உயிர்ப்பு -நற்செய்தி தூதுவர்களின் ஊக்கம்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா எண் கிழமை-திங்கள்
I: திப: 2:14,22-33
II: தி.பா 16: 1-2. 5,7-8. 9-10. 11
III : மத் 28: 8-15

நாம் அனைவரும் பாஸ்கா காலத்தைப் பெருமகிழ்வோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.இந்தப் பாஸ்கா காலம் நம்மை பழைய பயந்த வாழ்வைக் கடந்து புதிய திடமான வாழ்வை வாழ  அழைக்கிறது. 
இன்றைய நற்செய்தியில் இயேசு சில பெண்களுக்குத் தோன்றி இயேசு உயிர்த்த செய்தியையும் அவர் சீடர்களை கலிலேயாவில் சந்திக்கப் போவதை அறிவிக்குமாறு அனுப்புவதையும் நாம் வாசிக்கிறோம்.

யூதர்களின் வழக்கத்தில் பெண்கள் இரண்டாம் தரக்குடிமக்களாகவே கருதப்பட்டனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவர்கள் கூறுவதையும் யாரும் அவ்வளவு எளிதாய் நம்புவதில்லை.இந்நிலையில் இயேசுவின் உயிர்ப்பின் நற்செய்தியை முதன்முதலில் அறிவிக்க இயேசு பெண்களையே தேர்ந்து கொண்டார். அஞ்சாதீர்கள் என தைரியம் கூறுகிறார். அத்தோடு தாங்கள் பெற்றுக்கொண்ட அம்மகிழ்வின் செய்தியை பிறருக்கும் அறிவிக்க ஊக்கமூட்டுகிறார் இயேசு.

இயேசுவின் உயிர்ப்பே கிறிஸ்தவ வாழ்வின் நம்பிக்கையின் அடித்தளம் என நேற்றைய நாளில் நாம் சிந்தித்தோம்.கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட நம்பிக்கையே நற்செய்தி. இந்நற்செய்தியை நாம் மட்டும் அனுபவித்தால் போதாது. அதை மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்பது தான் இன்று இயேசு நமக்கு வழங்கும் செய்தி.

துன்பங்களையும் இறப்பையும் தாண்டிய நிலைவாழ்வு நமக்கென இயேசுவால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பலவேளைகளில் நம் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளையும், இறப்பு உயிர்ப்புகளையும், விழுந்து எழுதலையும் கடந்து தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வனைத்து அனுபவங்களிலும் நம் ஆண்டவர் இயேசு நம்மைச் சந்தித்து நம் நம்பிக்கையை ஆழப்படுத்தி நம்மை உயர்த்திக்கொண்டே இருக்கிறார்.இந்த அனுபவத்தைத் தான் நாம் பிறருக்குப் பகிர வேண்டும். வலிமைமிகு ஆண்களாக இருந்தாலும் இறப்புக்குப் பின் பயந்து வாழ்ந்த சீடர்களுக்கு நம்பிக்கையின் நற்செய்தியை அறிவிக்க அவர்களைவிட வலிமை குறைந்த பெண்களுக்கு இயேசு உயிர்ப்பின் அனுபவத்தை அளித்து நற்செய்தி அறிவிக்க ஊக்கம் கொடுத்தார். அதே போல வலிமை குன்றியர்வகளாய் இருந்தாலும் நமக்கும் தன் உயிர்ப்பின் அனுபவத்தை அளித்து ஊக்கமளிப்பார் என்பது உறுதி. எனவே உயிர்ப்பின் அனுபவத்தைப் பெற்று நற்செய்தித் தூதுவர்களாக உருமாற ஊக்கம் பெற இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

எங்களின் உறுதுணையே இறைவா!  இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தால் ஊக்கம்பெற்று நற்செய்தியின் தூதுவர்களாய் உருமாற அருள் தாரும். ஆமென்.

Add new comment

3 + 3 =