உனக்குள் இருக்கும் கிறிஸ்துவை நீ உணர்கிறாயா? | குழந்தைஇயேசு பாபு | Sunday Reflection


பொதுக்காலத்தின் 16 ஆம் ஞாயிறு
I: தொ நூ 18: 1-10
II: தி.பா 15: 2. 3-4. 5
III:கொலோ15: 2. 3-4. 5
IV: லூக் 10: 38-42

நண்பர்கள் இருவர் சந்தித்துக்கொண்டனர். அந்த நண்பருடன் தன் மனைவி மிகுந்த நட்புணர்வோடு பேசி மகிழ்வார் என்பதை அறிந்த அவர் தன் மனைவியிடம் "இன்று நம் விருந்தாளி வந்திருக்கிறார் " எனக் கூறினார்.அதற்கு அந்த மனைவி " எனக்கு இருக்கிற வேலைச் சுமை போதாதென்று இன்னும் எல்லாரையும் கூட்டிவந்து பணிவிடை செய்யச் சொல்கிறீர்களா?  "எனக் கேட்டார். இதை மறைந்திருந்து கவனித்த விருந்தாளியாக வந்த நண்பர் மிகவும் வருத்தத்தோடு வீட்டிற்குள்ளே வராமலேயே சென்றுவிட்டார்.

இச்சிறுநிகழ்வில் அந்த பெண், விருந்தினர் இருப்பதை அறியாமல்  தான் அவ்வாறு பேசினார். ஆனால் பல தடவை நாம் தெரிந்தும் நம்மைத் தேடி வருபவர்களையும் நம்மோடு இருப்பவர்களையும் உதாசீனப்படுத்தி அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம். அதைவிட மேலாக நமக்குள் இருக்கும் நம் இறைவனை, இயேசுக் கிறிஸ்துவை நாம் உணராமலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அவல நிலையில் நம் ஆன்மீக வாழ்வு இருக்கிறதல்லவா!

பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு வழிபாடு நம் அனைவருக்கும் நமக்குள் இருக்கும் கிறிஸ்துவைக் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்கான அறைகூவலை விடுக்கிறது. இன்றைய மூன்று வாசகங்களுமே நமக்கு இச்சிந்தனையை ஆழமாகத் தருகிறது.

முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் விருந்தினரை உபசரிக்கும் பாங்கினை நமக்குச் சுட்டிக்காட்டுவதாக இருந்தாலும் கடவுளின் உடனிருப்பை எவ்வாறு உணர்வது என்ற வழியை நமக்குக் கற்றுத்தருகிது. ஆபிரகாம் தனக்குள் இருந்த கடவுளோடு ஒன்றி இருந்ததால்தான் ஆண்டவரின் குரலைக் கேட்க முடிந்தது. ஆண்டவரின் வாக்குறுதியையும் பெற இயன்றது. அதே போல இயேசுவின் சிறந்த நண்பராய் விளங்கிய மரியா இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய பொன்மொழிகளைக் கேட்டதால் இயேசுவின் பாராட்டையும் பெற்றார் என வாசிக்கிறோம். ஏனெனில் மரியா இயேசுவின் மனநிலையை உணர்ந்தவராயும் அவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டவராயும் இருந்தார். ஆக நமக்குள் இருக்கும் இறைவனை நாம் உணர அவரோடு எல்லா நேரமும் நாம் ஒன்றித்து இருக்க வேண்டும் என்ற உண்மையை நாம் மரியா மூலம் உணர்கிறோம்.
மாறாக நாம் உலகக் கவலைகளுக்கும் பரபரப்புகளுக்கும் இடம் கொடுத்தால் கடவுளை அறிய வேண்டும் அவரோடு இருக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தும் நம்மால் இயலாமல் போய்விடும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் "உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை நான் தருகிறேன் " எனக் கூறுகிறார். ஆம் அன்புக்குரியவர்களே கிறிஸ்து நமக்குள் இருக்கிறார். எப்போதும் இருக்கிறார். ஆனால் அவரை நாம் உணரத் தவறுகிறோம். பரபரப்புகளுக்கு இடம் கொடுக்கிறோம். அவற்றை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு ஆபிரகாமைப் போல மரியாவைப் போல இறைப்பிரசன்னத்தை நம்மோடும் நமக்குள்ளும் உணர்ந்து வாழ முயலுவோம்.

 இறைவேண்டல் 
எமக்குள் வாழும் கிறிஸ்துவே! நாங்கள் உம்மை உணர்ந்து அனுபவித்து உம்மோடு ஒன்றி வாழ வரமருளும்.ஆமென்

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 14 =