உழைப்பே மூலதனம்! | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


work

இன்றைய வாசகங்கள் (26.08.2020) - பொதுக்காலத்தின் 21 ஆம் புதன் - I. 2 தெச. 3:6-10,16-18; II. தி.பா. 128:1-2,4-5; III. மத். 23:27-32 

ஐசக் நியூட்டன் இருபது ஆண்டுகள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் உழைத்து தமது ஆராய்ச்சி முடிவுகளை கண்டறிந்து, அதை பல பேப்பர்களில் வைத்திருந்தார். ஒருநாள் ஆராய்ச்சி முடிவுகள் எழுதி வைத்த பேப்பர்களை மேஜை மீது வைத்துவிட்டு வெளியில் உலாவச் சென்றார். அப்போது மேஜை மீது மெழுகு வர்த்தி ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த அறையில் அவரது அன்பு வளர்ப்பு நாய் இருந்தது. அவர் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த நாய் அங்குமிங்கும் தாவிக் குதித்து விளையாட ஆரம்பித்துவிட்டது. மேஜை மீது குதித்தபோது அங்கே எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி சாய்ந்து அங்கே ஆய்வுப் பேப்பர்களின் மீது விழுந்தது.

ஐசக் நியூட்டனின் இருபது ஆண்டு கால உழைப்பின் பலனான அந்த ஆய்வு பேப்பர்கள் சாம்பலாயின. வெளியில் உலாவச் சென்ற அவர் திரும்பி வந்தார். எரிந்துபோன ஆய்வு பேப்பர்களைக் கண்டு அவர் மனம் என்ன பாடுப்பட்டிருக்கும்?

இருபது ஆண்டு கால உழைப்பு ஒரு சில நொடிகளில் தீய்க்கு இரையாகி வீணாயிற்று. வேறு யாராக இருந்தாலும் அந்த இடத்திலேயே நாய்க்கு கல்லறை கட்டியிருப்பார்கள். ஆனால் ஐசக் அப்படி ஏதும் செய்யவில்லை. அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் நிலை தடுமாறவில்லை. பொறுமை அவரை ஆட்கொண்டிருந்தது. மிகவும் பரிவுடன் நாயின் தலையை வருடினார். அன்புடன் அதனிடம் சொன்னார்; “ஓ …. டைமண்ட்” (அந்த நாயின் பெயர்) “நீ என்ன காரியம் செய்துவிட்டாய்? இதன் மதிப்பு உனக்குத் தெரியுமா?” என்று அமைதியாக கூறினார்.

மீண்டும் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். அதை முடிக்க மேலும் பல ஆண்டுகள் ஆயின. இருந்தாலும் பொறுமையுடன் உழைத்தார்; உயர்ந்தார் ஐசக் நியூட்டன்.

இவரின் வாழ்வு நமக்கு உழைப்பின் மேன்மையை சுட்டிக்காட்டுகிறது.  நாம் நம்முடைய வாழ்க்கையை பயணத்திலே சாதனைகள் பல புரிய வேண்டுமென்றால் உழைப்பு என்ற மூலதனத்தை கொடுக்க வேண்டும். சாதித்த பெரும் சான்றோர்கள் எல்லாம் உழைப்பால் மட்டுமே உயர்ந்தார்கள். கடந்த வாரத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திரசிங் தோனி  உழைப்புக்கு ஒரு முன்னுதாரணம். எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தினார். உழைப்பு என்ற மூலதனத்தை முழுமையாக கொடுத்தார். அதன் பயனாக அவர் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு உழைப்பு என்னும் மூலதனத்தை செலுத்தினார். எனவேதான் இந்நாள் வரை அவர் பெருமைக்குரியவராக பேசப்படுகிறார். உழைப்பவர்கள் தான் வாழ்வில் முன்னேற முடியும். உழைப்பில் தான் நம்முடை வெற்றி அடங்கியுள்ளது.

இன்றைய முதல் வாசகம் நாம் உழைத்து உண்ண வேண்டும் என்ற ஆழமான சிந்தனையை கொடுக்கின்றது. புனித பவுலடியார் "உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது (2 தெச. 3:10) என்று சொல்லி உழைத்து வாழ வேண்டும் என அறிவுறுத்துகின்றார். "உங்களிடையே இருந்த போது நாங்கள் சோம்பித் திரியவில்லை." (2தெச. 3:7) என்று பவுலடியார் கூறி சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு உழைத்து வாழ அழைப்பு விடுக்கிறார். 

இயேசுவின் இரண்டாம் வருகை விரைவில் வரவிருக்கின்றது என தவறுதலாக புரிந்து கொண்டு உழைக்க மனமில்லாமல் சோம்பேறித்தனத்தோடு வாழ்ந்த மனிதர்களை   உழைத்து உண்ண அழைப்பு விடுக்கின்றார். புனித பவுலடியாரும் நற்செய்திப் பணியினை செய்தபோதிலும் தன்னுடைய அன்றாட உணவுக்காக உழைத்து உண்டதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

நம் ஆண்டவர் இயேசுவும் கூட தன்னுடைய இறையாட்சி பணியைத் தொடங்குவதற்கு முன்பாக முப்பது ஆண்டுகள் தன் தந்தையின் தொழிலான தச்சுத் தொழிலை செய்து அன்றாட உணவினை உண்டு வந்தார். இயேசு இறைமகனாக இருந்த போதிலும் தனது ஆற்றலை சுயநலத்தோடு பயன்படுத்தி உணவை உண்ணாமல் உழைத்து உணவை உண்டார். இந்த செயல்பாடு நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றது. இயேசு இன்றைய நற்செய்தியில் பரிசேயர்களை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என கூறுகிறார். இது எதைச் சுட்டிக் காட்டுகிறது என்று சொன்னால் அவர்களின் சோம்பேறித்தனத்தை சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் இறைவாக்கினரின் கல்லறைகளை கட்டுகிறார்கள். நேர்மையாளர்களின் நினைவுச் சின்னங்களை அழகு படுத்துகிறார்கள்.

இவ்வாறு செய்து கொண்டு கடந்தகால நிகழ்வுகளை நினைத்து மனமகிழ்ச்சி கொள்கிறார்கள். ஆனால் நிகழ்காலத்தை வாழ மறந்து விடுகின்றார்கள். நிகழ்காலத்தில் சோம்பேறித்தனத்தோடு வாழ்ந்தார்கள். அந்த சோம்பேறித்தனத்தின் உச்சத்திலே தான் வறியவர்களையும் ஏழைகளையும் ஒடுக்கி சுகமாக வாழ்ந்தார்கள். இதைச் சுட்டிக்காட்டிய இறைவாக்கினர்களை அழித்தார்கள். இத்தகைய மனநிலையை தான் இயேசு வன்மையாக கண்டிக்கிறார். இறைவாக்கு உரைக்க வந்த இறைவாக்கினர்களைக் கொன்றுவிட்டு  அவர்களின் கல்லறைகளை கட்டுவது வெளிவேடத்தின் உச்சகட்டமாக இருப்பதாக தனது கோபத்தை "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே!" என்று  வெளிப்படுத்துகிறார்.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே  வெற்றிபெற வேண்டுமெனில் கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் நினைத்து வருந்திக் கொண்டிருக்காமல் நிகழ்காலத்தை முழுமையாக  வாழ்வோம். இந்த நிகழ்காலத்தில் உழைப்பு என்னும் மூலதனத்தை முழுமையாகச் செலுத்தி வாழ்வில் முன்னேற்றம் காண இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. உழைப்பின் வழியாகத்தான் உண்மையான வெற்றியை அடைய முடியும் என்ற கருத்தை மனதில் வைத்து நம்மிடமுள்ள சோம்பேறித்தனத்தை அகற்ற முயற்சி செய்வோம். உழைத்து உண்ணக்கூடிய மனநிலையை பெற்றுக்கொள்வோம். உழைக்காமல் உண்பது நிரந்தரமற்றது. அது நிறைவான ஆற்றலை நமக்கு தராது. எனவே நாம் முழுமையான உழைப்பை செலுத்தும் பொழுது கடவுள் நம் உழைப்பின் பொருட்டு மிகப்பெரிய முன்னேற்றத்தையும் வெற்றியையும் கொடுப்பார். எனவே உழைப்பின் வழியாக வாழ்வில் முன்னேற்றம் அடைய தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பான ஆண்டவரே! "உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது" என்று பவுலடியார் கூறுவதைப் போல நாங்கள் பெரும்பாலான நேரங்களில் உழைக்க மனம் இல்லாதவர்களாக இழந்திருக்கின்றோம். அதற்காக மன்னிப்பு கேட்கின்றோம். நாங்கள் எங்களுடைய ஆற்றலையும் அறிவையும் பயன்படுத்தி உழைப்பு என்ற மூலதனத்தின் வழியாக வாழ்விலே முன்னேற்றம் காண தேவையான அருளைத் தரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

10 + 4 =