உண்மையான மனமாற்றத்துடன் நான் கடவுளைத் தேடுகிறேனா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 16 ஆம் புதன்; புனித மகதலா மரியா திருவிழா ; I: இ.பா:   3: 1-4; II  : தி.பா: 63: 1. 2-3. 4-5. 7-8; III:  யோவா:  20:1, 11-18

இன்று நமது தாய்  திருஅவை புனித மகதலா மரியாவின் விழாவைக் கொண்டாடுகிறது. இயேசு அவரை ஏழு பேய்களில் இருந்து தூய்மைப்படுத்தினார் (லூக்கா 8: 2 மற்றும் மாற்கு 16: 9) என விவிலியம் சான்றளிக்கின்றது.  கலிலேயாவில் இயேசுவுடன் சேர்ந்து உதவி செய்த பெண்களில் இவரும் ஒருவர் (லூக்கா 8: 1-2), நான்கு நற்செய்திகளும் இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதைக் இவர் கண்டதாக சான்றளிக்கின்றன; யோவான் (19: 25-26), இயேசு சிலுவையில் அறையுண்ட போது  மகதலா மரியா மரியாவுக்கும் இயேசுவின் அன்பான சீடரான யோவானுக்கும் அருகில்   நின்றதாகக் குறிப்பிடுகிறார்.  (மாற்கு 15:47) அதிகாலையில் மற்ற இரண்டு பெண்களுடன் கல்லறைக்குச் சென்று  இயேசுவின் உடலுக்கு நறுமணத்தைலம் பூச சென்றார் . கல்லறை காலியாக இருப்பதைக் கண்டு, மிகவும் வருந்தி  குழப்பமடைந்தார்.  கிறிஸ்து பின்னர் மரியாவுக்குத் தோன்றினார் என பல சான்றுகளை நாம் விவிலியத்தில் காண்கிறோம்.

 மகதலா மரியாவின் விழாவில்  நாம் அனைவரும் வாழ்க்கையில் இரண்டு காரியங்களைச் செய்ய அழைக்கப்படுகிறோம். முதலில் நம்முடைய மனமாற்றத்தில் வலுவாக இருக்க வேண்டும். அன்றைய யூத சமுதாயத்தில்
மரியா பாவியாக கருதப்பட்டார். ஆனால் அவர் மன்னிக்கப்பட்டபிறகு ​​அவர் ஒருபோதும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பவில்லை.  மனம் மாறியபின், அவர் இயேசு சீடர்களில் ஒருவரானார், இயேசு எங்கு சென்றாலும், அவர் பின்னே சென்றார். ஏன் கல்வாரி பயணத்திலும் உடனிருந்தார்.  இயேசுவையும் அன்னை மரியாவையும் தன் உடனிருப்பால் ஆற்றுப்படுத்தினார்.

இரண்டாவதாக நாம் கடவுளைத் தேட வேண்டும். மரியா இயேசுவுக்காக ஏங்கிக்கொண்டிருந்தாள்.  கல்லறையில் இயேசுவின் உடலைக் காணமல் அவர் அழுதார்.  இயேசுவைத் தேட அவர் தயங்கவில்லை.

அவளுடைய உண்மையான மாற்றத்திற்கும் இறைவனை ஏங்கித் தேடும் மனதிற்கும் வெகுமதியாக, இயேசுவின் உயிர்த்தெழுதலின் முதல் சாட்சியாக விளங்கும் பேறு அவருக்குக் கிடைத்தது.

அன்புள்ள நண்பர்களே நாம் அனைவரும் பாவிகள்.  பலவீனமான மனிதர்கள். நாம் கடவுளிடமிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு முறையும் கடவுள் நம்மை மன்னிக்கிறார். எனவே நாம் உண்மையான மன மாற்றத்திற்கான முயற்சியை மேற்கொண்டு அதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த உண்மையான மாற்றம் எல்லா இடங்களிலும் வாழ்வின் எல்லா நேரத்திலும் கடவுளைத்  தேட நம்மைத் தூண்டும். எனவே மகதலா மரியாவிடமிருந்து இப்பண்புகளைக் கற்றுக்கொள்வோம். 

இறைவேண்டல் 

அன்பு இறைவா நாங்கள் உண்மையான மனமாற்றத்தில் நிலைத்திருந்து உம்மையே நாடித் தேட வரம் தாரும். ஆமென்.

Add new comment

8 + 8 =