எதிர்பார்ப்பில்லா அன்பா!


இன்றைய வாசகங்கள் (10.09.2020)-பொதுக்காலத்தின் 23 ஆம் வியாழன்; I: 1கொரி:   8: 1-7, 11-13; II: திபா: 139: 1-3, 13-14, 23-24;III: லூக்: 6: 27-38

"எதிர்பார்ப்பில்லா அன்பா!"

ஒரு ஊரில் அரசு வேலை செய்கின்ற ஒரு இளைஞர் இருந்தார். அவர் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் தன்னிடம் நிறைவாக உள்ளதை வைத்து உதவி செய்து வந்தார். வசதியின்மையின் காரணமாக தாங்கள் விரும்பிய மேற்படிப்பை படிக்க முடியாத இளையோருக்கு பொருளாதார உதவி செய்து வழிகாட்டினார். யாருக்கு உதவி செய்தாலும் அவர் எதையும் எதிர்ப்பார்க்காமல் செய்தார். அவர் உதவி செய்து மேற்படிப்பு படித்த இளைஞர் ஒருவர் படித்து அரசு வேலை பெற்றார். அப்பொழுது உதவி பெற்ற அந்த இளைஞர் தன் வாங்கிய முதல் சம்பளத்தை உதவி செய்த அந்த இளைஞரிடம் கொடுத்தார். அப்பொழுது உதவி செய்த இளைஞர் உதவி பெற்ற இளைஞரை நோக்கி "நம் சமூகத்தில் படிக்க வசதியில்லாத இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய் "என்று கூறி வழியனுப்பினார். அந்த உதவி பெற்ற இளைஞரும் வசதியில்லாத இளைஞர்களை கண்டறிந்து உதவி செய்தார். இதை கண்ட மற்றொரு இளைஞர் "இவ்வாறு உங்களால் இவ்வளவு பெருந்தன்மையோடு இருக்க முடிகிறது" என்று கேட்டார் .அதற்கு அவர் "நான் ஒரு கிறிஸ்தவர். என்னை வழி நடத்துகின்ற என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை அன்பு செய்கின்றார். எல்லா வசதிகளையும் கொடுத்துள்ளார். நிறைவான மகிழ்ச்சியை கொடுத்துள்ளார். என் துன்ப வேளையில் எனக்கு துணையாக இருந்து என்னை வழி நடத்தியுள்ளார். இப்படிப்பட்ட ஆண்டவர் இயேசுவிடம் நான் கற்றுக்கொண்டது  எதுவும் எதிர்பாராத அன்பு ஆகும். இந்த இயேசுவின் மனநிலையில் நான்  வாழ்வதால் தான் என்னால் இவ்வளவு உதவி செய்ய முடிகிறது.   அன்போடு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்  உதவி செய்வதற்கு பணம் முக்கியமல்ல ;மாறாக, நல்ல மனம் இருந்தாலே போதும். இப்படிப்பட்ட நல்ல மனம் தான் இயேசுவின் மனநிலை" என்று கூறினார். இவற்றைக் கேட்ட அந்த மற்றொரு இளைஞர் இயேசுவின் அன்பைச் சுவைக்கத் திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவராக மாறினார். தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார்.

உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது பெறுவதில் அல்ல. மாறாக, அன்போடு பிறருக்கு கொடுப்பதில் தான் அடங்கியுள்ளது . நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்பு என்று மிகச்சிறந்த கட்டளை எனக்கு கொடுத்துள்ளார். அன்புதான் இந்த உலகத்தை ஆள வேண்டும் என்ற மகத்தானச் சிந்தனையை நமக்கு வழங்கியுள்ளார். நம்முடைய வாழ்வு அன்பினால் கட்டப்படும் பொழுது இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர முடியும். நம்மை அன்பு செய்பவர்களை தாண்டி நம்மை வெறுப்பவர்களையும் அன்பு செய்யக் கூடிய மன நிலையைப் பெறுவது நம் ஆண்டவர் இயேசுவின் மனநிலை.

நம்மைப் படைத்த இறைத்தந்தை அன்பும் இரக்கமும் நிறைந்தவராக இருக்கின்றார். இந்த உலகம் படைக்கப்பட்டதே நாம் நம் கடவுளோடும் அவரின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களோடும் அனைத்து படைப்புகளோடும் உறவு  கொள்வதற்காகவே ஆகும் . எனவே தான் மனிதர்களாகிய நாம் எவ்வளவு முறை தவறு செய்தாலும் வழிமாறி சென்றாலும் நம்மை மன்னித்து அன்பு செய்பவராகக் கடவுள்  இருக்கின்றார்.  இன்றைய  நற்செய்தி வழியாக நம் ஆண்டவர் இயேசு எதிர்பார்ப்பில்லாத அன்பு செய்வதுதன் வழியாக முதிர்ச்சி நிறைந்த மனிதர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். முதிர்ச்சி நிறைந்த மனிதராக வாழ்வது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.

நாம் வாழுகின்ற காலத்தில் வாழ்ந்த புனித அன்னை தெரசா முதிர்ச்சி நிறைந்த அன்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். அவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை ஏற்றுக் கொண்டவர்களையும் ஏற்றுக்கொள்ளாதவர்களையும் முழுமனதோடு அன்பு செய்தார். துன்பப்பட்ட மக்களிடத்தில் இறைமகன் இயேசுவை கண்டு அவர்களுக்கு பணிவிடை செய்தார். இத்தகைய எதிர்பார்ப்பில்லாத அன்பு தான் ஒரு முதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவ வாழ்வு. எனவே எதிர்ப்பார்க்காத மனநிலையில் பிறரை முழுமனதோடு அன்பு செய்யும் பொழுது நாம்  முதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவர்களாக  உருமாற முடியும். இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர முடியும். இத்தகைய மனநிலையை தான் நம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி வழியாக நம்மிடம் எதிர்பார்க்கிறார். எதிர்பார்க்காத அன்பின் வழியாக மனித மாண்பையும் மனிதநேயத்தையும் உயர்த்திடவும்  இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகரவும்  மனித மாண்பையும் மனிதநேயத்தையும் இவ்வுலகில் உயிரோட்டம் பெறவும் தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :

அன்பின் இறைவா! நாங்கள் எங்களுடைய அன்பை குறுகிய வட்டத்தில் சுருக்கி விட்டு சுயநலத்தோடு வாழ்ந்து உள்ளோம். அதற்காக மன்னிப்பு கேட்கின்றோம். நீர் எம்மை அன்பு செய்வது போல நாங்களும் பிறரை முழுமனதோடு அன்பு செய்ய தேவையான அருளைத் தரும். எதிர்பார்ப்பு இல்லாத மனநிலையில் பிறரை அன்பு செய்யும் மனப்பக்குவத்தையும் தெய்வீக ஆற்றலையும் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

11 + 6 =