எதற்கு முக்கியத்துவம்? | குழந்தைஇயேசு பாபு


பொதுக்காலத்தின் 27 ஆம் செவ்வாய் - I. கலா: 1:13-24; II. திபா: 139:1-3,13-14,15; III. லூக்: 10:38-42

மனித வாழ்வு என்பது இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கொடை. நம்முடைய அன்றாட வாழ்விலே பலவற்றில் நாம் பரபரப்பாக இருக்கின்றோம். ஆனால் சுறுசுறுப்பாக இருக்க, இயங்க மறந்து விடுகின்றோம். பரபரப்புக்கும், சுறுசுறுப்புக்கும் என்ன வித்தியாசம் என்றால், பலவற்றைப் பற்றி கவலைப்பட்டு நம்முடைய இலக்கைப்பற்றிய  தெளிவின்மையே பரபரப்பு. மாறாக, ஒரு சிலவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, நம் இலக்கை நோக்கி தெளிவாகப் பயணிப்பது சுறுசுறுப்பாகும். நம் அன்றாட வாழ்விலேயே வெற்றிக்குத் தடையாக இருப்பது பரபரப்பான மனநிலையே.

ஓர் ஊரில் இரண்டு நபர்கள் வியாபாரம் செய்தனர். ஒருவர் மிகப்பெரிய கடையைக் கட்டி எப்படியாவது செல்வந்தராக மாற வேண்டும் என்று பரபரப்பாக வேலை செய்து வந்தார். மற்றொருவர் சிறிய கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறினார். பெரியகடை வைத்து பரபரப்பாக இருந்தவர்  வியாபாரத்தில் நட்டத்தை அடைந்தார். ஆனால் சிறிய கடையை வைத்து இலக்கு நோக்கி தெளிவாக, சுறுசுறுப்பாக உழைத்தவர் படிப்படியாக முன்னேறினார். வியாபாரத்தில் மிகப்பெரிய இலாபத்தைப் பெற்றார். தேவையற்ற பரபரப்பு மன நிம்மதியின்மையையும், தோல்வியையும் கொடுக்கின்றது. அவற்றிலிருந்து விடுதலைப் பெற நம்மையே நாம் கூர்மைப்படுத்த வேண்டும்.

இன்றைய நற்செய்தி அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கின்றது. இயேசு, மார்த்தா மற்றும் மரியா என இரு சகோதரிகள் இருக்கும் வீட்டிற்குச் சென்றார். இயேசு வந்தவுடன் அவரை உபசரிக்க வேண்டும் என்று பரபரப்பாக இருக்கின்றார் ஒரு சகோதரி. ஆனால் மரியாவோ இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இயேசுவின் பார்வையில் இருவரும் நல்லது செய்ய நினைத்தாலும், மரியாவையே இயேசு பாராட்டுவதாகப் பார்க்கின்றோம். இதற்கு காரணம் மரியா இவ்வுலகம்  சார்ந்தவற்றில் பரபரப்பாக இல்லாமல், விண்ணுலகம் சார்ந்த இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதில் சுறுசுறுப்பாக இருந்தார். இந்த நிகழ்வின் மூலமாக எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இயேசு மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். நம் அன்றாட வாழ்விற்கு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தை இயேசு கற்பித்துள்ளார்.  

ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு 24 மணி நேரத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் கடவுளுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்? என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம்.  உழைப்பது தவறல்ல; மாறாக அந்த உழைப்பு மிகுந்த விளைச்சலைக் கொடுக்க நாம் இறைவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இறைவனுடைய வார்த்தைக்கு செவிமடுத்து முழு ஈடுபாட்டோடு உழைக்கும் பொழுது நிச்சயமாக நூறு மடங்கு விளைச்சலை நாம் பெற முடியும்.

புனித அன்னை தெரசா மிகச்சிறந்த மனிதநேய செயல்பாடுகளை ஒரு நற்செய்தி பணியாகச் செய்து வந்தார். அப்பொழுது ஒருவர் அன்னை தெரசாவிடம் "எவ்வாறு இந்த அளவுக்கு பணிகளைச் செய்ய முடிகின்றது? என்று கேட்டபோது "நற்கருணை ஆண்டவரிடம் ஒரு மணி நேரம் இறைவேண்டல் செய்வதால்தான் முடிகின்றது" என்று பதில் கூறியுள்ளார். வாழ்வில் வெற்றி அடைந்துள்ள எண்ணற்ற மாமனிதர்கள் இறை நம்பிக்கையில் ஆழமானவர்களாக இருந்துள்ளனர்.  எனவே நமது அன்றாட வாழ்விலே பல பரபரப்பானப் பணிகளைச் செய்து வருகின்றோம் . ஆனால் கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விடுகின்றோம். அதன் விளைவாக நம் வாழ்வில் பல துன்பங்களைச் சந்திக்கின்றோம். எனவே நாம் செய்கின்ற பணிகளில் முழு வெற்றியைக் காண இறைவனுக்கு சில மணி நேரம் முக்கியத்துவம் கொடுப்போம்.  அப்பொழுது நம் வாழ்வு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வாக மாறும். குறிப்பாக நாம் வாழும்  கிறிஸ்தவ வாழ்விலே முழு நிறைவு காண இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு செவிமடுப்போம். அதற்கு நமக்கு கொடுக்கப்பட்ட உன்னதமான கொடை தான் திருப்பலி. திருப்பலியின் வழியாகத்தான் இறைவார்த்தையும், இறைப்பிரசன்னத்தையும் உணர முடியும். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் கடன் திருநாளாகிய ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியில் பங்கெடுக்க முயற்சி செய்வோம். அவ்வாறு பங்கெடுக்கும் பொழுது இறைவனின் அருள் அந்த வாரம் முழுமைக்கும் இருக்கும். எனவே மார்த்தாவைப் போல் நல்லது செய்வதாக நினைத்து இவ்வுலகம் சார்ந்தவற்றில் பரபரப்பாக இருக்காமல் இறைவனின் வார்த்தைக்குச் செவிமடுக்க திருப்பலி போன்ற ஆன்மீக காரியங்களில் பங்கெடுத்து   இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவரின் வார்த்தையைக் கேட்ட மரியாவைப் போல்  நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர்வோம். பரபரப்பான மனநிலையை விடுத்து, சுறுசுறுப்பான மனநிலையோடு, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பகுத்தறியக்கூடிய ஞானத்தைப் பெற்றுக்கொள்ள தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் எங்கள் வாழ்விலே இவ்வுலகம் சார்ந்தவற்றில் பரபரப்பாக வாழ்ந்து வருகின்றோம். ஆனால் பல நேரங்களில் உம் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடுகிறோம். அதனால் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றோம். அத்தகையத் தருணங்களை நினைத்து மன்னிப்பு கேட்கின்றோம். இறைவார்த்தைக்கு செவிமடுத்து, அதை அனுபவித்து, அதன்படி வாழ, தெய்வீக அருளையும் ஞானத்தையும் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

15 + 5 =