உருமாற விருப்பமா?|குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (30.07.2020)-பொதுக்காலத்தின் 17 ஆம் வியாழன் - I. எரே: 18: 1-6;

II.திபா:146: 1-2, 3-4; III.ந.வா : மத்: 13: 47-53

"இறை மதிப்பீட்டின் கருவிகளா நாம்! "

விண்ணரசு என்பது ஒரு வருங்கால எதிர்ப்பார்ப்பு அன்று; மாறாக, அன்றாட வாழ்விலே கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, நம் வாழ்க்கையை அமைத்தல் ஆகும்.  இன்றைய வாசகங்கள் இறை மதிப்பீட்டின்படி வாழ அழைப்பு விடுக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் வழியாக மிக அருமையான உருவக நிகழ்வை ஆண்டவர் அருளினார்.

குயவன் வீட்டிற்கு எரேமியா  இறைவாக்கினர் அனுப்பப்படுவதாகப் பார்க்கிறோம். அங்கு செயல்முறையில் இறைவனுக்கு ஏற்ற கருவிகளாக மாற அழைப்பு விடுப்பதாக இருக்கின்றது. இங்கு குயவன் என்பவர் நம்மைப் படைத்த கடவுள். களிமண் என்பது நாம். குயவனாகிய இறைவன் நம்மை அவருடைய திருவுளப்படி வடிவமைக்க விரும்புகிறார். நன்மை செய்யும் மனநிலையில்  இறைவனுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் பொழுது இறைவன் விரும்பும் வகையில் நாம் பலன் கொடுக்க முடியும். நம்முடைய தீய சிந்தனைகள் வழியாக இறை விருப்பத்திற்கு எதிராக நடக்கும் பொழுது, நிச்சயமாக நாம் கடவுள் விரும்பும் வகையில் வாழ்வை வாழ முடியாது.  கடவுளின் விருப்பப்படி வாழ்வதும் வாழாததும் நம்முடைய கையில் தான் இருக்கின்றது.

"இஸ்ரேயல் வீடே,  இதோ,  குயவன் கையில் மண் எப்படியோ, அப்படியே நம் கையில் நீங்கள் இருக்கிறீர்கள் " (எரே: 18:6) குயவன் களி மண்ணுக்கு மீண்டும் மீண்டும் தான் விரும்பும் சாயலைக் கொடுக்க முயல்வது போல, இறைவனும் அவரின் சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரை விட்டு விலகிச் சென்றாலும் அவருக்கேற்ற வகையில் வடிவமைக்க விரும்புகின்றார். இதற்கு நாம் நம்முடைய தீமைகளைக் களைந்து நன்மைகளுக்கு சான்று பகர வேண்டும். மேலும் இன்றைய திருப்பாடலில் வருவதுபோல இறைவனைத் தம் துணையாகக் கொண்டு பேறுபெற்றவர்களாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இன்றைய நற்செய்தியிலும் நம் ஆண்டவர் இயேசு விண்ணரசின் மதிப்பீட்டின்படி வாழ்ந்து நல்ல மனிதர்களாக உருமாற அழைப்புவிடுக்கிறார். விண்ணரசைக் கடலில் வீசப்பட்ட வலைக்கு ஒப்பிடப்படுகிறது. வலை, நல்ல மற்றும் கெட்ட மீன்களை வாரி இழுத்து வருகிறது. அதன் பின்பு நல்லவை கூடையில் சேர்த்து வைக்கப்படுகிறது. கெட்டவைகள் தூக்கி எறியப்படுகிறது. உலக முடிவிலும் நல்லவர்கள் பேரின்ப வாழ்வை பெற்றுக்கொள்வர் எனவும் தீயவர்கள் தீச்சூளையில்  தள்ளப்படுவர் எனவும் இன்றைய நற்செய்திச் சுட்டிக்காட்டுகின்றது.

இந்த செய்தி நம்மைப் பயமுறுத்துவதற்காக அல்ல; மாறாக, நாம் நம்முடைய தீமைகளை விட்டுவிட்டு நீதியின் ஆண்டவர் முன் உண்மை உள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

நீதியையும் உண்மையையும் நிலைநாட்டி குயவனாகிய கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழும் பொழுது, நாம் இறைவன் விரும்பும் இறைக்கருவிகளாக மாறமுடியும். எனவே தீமை செய்யும் மனநிலையை நீக்கி, நன்மை செய்யும் மனநிலையை வளர்த்துக் கொள்வோம்.

ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் வாழ்ந்தார்கள். ஒருவர் பல்வேறு நன்மைகளைச் செய்து வந்தவர். மற்றொருவர் வாழ்க்கை முழுவதும் தீமையைச் செய்து வந்தவர். நன்மை செய்து வந்தவர் தீமை செய்தவரைப் பார்த்து "உனக்கு நிச்சயம் நரகம்தான்" என்று சொன்னார். இரண்டு பேரும் வயதான பிறகு இறந்தனர். இரண்டு பேருமே சொர்க்கத்தில் இருந்தனர். எனவே நன்மை செய்த நபர் கோபமுற்றவராய் கடவுளிடம்  " ஏன் வாழ்நாள் முழுவதும் தீமை செய்தவனைச் சொர்க்கத்தில்  அனுமதித்தீர்கள்? " என்று கேட்டார் . அதற்கு கடவுள் "வாழ்நாள் முழுவதும் அவர் தீமை செய்ததாக உன் கண்ணில் பட்டாலும் அவர் சிறுசிறு நன்மைகளைச் செய்தார். ஒரு முறை உயிருக்கு போராடிய நாயை குணப்படுத்தி நல்ல உணவளித்தார். வானத்து பறவைகளுக்கு இறையும் தண்ணீரும்  வைத்தார். இவை போன்ற சிறு சிறு நற்பண்புகளைச் செய்தார். இவர் செய்த நன்மைகளின் பொருட்டு இவருக்கு சொர்க்க வாழ்வு கிடைத்துள்ளது " என்று கூறினார்.

எனவே இக்கதையில் வருவது போல, நம்முடைய அன்றாட வாழ்வில் தீமைகளைக் களைந்து நன்மைகளைச் செய்யக்கூடியவர்களாக மாற முயற்சி செய்வோம். அப்பொழுது நீதியின் ஆண்டவரின் முன்னிலையில் இறுதிநாளில் ஏற்றுக் கொள்ளப்படுவோம். நம்மையே முழுமையாக இறைவனிடம் ஒப்புக் கொடுக்கும் பொழுது , நாம் இறைவன் விரும்பும் வகையில் அவருக்கேற்ற கருவிகளாக உருமாற முடியும். இறை மதிப்பீட்டின்படி வாழ்ந்து கருவிகளாக உருமாற இறையருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :

வல்லமையுள்ள இறைவா! களிமண்ணாகிய நாங்கள் குயவனாகிய உம்மிடம் முழுமையாக ஒப்படைக்கிறோம். உமக்கு ஏற்றவகையில் எங்களை உருமாற்றி, உமது மதிப்பீட்டை வாழ்வாக்கும் கருவிகளாக மாற அருளைத் தரும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

1 + 0 =