இறைவார்த்தையின் படி வழிநடப்போமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலம் 34 ஆம் வெள்ளி
I : தானி: 7: 2-14
II: தானி 3: 68, 69, 70, 71, 72, 73, 74
III : லூக்:  21: 29-33

நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது   எனக்கு மேடைப்பேச்சு என்றால் பயமாக இருக்கும். ஆனால்  ஒரு முறை இஸ்லாமிய ஆசிரியர் ஒருவர் என்னை உற்சாகப்படுத்தினார். அவருடைய வார்த்தைகள் எனக்கு துணிச்சலையும் ஊக்கத்தையும் தந்தன. முதன் முதலாக பேச்சுப்போட்டியில் பங்கெடுத்து பரிசினைப் பெற்றேன். அந்த நாள் முதல் ஒவ்வொரு போட்டியிலும் பங்கெடுத்து பரிசு பெற்றேன்.அவருடைய வார்த்தைகள்தான் என்னுடைய பயத்தை எல்லாம் போக்கின. ஊக்கத்தையும் ஆக்கத்தையும் ஆற்றலையும் தந்தன. 

என்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வைப் போல நல்ல வார்த்தைகள் நல்ல மனிதர்களை உருவாக்குகின்றன. தீய வார்த்தைகள் தீய மனிதர்களை உருவாக்குகின்றன.மனித வார்த்தைகளைவிட  ஆண்டவரின் வார்த்தைகள் நம்மை அவரின் வருகைக்காக  ஆயத்தப்படுத்தவும் நேரிய வழியில் வழி நடக்கவும் மீட்பினைப் பெறவும் உதவுகின்றதன.  

இயேசு இன்றைய நற்செய்தியில் காலத்தின் அறிகுறிகளை அறிந்து இறைவார்த்தை மீது ஆழமான நம்பிக்கை கொள்ள  அழைப்பு விடுகிறார். பாலஸ்தீன நாட்டில் அத்திமரம் பரவலாக இருக்கக்கூடியது ஆகும். இயேசு "அத்திமர உவமை" கூறியதற்கு காரணம் அத்திமரம் வசந்தகாலத்தில் தளிர்விடும். அவை தளிர்விட்டால் விட்டால் விரைவில் காய்த்து பலன் தரும்.   இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள இயன்ற அறிவுள்ள யூதர்களால் இயேசுவின் வார்த்தைகள் வழியாகத்தான் மீட்பு உண்டு என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை எனவேதான் ஆண்டவர் இயேசு அத்திமர உவமையைப் பற்றி  கூறியுள்ளார். இந்த உலகமே அழிந்து போனாலும் " வார்த்தைகள் ஒழியவே மாட்டா" என்று ஆண்டவர் இயேசு கூறியதற்கு காரணம்   அவர்கள் இறைவார்த்தையை முழுவதும் நம்பி மீட்புப் பெற வேண்டும் என்பதற்காகவே.

கடவுளின் வார்த்தை நமக்கு வாழ்வு தருகின்றது. கடவுள் தரும் வார்த்தையின் வல்லமையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. யாராலும் முறியடிக்க முடியாது. இந்த உலகமே அழிந்து போனாலும் அவரின் வார்த்தை ஒரு போதும் அழியாது. இவையெல்லாம்  நாம் கடவுள் தரும் படிப்பினையையும் மகிழ்ச்சியையும் நிறைவாக அனுபவிக்க இறைவார்த்தையைக் கேட்டு,  ஆழ்ந்து தியானத்து, அதை அனுபவித்து நம்மை இரண்டாம் ஆயத்தப்படுத்த அழைக்கப்படுகிறோம் என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

எனவே இறைவனுடைய வார்த்தைகளை நம் உள்ளத்தில் எழுதி நம் வாழ்வாக்குவோம். அவருடைய வார்த்தைகள் நம் பாதைக்கு விளக்காகி நல் வழி காட்டி நம்மை இறைவருகைக்கு ஆயத்தப்படுத்துவதோடு அவர் வழங்கும் மீட்பையும் பெற்றுத்தரும். இறைவார்த்தையின் படி நடக்கத் தயாரா?

இறைவேண்டல்

அன்பு இறைவா! உமது உயிருள்ள மீட்பளிக்கும் வார்த்தையின் படி வாழந்து உம் வருகைக்கு எங்களையே தயார் செய்ய வரமருளும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 0 =