எனது நம்பிக்கை ஆழமானதா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


 பாஸ்கா காலம்-முதலாம் வியாழன் 
I: திப: 3:11-26
II: தி.பா: 8:1, 4, 5-6, 7-8
III :லூக்:  24: 35-48 

பாஸ்கா காலத்தின் முதல் வாரத்தில் இருக்கும் நாம் இந்நாட்களில் இயேசு உயிர்ப்புக்குப்பின் தனது சீடர்களுக்கு பல இடங்களில் காட்சி கொடுப்பதையும் அதன் மூலம் தம் சீடர்களுக்கு தான் முன்னர் அறிவித்த அனைத்தும் இறைவனின் திருவுளப்படி நிறைவேறியது என்பதையும் அறிவுறுத்துகிறார் என்பதையும் தெளிவாகக் கூறும் நற்செய்தி பகுதிகளைத் தியானிக்கிறோம். 
முதலாவதாக மகதலா மரியாவுக்குத் தோன்றி தான் உயிர்த்ததை எடுத்துரைக்கச் சொல்கிறார். இரண்டாவதாக எம்மாவுஸ் சென்ற சீடர்களுடன் நடந்து அவர்களின் எல்லா சந்தேகங்களையும் திருசட்டத்தின் மூலமும் தன்னுடைய உயிர்ப்பை அப்பம் பிட்டு வழங்குதல் மூலமும் வெளிப்படுத்துகிறார். ஆயினும் சீடர்களால் அவர் உயிர்த்ததை நம்பமுடியவில்லை.

தன் சீடர்கள் தான் உயிருடன் இருப்பதை நம்புவதற்காக இயேசு தன் காயங்களைக் காட்டுகிறார். அவர்களோடு உணவருந்துகிறார். ஆவிகளுக்கு உடல் இல்லை,உண்ண இயலாது என்பதை விளக்குகிறார். இது இயேசுவுக்கு நிச்சயமாக வருத்தத்தைக் கொடுத்திருக்கும் என்றாலும் சீடர்களை நம்பிக்கையில் ஆழப்படுத்த அவர்களுடைய நிலைக்கு இறங்கி இயேசு தன்னை வெளிப்படுத்துவதை நாம் இன்றைய ற்செய்தியில் வாசிக்கிறோம்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நமது நம்பிக்கை எத்தகைய ஆழமுடையது என சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளின் திருவுளத்தை ஆழமாக எடுத்துரைத்த பின்னும், இயேசுவின் அருஞ்செயல்களை எல்லாம் உடனிருந்து கண்ட பின்னும் சீடர்கள் தங்கள் நம்பிக்கையில் தளர்ந்ததைப் போல, நம் வாழ்விலும் கடவுளின் அருளை பலவழிகளில் அனுபவித்த பின்னும் நாம் நம்பிக்கையில் வளராமல் இருக்கிறோம். எனவே நாம் நம்பிக்கையில் இன்னும் ஆழமாக வேரூன்ற உயிர்த்த இயேசுவிடம் ஜெபிப்போம்.

இறைவேண்டல்

இறைவா நாங்கள் உயிர்த்த இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் இன்னும் ஆழமாக வளர அருள் தாரும்.  ஆமென்.

Add new comment

2 + 2 =