவம். இந்த அனுபவம் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்படும்போது அது வல்லமை தருவதாக மாறுகின்றது. நான் சிறு பிள்ளையாக இருந்தபோது என்னுடைய பெற்றோர் அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து கண்ணீரோடு செபித்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கின்றேன். அந்த செபத்தின் வழியாக கடவுள் அவர்களோடு இருந்து வழிநடத்திக்கொண்டிருப்பதை உணர்கின்றேன், அனுபவிக்கின்றேன். 

என்னுடைய அண்ணன் டிசோ குருவானவர், அவர் சொல்வதெல்லாம் இரண்டே காரியங்கள்: ஒன்று, தம்பி நம்முடைய குடும்பங்களை கடவுள் தம் இரக்கப்பெருக்கில் இடமளித்து பராமரித்துக்கொள்ள செபம் செய்யுங்கள், அனைவரையும் தொடர்ந்து செபம் செய்யச் சொல்லுங்கள். 

இரண்டாவது, நம்முடைய குடும்பங்களில் அனைவரையும் பவசங்கீர்த்தனம் செய்து, திருப்பலியில் பங்கெடுத்து, செபிக்கச் சொல்லுங்கள் என்பார்கள். பாவங்கள் மன்னிக்கப்பட்டு தூய உள்ளத்துடன் இறைவனை அனுகும்போது அவரது மபெரும் இரக்கத்தை நாமும் அனுபவிக்கலாம். 

விவிலியம் முழுவதும் செபத்தால்தானே நிரப்பபட்டிருக்கின்றது. கண்ணீரோடு கடவுளை நோக்கி செபித்தவர்களின் செபங்கள் அனைத்தும் கேட்கப்பட்டிருக்கின்றது. ஆகாரின் கண்ணீரைக்கேட்டு கடவுள் பாலை நிலத்தில் தண்ணீர் ஊற்றெடுக்கச் செய்தார் (தொநூ 16:11). அன்னாளின் செபத்தைக்கேட்டு சாமுவேல் என்ற மபெரும் நீதித்தலைவரை கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்தார் (1 சாமு 1:10). 

இன்னுமாய் இறைவாக்கினர்களின் செபங்கள் சிதறுண்ட நெருக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆறுதலையும் புதிய உந்துசக்தியையும் கொடுத்தது. இயேசு செபத்திற்கான நேரம் ஒதுக்கி தனிமையில் செபித்தார், உலகத்தை வென்றார். திருத்தூதர்கள்கூட இயேசு சிலுவையில் அடக்கப்பட்டதைக் கண்டவுடன் கதறினார்கள். ஆனால் அனைவரும் செபத்தில் ஒன்றினைந்திருந்தவுடன் அவர்கள் வாழ்வு மாறியது. இயேசுவைக் கண்டார்கள், செப மனிதர்களாக நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்சென்றார்கள். 

இந்த செபத்திற்கு ஏதேனும் வடிவம் உண்டா என்றால் கிடையாது என்பதே உண்மை. கடவுளை நம் வாழ்வில் எவ்வாறு அனுபவிக்கின்றோம் என்பதைப் பொறுத்தே அது அமைகின்றது. ஒவ்;வொரு நாளும் காகிதத்தை எடுத்து கடிதம் எழுதலாம், தனியாக அமர்ந்து பேசலாம், அமைதியில் காட்சியாக கண்டு பேசலாம், குழுவாக இணைந்து பாடல் பாடி ஆர்ப்பரித்து செபிக்கலாம். இவ்வாறு செய்கின்றபோது மற்றவர்களையும் கடவுளை நோக்கி நாம் இழுத்துச்செல்கின்றோம். ஆனால் எது முக்கியம் என்றால் யாக்கோபு “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மை போகவிடேன்” (தொநூ 32:26) என்று கடவுளைப் பற்றிக் கொண்டதுபோல நாமும் செபத்தில் கடவுளைப் பற்றிக்கொள்ளவேண்டும். 

இந்த அனுபவத்தை யார் சரியான விதத்தில் குழந்தைக்கும் இளைஞர்களுக்கும் சரியான விதத்தில் கொடுக்க முடியும்? வீட்டில் பாட்டி, ஆச்சி, அம்மாச்சி, அப்பத்தா, அப்பாய, அம்மாயி, தாத்தா என குழந்தைகள் காதல் கலந்து அழைக்கும் முதியவர்கள் தான் தங்கள் குழந்தைகள் பேரக்குழுந்தைகளுக்கு செப வல்லமையையும் விசுவாசத்தையும் ஊட்டவேண்டும், அதன்பின்புதான் பெற்றோர்கள். 
வீட்டில் விளையாடினாலும், படியில் ஏறி இறங்குவதாக இருந்தாலும், பள்ளிக்கு செல்வதாக இருந்தாலும், கீழே விழுந்தாலும், எதைச் செய்தாலும் குழந்தைகளுக்கு நன்றி இயேசுவே, அல்லேலூயா, Praise the Lord சொல்லுங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லி அது அவர்கள் வாழ்வுப் பாதையாக மாறும்வரை சொல்லிக் கொடுக்கும் பக்குவம் இந்த முதியவர்களுக்கு மட்டுமே உள்ளது. அதுதான் பாட்டி-தாத்தா பேரன்-போத்திகள் அக்ரிமெண்டும்கூட. 

இது ஒரு சிறிய செபமாக இருந்தாலும், அது அவர்களை கடவுளோடு நெருங்கி அழைத்துச் செல்கின்றது. அதனால் அவர்கள் எந்த தவறு செய்வதற்கும் பயப்படுவதோடு மட்டுமல்ல, எல்லாவற்றிலும் கடவுள் நம்மோடு தான் இருக்கின்றார் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு கொடுக்;கின்றது. இதைச் செய்ய தவறும் முதியவர்களும் பெற்றோரும்; கடவுளுக்கு கணக்குக் கொடுக்கவேண்டும். 
காரணம் பல இடங்களில் சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்கள் ஆண்டுதோறும் பாஸ்கா விழாவிற்கு ஒரே குடும்பமாக ஒன்றுகூடும்போது முதியவர்கள் தங்கள் இளம் சந்ததியினருக்கும் கடவுள் தங்கள் முதாதையரை அழைத்து, உடன்படிக்கை செய்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து பாலைநிலத்தில் எவ்வாறு வழிநடத்தினார் என்பதனை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை கடவுள்மீது பற்றுறுதி கொள்ளச் செய்தார்கள். அதே கடமை கணக்கு கொடுக்கவேண்டிய கடமை நம் முதியவர்களுக்கும் பெற்றோருக்கும் உண்டு. மறவாதீர்கள்.

நல்லவர்கள் தான் செபம் செய்ய வேண்டும் என்றோ, அல்லது செபம் செய்பவர்கள் அனைவரும் நல்லவர்களாகவே வாழ்கின்றார்கள் என்றோ நம்மால் அறிதியிட்டுக் கூற இயலாது. ஆனால் நாம் செபம் செய்வதால் நாம் நல்லவர்களாக மாறுகின்றோம், மற்றவர்களையும் மாற்றுகின்றோம். செபம் படிப்படியாக நம் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்து, நம் வாழ்வில் வெளிப்படும், கடவுளை மகிமைப்படுத்தும்.
 

Add new comment

19 + 1 =