உண்மையான அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


புனித வெள்ளி; I: எசாயா 52 :13-53:12; II: தி.பா  30: 2,6,12-13,15-17,25; III:எபி 4:14-16,5:7-9; IV : யோவான் 18:18-19:42

இன்று புனித வெள்ளி. நாம் எல்லோரும் இயேசுவின் அகலம், நீளம்,ஆழம், உயரம் காண இயலாத அன்பை ஆழ்ந்து தியானிக்கின்ற நாள். தந்தையின் திருஉளத்தை அறிந்து அவர் தன் மக்கள் மீது கொண்டுள்ள அன்பை தன்னுடய பாடுகளாலும் இறப்பினாலும் மெய்ப்பித்த நாள். இப்படியும் அன்பு செய்ய முடியுமா என நம்மையெல்லாம் ஆச்சிரியத்தில் ஆழ்த்திடும் தினம் இன்று. அனைத்தையும் தாண்டி அவருடைய அன்பின் ஒளியில் நமது அன்பின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்ந்து பார்க்கும் நாள்.

ஒரு ஊரில் கணவன் மனைவி தங்கள் இரு குழந்தைகளுடன்  வாழ்ந்து வந்தனர்.கணவன் மனைவியை விட சற்று அதிகம் படித்தவர். இந்நிலை இவர்களிடைய  சில மனவருத்தங்களுக்கு காரணமானது. மனைவி எவ்வளவுதான் நேர்த்தியாகத் தன் கணவன் மற்றும் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும் கணவனுக்கு ஒரு போதும் மனநிறைவே இல்லை. மற்றவர்கள்  முன் ஏன் தன் பிள்ளைகளின் முன் கூட தன் மனைவியை த் தாழ்த்தி பேசவதுண்டு. அவர் மனம் நோகும்படியான வார்த்தைகளும் செயல்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. ஒரு நாள் அப்பெண் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அமைதியாக அமர்ந்து எதையோ யோசித்துக்கொண்டிருந்தார். கண்களில் சிலதுளிகள் கண்ணீரும் வந்தன. இதைக் கண்ட மூத்த பையன் தன் தாயிடம் வந்து "அம்மா ஏன் அழுகிறீர்கள்? அப்பாவை நினைத்துதானே?  நீங்கள் இவ்வளவு பொறுமையாய் இருக்கக்கூடாது அம்மா "எனக் கூறினான். அதற்கு அம்மா ,"அப்பா தானே திட்டுகிறார். பறவாயில்லை. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அதனால் அவர் திட்டுவதை நான் பெரிது படுத்துவதில்லை " என்று தன் கணவரை விட்டுக்கொடுக்காமல் பேசினார். உடனே மகன் "அம்மா எனக்கு வரும் மனைவியை எவ்வாறு உண்மையாக அன்புசெய்ய வேண்டும் என்பதை உங்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டிருக்கிறேன்" என்று கூறி தன் அம்மாவின் கண்ணீரைத் துடைத்தார்.

ஆம் அன்புக்குரியவர்களே உண்மையானை அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்.இயேசு அதற்கு சிறந்த உதாரணம்.தந்தையின் மீதும் அவருடைய பிள்ளைகளான நம்மீதும் கொண்ட அன்பிற்காக பலவற்றை பொறுத்துக்கொண்டார் இயேசு. வீண்பழி,கசையடி,முள்முடி,அவமானப்படுத்தும் பேச்சுக்கள்,பாரச்சிலுவை, ஆணிகள் தந்த வலி, கரடுமரடான பாதையில் பசியோடும் தாகத்தோடும் களைப்போடும் ஒரு பயணம் என அனைத்தையும் சகித்துக்கொண்டார். தன்னைக் காட்டிக்கொடுத்த சீடனை நண்பா என அழைத்ததையும் மறுதலித்த சீடனை கருணையோடு நோக்கியதை விடவும் உண்மையான அன்புக்கு இன்னும் சாட்சிகள் வேண்டுமோ? 

நம் மத்தியிலும் இயேசுவைப் போல உண்மையான அன்பைப் பிரதிபலிக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குடிகாரக் கணவன்களையும் மகன்களையும்,அவர்கள் தரும் அவமானங்களையும் அடிகளையும்  தாங்கும் பெண்கள் நம் மத்தியில் ஆயிரம். தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் கூட மன்னித்து ஏற்றுக்கொண்டு அதே அன்போடும் பொறுமையோடும் தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் கணவன் மனைவிகள் ஏராளம். எவ்வளவு தான் கசப்பான அனுபவங்களைத் தந்தாலும் உயிரைக் கூடத் தரும் நண்பர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள். சண்டை போட்டு பேசாமலும் பழகாமலும் இருந்தால் கூட பிரச்சனை என வந்தால் உடனே ஓடி வரும் உடன் பிறப்புகளும் உண்டு.இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

 இயேசுவின் உண்மையான அன்பை நாம் சிந்தித்துக் கண்ணீரில் மூழ்கினால் மட்டும் போதாது. என்னுடைய வீட்டில்,பணித்தளத்தில், நண்பர்கள் மத்தியில் நான் உண்மையான அனைத்தையும் பொறுத்துக் கொள்கின்ற அன்பு உடையவராக இருக்கின்றேனா என சிந்தித்துப் பார்த்து அதன்படி வாழ முயல வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேட்டுப்பார்ப்போம். என் அன்பு எப்படிப்பட்டது? அதில் உண்மை இருக்கிறதா?  என் அன்பு  வலிகளைப் பொறுத்துக் கொள்கிறதா? 
இயேசுவைப் போல உண்மையாக அன்பு செய்ய வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல்

எங்களை உண்மையாக அன்புசெய்யும் இயேசுவே நாங்களும் உம்மைப்போல் உண்மையாக அன்புசெய்யவும்,அதனால் வரும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்ளவும் அருள் தாரும். ஆமென்.

Add new comment

13 + 6 =