கடவுளிடமிருந்து நமக்குக் கிடைக்கும் கைமாறு என்ன? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் 28 ஆம்  புதன்; I: உரோ:  2: 1-11; II : திபா: 62: 1-2. 5-6. 8; III: லூக்:  11: 42-46

இரண்டு ஒரே வயது இளைர்கள் ஒரு தெருவில் வசித்து வந்தனர். ஒருவனுக்கு மற்றவரைப் பிடிக்காது. எப்போதும் ஏதாவது வம்பிழுத்துக்கொண்டே இருப்பார். ஒரு தடவை இருவருள் ஒருபையன் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மிக நேர்த்தியாக உடை அணிந்து நின்று கொண்டிருந்தான். இதைக் கண்ட மற்றொருவன் அவருடைய உடையை கறைப்படுத்த
வேண்டுமெனத் திட்டமிட்டான். மழை பெய்திருந்ததால் சாலைகளில் குண்டும் குழியுமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது. ஆகவே ஒரு பெரிய கல் எடுத்து எறிந்தால் சேறு உடையில் பட்டு கறை பட்டுவிடும் என மனதில் யோசித்துக்கொண்டே ஒரு கல்லை எடுத்து எறிய முற்பட்டான். அப்போது எதிர்பாராத விதமாக அக்கல் அவருகிலேயே விழுந்து சேறு  அவன் மேல் தெளித்தது. அவன் முழுதும் அசுத்தமாகக் காணப்பட்டான். அவனுடைய திட்டம் அவனுக்கு தக்க கைமாறு அளித்து விட்டது.

வினைவிதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு என்பது நீயூட்டனின் விதி. இவை இரண்டுமே வாழ்க்கையின் எதார்த்தத்தை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. நாம் என்ன செய்கிறோமா அதற்கான தகுந்த பலன் நமக்குக் கிடைக்கும். நன்மை செய்தால் நன்மையும், தீமை செய்தால் தீமையும் நம்மை வந்தடையும் என்பதுதான் உண்மை. இக்கருத்தை இன்றைய இரு வாசகங்களும் மிக ஆழமாக எடுத்துரைக்கின்றன.

புனித பவுல் உரோமையருக்கு எழுதிய மடலிலிருந்து  நமக்கு முதல் வாசகம் தரப்பட்டுள்ளது. இப்பகுதியில் அவர் பிறருக்கு தீர்ப்பிடுபவர்கள் தங்களுக்குத் தாங்களே தீர்ப்பிடுகிறார்கள் எனக் கூறுகிறார். இறைவன் கூட மனம் மாற வாய்ப்பளித்து பரிவு காட்டும் போது மனிதர்களாகிய நாம் கடின உள்ளத்தோடு பிறரைத் தீர்ப்பிடுவதும் தண்டிப்பதும் கடவுளின் சினத்தைப் பெற்றுத்தரும் என்ற கருத்தை ஆணித்தரமாகக் கூறுகிறார். 

இயேசு நற்செய்தியில் இம்மனநிலையைக் கொண்டுள்ள பரிசேயர்கள் மற்றும்  திருச்சட்ட அறிஞர்களை கடுமையாகச் சாடுகிறார். ஏனெனில் அவர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொண்டு தங்கள் குற்றங்களை மறைத்துக்கொண்டு அப்பாவி மக்கள் மீது அநியாயமாக சுமைகள் சுமத்தினர். எனவே இயேசு அவர்களை கல்லறைக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். 

அன்புக்குரியவர்களே 
கடவுள் நம் செயல்களுக்கு ஏற்ப நமக்கு கைமாறு அருள்வார். நாம் நல்லவற்றையே செய்வோமெனில் நமக்கும் நன்மையே திரும்பிவரும். தீயவற்றையே நாம் செய்ய எண்ணினால் அதனால் வரும் தீமைகளை எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இதைத்தான் புனித பவுல் " முதலில் யூதருக்கும் பிறகு கிரேக்கருக்கும் அதாவது, தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும். அவ்வாறே, முதலில் யூதருக்கும் அடுத்துக் கிரேக்கருக்கும் அதாவது, நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும். ஏனெனில் கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை." என்ற வார்த்தைகளால் விளக்குகிறார். எனவே நன்மையை மட்டும் செய்யக் கற்றுக்கொள்வோம். கடவுளிடமிருந்து நன்மையான கைமாறு நம்மைத் தேடி வரும்.

இறைவேண்டல்

அன்பு இறைவா! நன்மையின் இருப்பிடமே! உம்மிடம் இருந்து நன்மையான கைமாறுகளைப் பெற நல்லவற்றை செய்யும் மக்களாக நாங்கள் வாழ வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 4 =