கடவுளிடம் செல்ல நான் பிறருக்கு வழியாய் இருக்கின்றேனா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் நான்காம்  வெள்ளி
I:தி ப :13: 26-33
II:  தி பா: 2: 6-7. 8-9. 10-11
III: யோவான் : 14: 1-6

முந்தைய காலத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல சரியான பாதைகள் கிடையாது. அப்பாதைகளை பல அறிஞர்கள் தங்கள் கடுமையான முயற்சியால் கண்டறிந்ததால்தான் நம்மால் ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் என பயணம் போக முடிகிறது.  இன்னும் பாதைகளைக் கண்டறிந்த அறிஞர்களை நாம் நன்றியோடு நினைக்கத்தான் செய்கிறோம்.ஏனென்றால்
எந்த ஒரு இடத்திற்குச் செல்வதற்கும் வழி என்பது மிகவும் அவசியம்.
இது ஒருபுறமிருக்க
 நன்றாக வழி தெரிந்த இடத்திற்கு நாம் தயங்காமல் செல்வதுண்டு. வழிறியா இடத்திற்கு நாம் செல்லும் போது ஒருவித தயக்கமும் பயமும் நம்மிடம் இருக்கும். ஆம் பாதை அல்லது வழி என்பது மிக முக்கியம். அது சாலைப்பயணத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைப் பயணத்திற்கும் தேவை.

இன்றைய நற்செய்தியில் " வழி நானே " என்று இயேசு கூறுகிறார். எங்கு செல்வதற்கு?  யாரிடம் செல்வதற்கு? என அலசிப்பார்த்தால் "தந்தையிடம் செல்வதற்கு "என்ற விடை கிடைக்கிறது. ஆம். " என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்கிறார் இயேசு. இவ்வார்த்தைகள் நமக்குக் கூறும் செய்தி என்னவெனில் நாமும் பிறரை தந்தையிடம் அழைத்துச்செல்லும் வழிகளாக மாற வேண்டும் என்பதே.

இயேசுவின் வாழ்வு தந்தையை பிரதிபலிக்கின்ற வாழ்வாக அமைந்தது. அவருடைய அன்பும் மன்னிப்பும் இரக்கமும் அரவணைப்பும் மக்களுக்கு தந்தையின் அன்பை நேரடியாகச் சுவைக்கும் வழியாய் இருந்தது என்றால் அது மிகையாகாது. இயேசுவின் மூலம் தந்தைக்கு அருகில் தாங்கள் சென்றதை முதலில் திருத்தூதர்கள் உணரவில்லை என்ற போதிலும் இயேசுவின் உயிர்ப்புக்கு பின் அதை முற்றிலும் உணர்ந்தவர்களாய் அந்நற்செய்தியை பறைசாற்ற தொடங்கினர். இந்நாட்களின் முதல் வாசகங்களில் இயேசு தந்தையின் மீட்புத் திட்டத்தின் மணிமுடியாய் இருக்கிறார். அவர் வழியாகவே நாம் தந்தையிடம் செல்கிறோம் என பவுலும் பிற சீடர்களும் சான்று பகர்வதை நாம் தியானிக்கிறோம்.இவ்வாறு இயேசுவைப் போல சீடர்களும் தந்தையிடம் மக்கள் செல்வதற்கான வழிகளாய் மாறுகிறார்கள் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

அவர்களைப் போல நாமும் நம் அன்பான பண்பான நன்மை நிறைந்த வாழ்வால் மற்றவரை கடவுளிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நம் சகோதர சகோதரிகள் தந்தையாம் கடவுளை நோக்கி செய்யும் பயணத்தில் அவரிடம் அவர்களை கொண்டு சேர்க்கும் வழிகளாக வழிகாட்டிகளாக நாம் திகழ வேண்டும். நமக்கு இயேசு வழியாக இருக்கிறார். அவரோடு இணைந்து நாம் பிறருக்கு வழியாக வேண்டும். அதற்கான வரம் வேண்டுவோம்.

 இறைவேண்டல் 
எங்கள் வழியே இறைவா!  பிறரை உம்மிடம் கொண்டு சேர்க்கும் வழியாய் நாங்கள் மாற அருள் புரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 7 =