கடவுளுக்கு ஏற்புடையவராய் இருக்க நம்பிக்கை கொள்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் மூன்றாம் திங்கள்
I :தி ப :6:8-15
II :  தி பா: 118:23-24,26-27,29-30
III : யோவான் 6:22-29

நாம் எதற்காகக் கடவுளைத் தேடி வருகிறோம் என என்றாவது நம்மையே நாம் சோதித்ததுண்டா? இன்றைய சமூகத்தில்  சாதாரணமாக ஒருவர் மற்றவரைத் தேடுவது தேவைக்காக மட்டுமே என்றாகிவிடுகிறது. மனிதனாலேயே பல காரியங்கள் ஆகும் எனும்போது கடவுளால் ஆகாத காரியங்கள் ஏதும் இல்லை என்ற எண்ணத்தில் மட்டுமே நாம் அவரைத் தேடுகிறோமா? இல்லை நம்பிக்கையின் அடிப்படியில் நாம் அவருக்கு ஏற்புடையவராக வேண்டும் என்ற எண்ணத்தில் அவரைத் தேடுகிறோமா?  எனச் சிந்திக்க இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இயேசுவைத் தேடுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் எதற்காக இயேசுவைத் தேடுகிறார்கள் என்ற காரணத்தை இயேசு மிகத் தெளிவாகக் கூறுகிறார்."நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." என்பதே இயேசுவின் கூற்று. ஆம் ஐந்து அப்பங்களை பலுகச் செய்து  ஐயாயிரம் பேருக்கு இயேசு அளித்ததைக் கண்டதால் மீண்டும் தங்களுக்கு அதேபோல் உணவுகிடைக்கும் என எண்ணி அவரை விடாமல் தேடுகிறார்கள் மக்கள். அதாவது அவர்களின் தேவைக்காக அன்றி அவரை வேறெதற்கும் தேடவில்லை.

ஆனால் இயேசு அழிந்து போகாத உணவைத் தேடச் சொல்கிறார். அதற்காக உழைக்கச்சொல்கிறார். அழிந்து போகாதது நிலைவாழ்வு. அதை பெறும் வழி நம்பிக்கையே. நம்பிக்கையே ஒருவனை கடவுளுக்கு ஏற்புடையவனாக்குகிறது.  மெசியாவின் வரவிற்காய் காத்திருந்த யூத மக்கள் உணவுத்தேவைக்காக யாரையும் தேடி அலையக்கூடாது. மாறாக கடவுளால் அனுப்பப்பட்டவரை இனங்கண்டு அவரை நம்புவதே அவருக்கு ஏற்புடைய செயல் என இயேசு இவ்வார்த்தைகள் மூலமாக விளக்குகிறார். 

ஆம் அன்புக்குரியவர்களே. நாம் கடவுளைத் தேடி ஆலயம் செல்வதோ, அல்லது வீட்டிலிருந்து செபிப்பதோ நம்முடைய தேவைகளுக்காக மட்டுமாய் இருக்கக் கூடாது. தேவைகள் நாளுக்கு நாள் மாறும். தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். ஏன் பூர்த்தி செய்யப்பட்ட தேவை மறுநாள் தேவையற்றதாகக் கூட மாறலாம். நாம் நிலைவாழ்விற்காக கடவுளைத் தேட வேண்டும். அது அவர்மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையாலேயே நிகழும். அந்நம்பிக்கை நம்மை கடவுளுக்கு ஏற்புடையவராக மாற்றும்.அத்தகைய நம்பிக்கையில் நாளும் வளர வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல் 
நிலைவாழ்வு அருள்பவரே இறைவா! உம்மை தேவைகளுக்காகத் தேடும் மக்களாய் இல்லாமல் நம்பிக்கையால் உமக்கு ஏற்புடைய மக்களாக நாங்கள் வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 0 =