எனக்கு இயேசுவின் மீது அன்பு உண்டா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு
மு.வா:தி ப :5:27-32,40-41
ப.பா :  தி பா: 29:2,4-6,11-13
இவா:திருவெளிப்பாடு 5:11-14
ந.வா:யோவான் 21:1-19

 எனக்கு இயேசுவின் மீது அன்பு உண்டா? 

எங்களுடைய பயிற்சி காலத்தில் நற்செய்தி அறிவிப்பு பணியை பற்றிய வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் அதிக நாட்டமுள்ள தந்தை ஒருவர் வகுப்பை வழிநடத்த வந்திருந்தார். திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும் போது நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியாக " என் மீது அன்புகொண்டுள்ளவன் நான் சொல்வதைக் கடைபிடிப்பான் " என்ற இறைவார்த்தை பாடப்பட்டது. மறையுரையின் போது அவ்வருட்தந்தை " நீங்கள் இயேசுவை அன்பு செய்கிறீர்களா? " எனக் கேட்டார். அதற்கு அனைவரும் ஆம் என வேகமாக பதிலளித்தோம். பின் அவர் நற்செய்தி வாழ்த்தொலியை சப்தமாக மீண்டும் வாசிக்கச் சொன்னார். அதன்பின் மீண்டுமாக " இப்போது சொல்லுங்கள் இயேசுவை அன்பு செய்கிறீர்களா? " எனக் கேட்டார். அதற்கு ஆங்காங்கே மெதுவாக சப்தம் எழுந்தது. ஏனென்றால் இயேசு சொல்வதை நாம் கடைபிடிப்பதில் தவறுகிறோம் என்ற உணர்வு அனைவர் மனதிலும் எழுந்திருந்தது.

இன்றைய நற்செய்திப் பகுதியை வாசித்தவுடன் என் மனதில் தோன்றிய நிகழ்வு இதுவே.எவ்வளவு உண்மையை இந்நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது. அன்பு செய்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது. உண்மையான அன்பு நாம் அன்பு செய்வரின் விருப்பதை நிறைவேற்றுவதிலேதான் முழுமை அடைகிறது. கடவுளை நாம் அன்பு செய்தால் அவரின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற வேண்டும் .

இன்றைய நற்செய்தி பகுதியில் இயேசு பேதுருவிடம் " உனக்கு என்மேல் அன்பு உண்டா?" என மும்முறை கேட்கிறார். தன்னை மூன்று முறை பேதுரு மறுதலித்ததை நினைவுபடுத்தி காயப்படுத்த அவ்வாறு இயேசு கேட்கவில்லை. மாறாக மும்முறை கேட்டு பேதுரு இயேசுவின் மேல் கொண்டுள்ள அன்பின் ஆழத்தை உறுதிப்படுத்தவும் உணரச்செய்யவும் இயேசு அவ்வாறு கேட்டார். ஆனால் கேள்வி கேட்பதோடு மட்டும் நிறுத்திவிடவில்லை.  தன் விருப்பத்தையும் அங்கே பேதுருவிடம் வெளிப்படுத்துகிறார் இயேசு. "என் ஆடுகளைப் பேணி வளர் " " என் ஆடுகளை மேய் " என இயேசு கூறி பேதுருவுக்கு இயேசுவின் மேல் உள்ள அன்பை மெய்ப்பிப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறார் இயேசு. தான் இறப்பதற்கு முன் பேதுருவை பாறை என அழைத்து இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் என்று கூறிய அதே இயேசு,  தன் உயிர்ப்புக்கு பின் தளர்ந்து போன பாறையாய் இருந்த பேதுருவை மீண்டும் திருஅவையின்  அடித்தளமாக்க உறுதியூட்டுகிறார்.

அதே உயிர்த்த இயேசு இன்று உங்களிடமும் என்னிடமும் கேட்கும் கேள்வி இதுவே. " நீ என்னை அன்பு செய்கின்றாயா ?"
நம்முடைய பதிலென்ன. ஆம் என்றால் அவருடைய கட்டளையை நாம் ஏற்கத் தயாராக இருக்கவேண்டும். நாம் அனைவருமே இயேசுவின் மந்தையைச் சேர்ந்த ஆடுகள் தாம். நாம் ஒருவருக்கொருவர் அன்புடன் இருந்து பேணிவளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் நிலைத்திருந்தால் இயேசுவின் மேல் நாம் கொண்டுள்ள அன்பு மெய்ப்பிக்கப்படும். இதைச் செய்ய நாம் வேறெங்கும் செல்லத் தேவையில்லை. நம் குடும்பத்தில், பணிபுரியும் இடத்தில், அண்டை அயலாரிடத்தில், வழிதவறிய இளைஞர்களிடத்தில், நம் கண்முன் துயருறும் ஏழைகளிடத்தில் நாம் காட்டும் அன்பும் அக்கறையும் இயேசுவிடம் நாம் கொண்டுள்ள அன்பை சேர்த்துவிடும். அது எளிதல்ல. தடைகளும் தடங்கல்களும் இருக்கும். அதையும் நாம் கடந்து செல்ல வேண்டும். இப்போது சிந்திப்போம். " நான் இயேசுவை அன்பு செய்கிறேனா? என் பதில் என்னவாக இருக்கப்போகிறது?

 இன்று மேதினம். உழைப்பாளிகளை பெருமைப்படுத்தும் நாள். புனித யேசேப்பை உழைப்போர்க்கு அடையாளமாய்க் கொண்டு மகிமைப்படுத்தக் கூடிய நாள். யோசேப்பு கடவுளை அன்பு செய்தார் என்பதை கடவுளின் தூதர் கனவில் சொன்னதைக் கடைபிடித்து வாழ்ந்ததில் காட்டினார். திருக்குடும்பத்தை கடவுளின் கட்டளைக் கேற்ப தன் கடின உழைப்பால் ஊட்டி வளர்த்து பாதுகாக்கும் தந்தையானார். அவரைப் போலவே இன்றும் பல யோசேப்புகள் கடின உழைப்பால் தியாகங்கள் பல புரிந்து கடவுள் தங்களுக்குத் தந்த குடும்பத்தை பேணிவளர்க்கும் தந்தையாகத் திகழ்கின்றார்கள். அதன்மூலம்  இயேசுவின்மேல் தங்களுக்குள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் அனைவரையும் இன்று நன்றியோடு எண்ணி அவர்களுக்காகவும் செபிப்போம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! 
நாங்கள் உம்மேல் கொண்டுள்ள அன்பை உறுதிப்படுத்தி நீர் சொல்வதைக் கடைபிடிக்கும் மக்களாக வாழ்ந்திடும் வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 2 =